Header image alt text

News

Posted by plotenewseditor on 21 May 2013
Posted in செய்திகள் 

13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசிற்கு கிடையாது : இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு
  Left party
 அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான திரு.வாசுதேவ நாணயக்கார மற்றும் திரு.திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஹெல உறுமயவின் பிரேரணைக்கு தலைசாய்க்கப் போவதில்லை: மலையக கட்சிகள் திட்டவட்டம்
 
parliamentதமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்க்கதரிசமான நோக்கத்தோடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். அதனூடாக இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் அனுமதியோம். இனவாத கொள்கைகளுக்கு தலைசாய்க்கப்போவதில்லை என பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
அரசியல் அமைப்பு 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன மேற்கண்டவாறு தெரிவித்தன.
இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கான தீர்வுகளுக்காவும் ஏனையோரைப்போன்று சமவுரிமை உரித்துடையவர்களாக வாழ்வதற்கு எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். இந்த உண்மையை மறைத்து இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று எவராலும் கூறிவிடமுடியாது என்றும் மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான திரு.முத்து சிவலிங்கம் கூறுகையில்,

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு மாறாதாததாகும். 13 ஆவது திருத்தத்தையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையும் நாம் பூரணமாக ஏற்றுக்கொள்வதால் அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பது எமது நோக்கமாகும்.
இவ் விவகாரம் தொடர்பில் சிறுபான்மைக்கட்சிகள் இணைந்து பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன. இந்த குழுவும் அமைச்சர்களும் அடங்கியிருந்தனர். இக்கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் 13 வது திருத்தத்தின் அவசியம் குறித்து ஒரே நிலைப்பாட்டில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவோ அல்லது அதற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விடயங்களுக்கு ஆதரவாகவோ ஒருபோதும் செயற்படாது. அத்துடன் திருத்தச்சட்டம் உள்ளவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் அதில் மாற்றங்களும் தேவையில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.வீ.இராதாகிருஷ்ணன் கூறுகையில்,

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது இந்நாட்டுக்கு அதுவும் தமிழ் மக்களுக்கு மிகமிக அவசியமாகும். ஆகவே அதற்கு எதிராக எத்தகைய நிலைப்பாடுகள் இருந்தாலும் அதனை மலையக மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் அவர்களுக்கு விமோசனமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்க்கதரிசன அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ்காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜெ.ஆர்.ஜயவர்தனவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருநாட்டின் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் ஊடாக மாகாணங்களுக்கான அதிகாரம் உள்ளிட்ட விடயங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஜாதிக ஹெல உறுமயவினால் கொண்டுவரப்படவிருப்பதாக கூறப்படுகின்ற மேற்படி பிரேரனை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இழிவுபடுத்தும் ஒரு செயற்பாடாகும். அதற்கு நாம் துணைபோக தயாரில்லை. மேலும் தமி்ழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி 13 வது திருத்தச்சட்டமேயாகும். ஆகவே ஹெல உறுமயவின் வாதத்தை அல்லது அவர்களது நியாயத்தை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றார்.

 
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.பி.திகாம்பரம் கூறுகையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள அரசாங்கம் நினைத்தால் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஏனெனில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் கடமைபட்டிருக்கின்றது. ஆகவே இந்த திருத்தத்தை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்.

இத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் ஹெல உறுமய போன்ற கட்சிகள் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதில்லை. எப்படியிருப்பினும் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை நாம் ஏற்கத்தயாரில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம் என்றார்

News

Posted by plotenewseditor on 21 May 2013
Posted in செய்திகள் 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை

sivasakthiதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான விசாரணை 12.15 வரையில் தொடர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார். கடந்த  வருடத்தில்  வவுனியா  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட இலக்கங்களின்படி சிவசக்த்தி ஆனந்தனுக்கு அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், சிவசக்தி ஆனந்தனிடமிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அதிகாரிகள் அவை தொடர்பாக சிவசக்தி ஆனந்தனிடம் விளக்கம் கேட்டனர். இதன்போது எவ்வாறான விஷயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த ஆனந்தன், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும் தனது இலக்கம் பலக்குத் தெரியும். அதேவேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் தான் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார். இதனைவிட கைதிகள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டால், கைதிகளுடைய நலன்கள், வழக்கு விவகாரங்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப விடயங்கள் தொடர்பாகவே பேசிக்கொள்வதாகவும், அதனைவிட அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பேசிக்கொள்வதில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் விளக்கமளித்தார். அதேவேளையில், கைதிகள் சிலர் தொடர்பு கொள்ளும் போது அவர்களது தொலைபேசியில் பணம் இல்லாத நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு தான் மனிதாபிமான அடிப்படையில் அழைப்பு எடுப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Hekeemமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு  மு.கா.வின் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அச் சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இச் சந்திப்பில் மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர், பாரூக் முத்தலிப்பாவா எம்.பி., பைஸல் காசிம் எம்.பி. உட்பட கட்சியின் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இன்று மு.கா. அரசின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில்  இருந்தபோதும் மு.கா. ஆதரவாளர்கள்  புறந்தள்ளப்படுகின்றனர். இந்நிலையினை இன்னும் தொடர விடக் கூடாதென மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனவே, நடைபெறவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நலனை முன்னிப்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மு.கா. உரிய தரப்பினருடன் இணக்கப்பாட்டோடு இணைந்து போட்டியிடுவதற்குத் தயார் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மு.கா. எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் சஜித் பிரேமதாச 
  
sajithமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் தமது தந்தை இவ்வாறு ஒரு பகுதியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாத்தய்யா பிரிவினருக்கு ஜனாதிபதி பிரேமதாச இந்த ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தமது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்க எதிராக கிளர்ச்சி செய்யத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் மாத்தய்யாவின் தலைமையிலான குழுவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்திய உளவுத் துறையான றோவிற்கு புலிகளின் ரகசியங்களை கசிய விட்டதன் காரணமாக பின்னர், பிரபாகரனினால், மாத்தய்யா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் அரச பாடசாலைகளாக 74 பாடசாலைகள் இயங்குகின்றன.

schule52 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 22 சிங்கள மொழிப்பாடசாலைகளும் என இவ்வாறு இயங்குகின்றன. வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டதாகச் செயற்படும் பாடசாலைகள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தில் 44 பாடசாலைகள் இவ்வாறு உள்ளன. இப்பாடசாலைகளில் 43 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும் அடங்கும்.வவுனியா மாவட்டத்தில் 34 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 தமிழ் மொழிப் பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 03 தமிழ் மொழிப்பாடசாலைகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் கண்டி மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 07 சிங்கள மொழிப் பாடசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் காலி மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப்பாடசாலையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தமிழ் பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் 02 தமிழ்மொழிப் பாடசாலைகளும் குருணாகல் மாவட்டத்தில் 01 சிங்களப் பாடசாலையும் அநுராதபுரம் மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப் பாடசாலையும் பதுளை மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப்  பாடசாலையும்  இரத்தினப்புரி  மாவட்டத்தில் 1 சிங்களமொழி பாடசாலையும் 3 தமிழ் மொழிப் பாடசாலையும் கேகாலை மாவட்டத்தில் 04 சிங்களப் பாடசாலைகளும் செயல்படுவதாக கல்வி அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும்

mujeeவடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். இந்த நாட்டை யாரும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாதென்று தெரிவிக்கும் ஜனாதிபதி, சீனா, இந்தியா  மற்றும்  பாகிஸ்தான்  போன்ற  நாடுகளுக்கு  துண்டுதுண்டுகளாக கூறு போட்டு நாட்டின் காணிகளை விற்றுள்ளார். இந்நிலையில்  வடக்கில் தமிழ், முஸ்லிம்  மக்களின்  காணிகள்  இராணுவத்தினரை பயன்படுத்தி  அபகரித்த  அரசாங்கம், தற்போது  கிழக்கிலும் இதனை மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி  நிலவுகின்றது. குறிப்பாக  கிழக்கில் புல்மோட்டையில் மக்களின் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுமானால் நாடு இன்னுமொரு யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்  ராஜகிரியவில் இன்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து வவுனியாவில் பேரணி-

சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, கண்டி வீதி பௌத்த விகாரைக்கு முன்பாகவிருந்து ஆரம்பமான இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தை அடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்று அரசசார்பற்ற பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட மேலதிக அரசஅதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் ஒப்படைத்ததுடன், வவுனியா மாவட்டத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கும் மகஜரொன்றை கையளித்துள்ளனர். சர்வோதயம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலரும் பங்கேற்றிருந்தனர். 
 
காணி சுவீகரிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானம்-

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கை யாழ்ப்பாணத்தின் ஆயிரத்து 474 பொதுமக்கள் தாக்கல் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை மீட்குமாறு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே, கடந்த 1974ஆம் மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். கச்சதீவை மீட்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்திலும்; வழக்கும் தொடரப்பட்டது. மேலும் கச்சதீவை மீட்க வலியுறுத்தி, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கச்சதீவை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய பகுதியான கச்சதீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சதீவை மீட்டபிறகு சர்வதேச கட்சார் எல்லைக்கோடு பகுதியை மீண்டும் வரையறை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
     
பஸ் விபத்தில் பலர் காயம்-

யாழ்ப்பணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்றுஅதிகாலை நுவரெலியாவின் றம்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. றம்பொட, புளுபீல்ட் தோட்டத்திற்கு அருகாமையில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

News

Posted by plotenewseditor on 20 May 2013
Posted in செய்திகள் 

19.05.2013;
 
பொதுநலவாய அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டும்-மாலைதீவு-

maledivenபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டுமென  மாலைதீவு கோரியுள்ளது. பொதுநலவாய  நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை வேறு நாட்டுக்கு மாற்றவேண்டிய தேவையில்லை என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சமாட் அப்துல்லா தெரிவித்துள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் காரணமாக இலங்கை மக்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இவ்வாறான  ஓரு பின்னணியில்  இலங்கைக்கு  எதிராக தண்டனை விதிக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாலைதீவு  ஏற்றுக்கொள்ளாது. பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அப்துல் சமாட் அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் சீன விஜயம்-

sri chinaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை அன்று சீனாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு  இரு நாட்கள்  தங்கியிருப்பார்  என ஜனாதிபதியின்  பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது..
 
இலங்கை அரசுமீது வலுவான அழுத்தங்கள் அவசியம்-எரிக் சொல்ஹெய்ம்-

solhaimயுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கைமீது மேலும் வலுவாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் 4ஆவது ஆண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடியது. தேசிய யுத்த வெற்றி விழா என நாடளாவிய ரீதியிலும் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாகவிருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, வலுவான அழுத்தங்கள் தொடர்ந்தும் தேவை என எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இந்திய மீனவர்கள் இன்று விடுதலை-

india fischerஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் காரைக்கால் மீனவர்கள் 26 பேரே விடுதலை செய்யப்படவுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அவர்களை மீட்குமாறு பிரதமர், வெளியுறவமைச்சர், இலங்கை தமிழ் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில், இலங்கை கடற்படை கைதுசெய்த காரைக்கால் மீனவர்கள் 26பேரும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர். என நாராயணசாமி மேலும் கூறியுள்ளார். 
 
தாண்டிக்குளத்தில் இறந்த மூன்று பிள்ளைகளின் தந்தைமீது தாக்குதல்-

welவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17ம் திகதி பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலைசெய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தைமீது இளைஞர்குழு நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்படி பிள்ளைகளின்; தாயார் வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மூன்று பிள்ளைகளின் இறுத்திச்சடங்கு தாண்டிக்குளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இடம்பெற்றது. இந்நிலையில் இப் பிள்ளைகள் இறப்பதற்கு வறுமையும் தந்தை வேறு ஓர் பெண்ணை திருமணம் செய்து சென்று இக் குடும்பத்தை ஆதரிக்காமையுமே காரணமென இக்கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த மூன்று பிள்ளைகளின் இறுதிச்சடங்குகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயாத்தில் இடம்பெற்ற பின்னர் இளைஞர்கள் பிள்ளைகளின் இறப்புக்கு தந்தையின் நடத்தையே காரணமென தெரிவித்து தந்தையான விஜயகுமார்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரஸ்யா இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை நன்கொடை-

heliஎட்டு பெரிய ஹெலிகொப்டர்களை முழு அளவிலான நன்கொடையாக ரஸ்யா இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஸ்ய மத்திய முகவர் நிறுவனத் தலைவர் கொன்ஸ்டாடின் கொச்சேவ் இதனை அறிவித்துள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்போ 2020 கண்காட்சியை ரஸ்யாவில் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கொச்சேவ் தெரிவித்துள்ளார். இக் கண்காட்சியின் ஒழுங்கமைப்பு உரிமையை பெற்றுக் கொள்வதற்கு 162 நாடுகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கண்கட்சியை ரஸ்யாவில் நடத்துவதன் மூலம் இலங்கைக்கும் பல்வேறு பொருளாதார நன்மைகள் கிட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் அரசாங்கம் கண்காணிப்பு-

chogmகனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம்  அறிவித்துள்ளது. பொதுநலவாய  நாடுகளின்  தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள்  கிடைக்கப்  பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் துப்பாக்கிகள் மீட்பு-

waffenஅம்பாறை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

வாகரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுறண்டும் மீனவர்கள்-

fisch boatமட்டக்களப்பு, வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் மீனவர்கள்  கவலை  வெளியிட்டுள்ளனர். கடல்  அட்டைகளை  பிடிப்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். புத்தளம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே இது தொடர்பான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாயுச் சிலிண்டர்கள், சக்திவாயந்த டோர்ஜ் லைட் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி இத்தொழிலில் அவர்கள் ஈடுபடுவதால் கரையோரத்தை நாடும் மீனினங்கள் கலைந்து விடுகின்றன. அதனால் கரையோர மீன்பிடித் தொழிலே அநேகமாகப் பாதிக்கப்படுகின்றது என அப்பகுதி மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். 
 
பங்களாதேஷ் பிரஜைகள் நாடு திரும்பல்-

banglaநாட்டின் கிழக்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் 61 பேர் நேற்று நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இக் குழுவினரில் 60 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்தின்  குடிவரவு, குடியகல்வு  பிரிவின்  உயரதிகாரி  ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த  பெப்ரவரி  மாதம்  ஒலுவில்  மீன்பிடி  துறைமுகத்துக்கு அருகிலிருந்து இக் குழுவினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதின் பின்னர் அவர்கள் பூசா மற்றும் மிரிஹான தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். மலேசியா அல்லது வேறொரு நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள் கணக்கெடுப்பு-

picture-165மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்த தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார். இக் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை 6மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலில் ஏற்பட்ட மரணங்கள்,  இடம்பெயர்வுகள், காணாமற்போதல் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. நடவடிக்கை குழுவொன்றின் ஊடாக வினா கோப்பை தயாரித்து அடுத்த மாதம் கணக்கெடுப்பை ஆரம்பிக்கவுள்ளதாக டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கு தோறும் சென்று தகவல்களை திரட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிராம உத்தியோகத்தர்களை கணக்கெடுப்பு அதிகாரிகளாக பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என திணைக்களம் கூறியுள்ளது.

News

Posted by plotenewseditor on 19 May 2013
Posted in செய்திகள் 

19.05.2013
 
அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தை கூடாது-மல்வத்தைபீட மகாநாயக்க தேரர்-

13

 வட மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடாது என மல்வத்தைபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்கேடிஎஸ் குணவர்தன, மகாநாக்க தேரரை சந்தித்தபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை, 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக லங்கா சமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும், 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வருவதாயின் அது தொடர்பில் சகல கட்சி தலைவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ வித்தாரன சுட்டிக்காட்டியுள்ளார். 
 
உலக மகா யுத்த நூறாம் ஆண்டு நிகழ்வில் இலங்கைக்கு அழைப்பில்லை-

world war

பிரித்தானியா கிளாஸ்கோவில் அடுத்த வருடம் உலக மகா யுத்தத்தின் நூறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைப் பிரதிநிதிகளை பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என ஸ்கொட்லாந்து சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இடம்பெறுவதாக தெரிவித்தே அந்த அமைப்புகள் இந்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. 
 
வடக்கு மாகாண தேர்தல் குறித்து ஹெல உறுமையவின் எச்சரிக்கை-

jaffna districtsவடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் வீதியில் இறங்கி போராடப்போவதாக தேசிய சுதந்திர முன்னணி எச்சிரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் அதுரலிய ரத்ண தேரர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து வடக்கில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இலங்கை மாணவனின் கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவில் பரிசு-

Arizonaஅமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் மின்சார மற்றும் இயந்திர சாதன உற்பத்தியில் புதிய உற்பத்திக்கான பரிசினை அநுராதபுரம் மிஹிந்தலை மகா வித்தியாலய மாணவன் புபுது கபுகே சுவீகரித்துள்ளார். வயல் வரப்புகளை அமைப்பதற்கான இயந்திரத்தை தயாரித்தமைக்காகவே இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிசு வழங்கும் நிகழ்வில் இந்த இயந்திரத்தை தயாரித்தமைக்காக அவருக்கு 3ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு விருது வழங்கும் விழாவிலும் கபுகேவின் இந்த படைப்பிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பேர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செல்வராஜா கஜேந்திரன் பிணையில் விடுதலை-

மன்னாரில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செல்வராஜா கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். மன்னார் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட 9 பேர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையொன்று தொடர்பில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் ; விடுவிக்கப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப்Nபுச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 
 
வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்-கபே-

CAF-footer_logo_smlஎதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின்போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
காத்தான்குடி கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்-

fishமட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடாவை அண்டிய காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில்  கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது. குறித்த பாழ்வத்தோடையில்; சிறிய ரக மீன்கள் ,றந்து மிதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதுதான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய, சிறிய மீன்கள் இறந்து ஒதுங்கியுள்ளன. 
 
யுத்த வெற்றி விழாவில் காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு-

Lk milttriகொழும்பு, கொள்ளுப்பிட்டி  கடற்பரப்பில்  நேற்று  நடைபெற்ற  யுத்த  வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் காணாமல்போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலம் மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் படகில் இருந்த இரு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 

பொதுபல சேனாவின் கருத்துக்கு கண்டனம்-

Bodu_bala sanaஇலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன், இவ்வாறான அறிவிப்பு இலங்கை அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன் எமது சட்டங்களை மீறும் நடவடிக்கையுமாகும். எனவே இவ்வாறான பிரசாரங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. மன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களம் மட்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால் தான் கடந்த சில தசாப்த காலமாக நாடு அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது. இத்துடன் பௌத்தம் மட்டும் என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டால் நாட்டின் நிலை மேலும் மோசமடையும் என்பது உறுதி. இதை உணர்ந்து ஜனாதிபதி, பிரதம எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகலரும் இவ்வாறான அபாயகரமான பிரசாரங்களுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 யாழில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு-

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர். இவ் இரு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. யாழ். சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவேளை தெல்லிப்பழைப் பகுதியில் மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விஜியராசா சோபிதா (வயது 33) என்ற பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு-

fig-17முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வைபவங்கள் வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தின் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் இன்றுமாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக தீபங்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மதப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு தீபங்கள் ஏற்றி வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வுகளில் 100 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.

News

Posted by plotenewseditor on 18 May 2013
Posted in செய்திகள் 

18.05.2013

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிப்பு-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது உயிர்நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனந்தெரியாதோரால் இடித்து அழிக்ககப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் அறிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.

வட மாகாணசபைத் தேர்தலில் 721,488 பேர் வாக்களிக்க தகுதி:-

வட மாகாணசபைத் தேர்தல் 2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இத்தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேர்  தகுதியுடையவர்களாக உள்ளனர் எனவும் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னாரில் 70, 085 வாக்காளர்களும், வவுனியாவில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 59,409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721,488 வாக்காளர்களாக பதிசெய்துள்ளனர். யுத்த காலப்பகுதியல் உயிரிழந்த மற்றும் காணாமல் போனாவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பெயர் விபரங்களும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டு வந்தன. 2012ம் ஆண்டு வாக்காளர் பதிவு மேற்கொள்ளும்போது அனைவரது விபரங்களும் சரியான முறையில் ஆய்வுசெய்து பதிவேற்றப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.  
 
72 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரமே கண்ணிவெடி அகற்றப்பட வேண்டும்

ருவன் வணிகசூரிய- வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவப்பேச்சாளர்  ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணிமூலம் இதுவரை வடக்கில் 1345 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள், மிதிவெடிகள், யுத்த தாங்கி அழிப்பு வெடிகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-

யாழ் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பிiனைப் பலப்படுத்தியுள்ளனர. இதன்படி அப்பகுதியில் பெருமளவு பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுக்காலை இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதாகவும், நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும், பேராசிரியர்கள் சிலரும் தீபமேற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
 
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் எஞ்சிய பகுதிகளுக்கு தேர்தல்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் இனறுவரை நடத்தப்படாதுள்ள பதுக்குடியிருப்பு, கரைந்துறைப்பற்று ஆகிய இரு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அனுமதி கிடைத்தவுடன் உடன் நடத்தமுடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக அங்கு தேர்தல்களை நடத்த முடியும். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டே உள்ளது. வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றி ஜனாதிபதியே தீர்மானிப்பார் என எம்.எம்.மொஹமட் மேலும் கூறியுள்ளார். 
  
யுத்தவெற்றி கொண்டாட்டத்தின்போது கடற்படை படகு மூழ்கியது-

யுத்த வெற்றி கொண்டாடத்தின்போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி படகு மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன்போது படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
13ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்:-இந்தியா

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நீக்குவதற்கு இலங்கை கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள இந்தியா,  13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவமைச்சர் சல்மான் குர்ஷித்தே இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியபோதே சல்மான் குர்ஷித் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 
 
ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுமுன் ஆஜர்-

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைகுழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளர். சொத்துக்கள் குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று ஆணைக்குழுமுன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் பணியாளர் நாயகம் லமி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்ததாக அவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்தூவஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Untitled Post

Posted by plotenewseditor on 18 May 2013
Posted in செய்திகள் 

17.05.2013

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு

விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. 18.05.2013 சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வெற்றிவிழாவில் இராஜதந்திரிகள், மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை 9 மணியளவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வெற்றிவிழாவில் உரையாற்றவுள்ளார். விழாவில் முப்படையினரது அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் விமான சாகசங்களும் இடம் பெறவுள்ளன. 12 ஆயிரத்து 700 படைவீரர்களும் 945 அதிகாரிகளும் விசேட அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த வெற்றிவிழா குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:- இராணுவத்தின் இந்த வெற்றிவிழாவை பார்வையிடுவதற்கு அனைத்து இன மக்களும் வரவேண்டும். அதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வெற்றிவிழாவை முன்னிட்டு கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டிருக்கும். இறுதி யுத்தத்தில் அங்கவீனமான 100 வீரர்களும் விசேட அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.
இன்றைய விழாவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ , பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் எம்.கே. இளங்கக்கோன், உட்பட முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொள்வார்கள்.
அணிவகுப்பில் இராணுவத்தினரின் 100 தாக்குதல் வாகனங்களும், 50 போர் கப்பல்களும், 30 தாக்குதல் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு-பொதுபல சேனா-

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. இங்கு இயங்கும் சர்வமத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும் என அவர் கூறியுள்ளார். 

லொறி கவிழ்ந்து படைவீரர் பலி, 18 படையினர் காயம்-

மன்னார் செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கோப்ரல் உயிரிழந்ததோடு 18 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றுகாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 படையினர் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 படையினர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 6,170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்க்கை– கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6ஆயிரத்து 170ற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் நண்பருக்கு சிறை- புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை நண்பரும், பிரபல புலி உறுப்பினருமான குணரத்னம் ஜெயசுந்தரத்திற்கு, கொழும்பு மேல்நீதிமன்றம், 15மாத கடூழிய சிறைத்தண்டயை நேற்று அறிவித்துள்ளது. 15 குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் ஒரு குற்றச்சாட்டுக்கு ஒருமாதம் என்ற அடிப்படையில் அவருக்கு 15 மாதகால சிறைத்தண்டனையை நீதவான் விதித்துள்ளார். சிறைத்தண்டனை நிறைவடைந்ததும், ஒரு வருடங்கள் புனருத்தான நடவடிக்கைகளிலும் அவரை ஈடுப்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். தான் புலிகளுக்கு தேவையான இராணுவு தளபாடங்களை வன்னிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாகவும் புலிகள் அமைப்பிற்காக கப்பல் ஒன்றை கொள்வனவு செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்.

ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.    இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்காண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைச் செய்துள்ளனர். ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றப்படியால். ஆகவே இவ்வாறானதொரு தடைச் செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவுக்கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள், அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும். இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும் அந்தவகையில் அம்பாறை, திருகோணமலை, வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும், பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம். அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சடலமாக மீட்பு- நுவரெலியாவில்

கடந்த 13ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா நகரத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பொன்றில் வெள்ளநீர் புகுந்ததில் ஆற்று வெள்ளத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட 40 வயதுடைய கமலேஸ்வரி என்ற பெண்ணின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கரையொதுங்கிய நிலையில் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. இப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது வயோதிபர் பெண்ணொருவர் ஒருவரும் 7 வயது சிறுமியொருவரும் கடந்த 13ம் திகதி வெள்ளத்தில் ழுழ்கி உயிரிழந்திருந்தனர். இதேவேளை கடந்த 13ம் திகதி லிந்துலை ரட்ணகிரி தோட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 70 வயதுடைய ராமசாமி கிருஸ்ணன் என்பவரின் சடலம் இன்றுபிற்பகல் 1மணியளவில் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் தலவாக்கலை சுமண சிங்கள பாடசாலைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி நுவரெலியாவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் இந்திய வெளியுறவமைச்சர் பேச்சு-

தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நவம்பர் முதல் இலங்கையில் சிறையிலுள்ள மேலும் 5 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கேட்டுள்ளார். மேலும் இலங்கையின் வடபகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மற்றும் இந்திய-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம்-

ஐ.நா அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐ.நா அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸே இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
  
அமெரிக்கத் தூதுவர் கூட்டமைப்பினர் சந்திப்பு- ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசெனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிசெல் சிசென் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு பிரதிநிதிகளை கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது வடமாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரின் கருத்தினை அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
    
கூட்டமைப்பு எம்.பி ஆனந்தன் விசாரணைக்கு அழைப்பு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பில் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 4 ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. காரணம் எதுவும் குறிப்பிடாது இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
மட்டக்களப்பில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு- மட்டக்களப்பு  பாலமீன்மடு பிரதேசத்தில் ஒரு தொகுதி வெடிபொருள்களும், மினி கன்னி வெடிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 கைக்குண்டுகளும், 11 மினி கன்னி வெடிகளுமே மீட்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் மட்டக்களப்பு பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தூதுவர் திருமலைக்கு விஜயம்-

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஜெனரல் காசி குரேசி நேற்று திருமலைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜிட் மற்றும் அரச அதிபர் மொஹான் விஜேவிக்ரம ஆகியேர்ரைச் சந்தித்துள்ளார். பின் அவர் திருமலை துறைமுகத்தையும் திருமலையில் பாகிஸ்தானிய நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து 58 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இவ்வாறு இரு தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்;ட்மாதம் முதல் இதுவரை 1131 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இதில் 920 பேர் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போருக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்காது என்பதே இவ்வாறான நாடு கடத்தல் உத்தரவுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும் செய்தி என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார்.
 

 

News

Posted by plotenewseditor on 14 May 2013
Posted in செய்திகள் 

14.05.2013.

எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து உள்ளன-கபே-

இலங்கையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. தேர்தல்களில் போட்டியிடுவது மாத்திரமே எதிர்க்கட்சிகளின் கடமையாகாது என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் நிலவும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான மக்களின் எதிர்ப்பைக்கூட சரியான முறையில் எதிர்க்கட்சிகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கங்களுக்காகவே செயற்படுகின்றன. இந்நிலையில் சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புக்களின் ஊடாக போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என கீர்த்தி தென்னக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீருக்காக அலையும் ஒட்டுசுட்டான் பேராறு மக்கள்-

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தில் குடிதண்ணீர் தேடி மக்கள் அலைந்து திரிவதாக தெரியவருகின்றது. பேராறு கிராமத்தில் வசிக்கும் அநேகமானோர் விவசாயத் தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் காணிகளுக்கும் உரிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இங்கு ஏற்கனவே உள்ள குழாய்க்கிணறுகள் பழுதடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீரைத் தேடி நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய அவலநிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர்ப் பிரச்சினையை சீர்செய்ய வேண்டுமென்று இம்மக்கள் கேட்கின்றனர். 

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் 2000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் சரத் லால்குமார தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 704 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்;டுள்ளனர். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் இருவர் காணாமற்போயுள்ளனர். 18 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சுமார் 500வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 239 குடும்பங்களைச் சேர்ந்த 970பேர் நான்கு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.

மின் கண்டன உயர்வுக்கு எதிராக நடைபயணம்-

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வர்த்தக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து நாளை நடைபயணம் ஒன்றில் ஈடுபடவுள்ளன. இந்த நடைபயணத்தில் வர்த்தக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசன நீர்வள மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, மின் கட்டணத்தை குறைக்கும் பட்சத்தில் மின்சார சபையை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்

வெளிநாட்டு மாணவர்களுக்கு 1292 வெற்றிடங்கள்-

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1,292 வெற்றிடங்கள் நிலவுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 5 வீதமான இடம் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவ, விஞ்ஞான கற்கைநெறியை விடுத்து ஏனைய கற்கைநெறிகளுக்கு வெளிநாட்டுத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டு மாணவர்களோ விண்ணப்பித்துக் கொள்ளாமையே வெற்றிடம் ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்; உத்தியோகத்தர்கள் 14பேருக்கு இடமாற்றம்-

கொழும்பை அண்மித்துள்ள பாதுக்க பொலிஸ் நிலையத்தின் 14 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது மக்கள் சேவையில் செயற்திறனற்று இருந்தமையைக் கருத்திற்கொண்டே இந்த உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். இடமாற்றம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுள் பாதுக்க விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும், மூன்று மகளிர் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக மேற்படி பொலீஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உகண்டாவில் தூதுவராலயம்; திறந்துவைப்பு-

உகண்டாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறந்துவைத்துள்ளார் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இந்த உயர்ஸ்தானிகராலயம் நேற்றையதினம் முதல் செயல்படுவதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக இணைப்பாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார் உகண்டா மற்றும் இலங்கைக்கு இடையேயான ராஜதந்திர நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்ததென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உகண்டாவின் யோவேரி கக்குட்டா முசவேனியும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

News

Posted by plotenewseditor on 14 May 2013
Posted in செய்திகள் 

 

plot T.Sதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (12.05.2013)தமிழ் தந்திக்கு வழங்கிய செவ்வி

வெளிநாடு ஒன்றில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியா பறித்தமையே எமது இயக்கம் பலவீனப்படுவதற்கு காரணம்
‘புளொட்டினால் வெளியிடப்பட்ட ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல் இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும் புளொட்டின் ஆயுதப்போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் எமது பின்னடைவிற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது.’

கேள்வி:- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழ்தேசியக்கூட்டமைப்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை ஊடகங்களில்  கூட  வெளிவந்திருக்கின்றன. அவை  கொள்கையின்  அடிப்படையில் ஏற்பட்டிருக்கின்ற  முரண்பாடுகள்  அல்ல. அவை  நடைமுறையில்  ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளாகவே  காணப்படுகின்றன. எமது  கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டுவருடங்களிற்கு  முன்னதாக  கடந்த  உள்ளூராட்சி சபைத்  தேர்தலுடனேயே கூட்டமைப்புடன்   இணைந்துகொண்டோம். தமிழ்  மக்களின்  ஒற்றுமையை பிரதிபலிக்கவேண்டும் ஒரு பலமான கூட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்ம் என்ற ஒரேயொரு நோக்கத்துடனேயே இணைந்துகொண்டோம். நாங்கள் தனிப்பட்ட எந்த ஒரு விடயத்தையும்  முன்வைத்திருக்கவில்லை. குறிப்பாக  தேர்தலில்  கூட  எமக்கு வேட்பாளர்கள்  இத்தனை பேர் வேண்டும். பல இடங்களில்  போட்டியிடவேண்டும் என நாம் பெரியளவில்  கோரியிருக்கவில்லை. அவர்கள்  கூட  அதனை  தரவுமில்லை. கூட்டமைப்பினுள்  ஒரு ஒற்றமை  கொண்டுவரப்பட வேண்டும்  என்பதன் காரணத்தால் அதனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுக்கவில்லை. அவ்வாறு ஒரு ஒற்றுமையை கட்டியெழுப்புவதாயின் சரியான ஒரு அமைப்பு கூட்டமைப்பிற்கு வழங்கப்படவேண்டும். இதனையே  நாம் நீண்டகாலமாக  கேட்டுக்கொண்டிருக்கின்றோம். இதனை  நாம் மத்திரமின்றி எமக்கு முன்னதாகவே கூட்டமைப்பில் காணப்படும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்   போன்ற கட்சிகளும்  வலியுறுத்தி  வருகின்றன. இது தேர்தலை அடிப்படையாக  வைத்து  கோரப்படும்  விடயமல்ல. தமிழ்  மக்களுக்காக  தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்போதைய கடினமான நிலைமையில் தமிழர்விடுதலைக்கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் கூட தமது கட்சி நலனை எல்லாம் பின்தள்ளி தமிழர் கொங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பவற்றை இணைத்து தமிழர்விடுதலை கூட்டணியாக முன்னிறுத்தி செயற்பட்டார்கள். அது மிகப்பலம் பொருந்திய சாத்வீக விடுதலை இயக்கமாக மக்கள் மத்தியில் உருவாக்கம் பெற்றது. ஆனால் இன்றிருக்ககூடிய நிலைமையில் ஒரு ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுடைய விடுதலையை நோக்கிநாம் முன்னேற வேண்டுமாயின் ஒரு பலம்பொருந்திய  அமைப்பு  அவசியமாகின்றது. தனித்தனிக்கட்சியாக  தம்மை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு மாத்திரம் கூட்டமைப்பு என கூறிநின்றால் நியாயமான தீர்வை   நோக்கி   செல்வதில்  பாரிய பின்னடைவு   ஏற்படும்.  ஆகவே  தான்  இன்று    இந்த  விடயத்தை   கருத்தில்  கொண்டு   பல  பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலர் இதில் தலையிட்டு பேசிக்கொண்டிருக்கின்றார்கள். முடிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

கேள்வி:- மன்னார் ஆயர் ஊடாக உங்களுடைய கட்சி உட்பட நான்கு கட்சிகளின் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன?
பதில்:- மன்னார் ஆயரை நாம் உட்பட நான்கு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்தி ஒரு அமைப்பொன்றைகொண்டு வரவேண்டும். அதற்கு அவரை  மத்தியஸ்தம்  வகிக்கும்படி  கேட்டிருந்தோம். அதன்  பின்னர் ஆயர் தமிழரசுக்கட்சியுடன் கலந்துரையாடியுள்ளார். அது தொடர்பான விடயங்களை அடுத்த சந்திப்பில் கூறுவார் என எதிர்பார்க்கின்றோம்.  அதேநேரம் எதிர்வரும் பதினொராம் திகதி மீண்டும் மன்னார் ஆயர் தலைமையில் கட்சிகளுக்கு ஒரு கூட்டம் நடைபெறவுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. உண்மையிலேயே ஆயர் பத்திரிகைகளுக்கு  வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அதனை தெளிவாக கூறியுள்ளார். அதனால் நாம் எடுத்துக் கொண்ட விடயங்கள் சம்பந்தமாக பேசப்படமாட்டாது என நான் நினைக்கின்றேன். அதாவது கூட்டமைப்பை பதிவுசெய்வதைத்தாண்டி ஒரு பொதுவேலைத்திட்டத்தின் பிரகாரம் எல்லாக்கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தவேண்டும். அதற்குள் ஐந்து கட்சிகளை மாத்திரமல்ல வேறு கட்சிகளையும் அதற்காக ஆயர் அழைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. ஆகவே எதிர்வரும் சந்திப்பில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என கருதமுடியாது. அதேநேரம் ஆயர் வேறு ஒரு வழியில் கூட்டமைப்பை பெரிதாக அமைக்கவேண்டும் என்பதிலேயே அக்கறைசெலுத்துக்கின்றார் என கருதுகின்றேன்.

கேள்வி:- திம்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் திம்பு திட்ட வரைபுகளை தற்போதுள்ள சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என கருதுகிறீர்கள்?
பதில்:- எமது கட்சி புளொட், விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், தமிழர்விடுதலைக்கூட்டணி என ஆறுகட்சிகளின் பிரதிநிதிகளும் திம்புவிற்கு சென்றிருந்தோம். இந்த ஆறு கட்சிகளில் விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரிலே இயங்கிக்கொண்டிருந்தாகள். அந்த நேரத்தில் அரசியல் அவதானிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை நாம் அனைவரும் வித்தியாசமாக வேறுபாட்டுடனேயே பேசப்போகின்றோம் என கருதினார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்வுகூறல்களையும் எதிர்பார்ப்புக்களையும் முறியடித்து ஆறு கட்சிகளும் ஒரே குரலில் ஒற்றமையாக எமது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். குறிப்பாக ஒவ்வொரு இரவுப்பொழுதிலும் எமக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடங்களில் ஒன்றுகூடி நாளை யார்பேசுவது என்னபேசுவது போன்ற விடயங்களை கலந்துரையாடி தீர்க்கமாக எடுத்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டோம். இந்த ஒற்றுமையானது தமிழினத்திற்கு எதிராக இருந்த பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அவ்வாறான ஒர் ஒற்றுமையான செயற்பாட்டை அதன் பின்னர் நான் இங்கு காணவில்லை. அப்போதைய காலத்தில் ஆயுத இயக்கங்களிடையே பரஸ்பரம் பகைமை உணர்வு கூடுதலாக இருந்த காலமாகும். அந்த நேரத்திலே மிக ஒற்றுமையாக செயற்பட்டமை மிகப்பெரிய விடமாகும்.
நாம் அந்த பேச்சு வார்த்தையின் போது தமிழர் தனித்துவத்தேசிய இனம், தனியானதாயகம், சுயநிர்ணய உரிமை, சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் என நான்கு கொள்கைகளை முன்வைத்திருந்தோம். இவை கொள்கை ரீதியிலான விடயங்கள். இந்தக்கொள்கைகள் என்றுமே செல்லுபடியாகக்கூடிய விடங்கள். அன்றைய காலத்தில் நாம் இந்த கொள்கைகளை முன்வைக்கும் போது அங்கிருந்த தமிழர்விடுதலைக்கூட்டணி உட்பட அனைத்துக்கட்சியினரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட தயாராக இருக்கவில்லை. அதேநேரம் அராசங்கம் 1983 கலவரங்களின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைத்த அதே பிரேரணைகளைத்தான் திம்புவிலும் மாற்றமில்லாது முன்வைத்தார்கள். இவை ஏற்கனவே தமிழர் விடுதலைக்கூட்டணியால் மிகவும் கீழ்நிலையில் இருப்பதாக கூறி மறுக்கப்பட்வை. ஆதனை பார்த்தவுடனேயே இந்தப்பேச்சுவார்த்தையில் எவ்விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணப்பாடு எங்கள் அனைவரிடமும் தோன்றியது. அகவே எங்களுடைய நிலையில் இறுக்கமாக நிற்கவேண்டும் என்ற மனப்பான்மை எமக்குள் உருவானது. தமிழீழக்கோரிக்கை அடிப்படையாக இருப்பினும் அதற்கு மாற்றாக ஒரு நியமான  தீர்வை  வழங்குவதற்கு  அரசு  தயாரகவில்லை  என்ற  காரணம்  தான் அப்பேச்சுவார்த்தையும் முறிவுக்குவருவதற்கு நிச்சயமான காரணமாக உள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற படுகொலைகளை வைத்து நாம் வெளியேறியிருந்தாலும் இதுதான் பின்னணியில் காணப்படுகின்றது. இதனை இந்தியாவிற்கு தெளிவாக நாம் விளங்கப்படுத்தியிருந்தோம். சில அதிகாரிகளுக்கு விளங்காது இருப்பது வேறுவிடயம்.
“அரசதரப்பு மிக கீழே இருந்து தான் ஆரம்பிப்பார்கள் அவர்கள் ஒரு படி மேலேசென்றால் நீங்கள்  கீழே  வாருங்கள்  இல்லையேல்  வராதீர்கள். அவ்வாறு அவர்கள் மேலே வரும்போது சந்திப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றதா என பார்த்து செயற்படவேண்டும். தெளிவாக இப்பேச்சுவார்த்தையை கையாளவேண்டும்” என கலைஞர் கருணாநிதி கூட இப்பேச்சுவார்த்தைக்கு முன்னதாக என்னை சந்திக்கும் போது கூறியிருந்தார். அதேபோன்று டெல்லியில் பார்த்தசாரதி போன்றவர்களை நேரில் பார்த்து கதைத்திருந்தேன். அந்த கோட்பாடுகள் இன்றும் செல்லுபடியாகக்கூடியவை. ஆகவே அதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை இன்று கொண்டுவர முடியும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இருக்கமுடியாது.

கேள்வி:- நேரடியான பேச்சுவர்த்தைகளின் போது இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு காணப்பட்டது?
பதில்:- முதற்தடவையாக திம்புவில் தான் ஆயுதக்குழுக்களுடான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதற்காக இந்தியா, இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக்குழுக்களுக்கு அழுத்தங்களை வழங்கியிருந்தது. பொதுவாக இந்தப்பேச்சுவார்த்தையை எவ்வாறு எடுத்துச்செல்வது முறிவடையும் நிலை வரும்போது இருதரப்பிடமும் தொடர்ந்து பேசுமாறு கோரிக்கைவிடுதல் போன்ற விடயங்களில் மட்டுமே தலையிட்டார்கள். ஆறுகட்சிகளும் கலந்துரையாடி நான்கு வரைபுகளை முன்வைத்தோம். இலங்கை அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை முறிவுக்கு வர அதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் பிற்காலத்தில் வந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு எங்கள் மீதும் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தே கைச்சாத்திடப்பட்டது. ஓப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னைய நாளில் தான் அந்த வரைபு எமக்களிக்கப்பட்டு அதனை பார்வையிடலாம் மாற்றங்களை செய்யமுடியாது என இந்தியாவால் அழுத்தமாக கூறப்பட்டது. உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் அது தொடர்பிலான விடயங்களை பின்னர் பார்க்கலாம் என ராஜீவ் அரசு கூறியது. அதன் பின்னர் அழுத்தங்களின் மத்தியிலேயே தான் கைச்சாத்திடப்பட்டது.
தற்போது விடுதலைப்புலிகளின் யுத்த தோல்விக்கு பின்னர் நாம் எல்லாவிதத்திலும் பின்னடைந்திருக்கின்றோம் பலவீனமாக இருக்கின்றோம். ஆகவே இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்வதற்கு முதற்படியாக நாம் ஏதாவது செய்துகொள்ளவேண்டும். கிழக்கில் பெரும்பாலும் குடிப்பரம்பல் பாரியமாற்றம் ஏற்பட்டுவிட்டுது. அதே நிலை வடக்கிலும் தற்போது சிறுகச்சிறுக நடைபெற ஆரம்பித்திருக்கின்றது. நாம் 65வருடங்களுக்கு மேலாக பேசிவிட்டோம். ஆனால் எந்தவொரு நியாயமான தீர்வையும் பெறமுடியவில்லை. 1987ஆம் ஆண்டு நியாயமாக இல்லா விட்டாலும் இந்திய இலங்கை ஒப்பந்த தீர்வொன்றே  எமது  கைகளுக்கு  கிடைத்தது. அதன் பிரகாரம் தான் 13ஆவது திருத்தச்சட்டம்  கொண்டுவரப்பட்டது. அது  கூட  தற்போது  படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் நிறுத்தப்பட்டு மீண்டும் 13பிளஸ் கொண்டுவரப்படவேண்டும். இவைகள் நிறுத்தப்படாவிட்டால் இன்னும் 5-10வருடங்களில் பேசுவதற்கு ஒன்மே இருக்காது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். இதனைக் கூறுவதால் என்னை நம்பிக்கை இழந்தவன் என்று கூட சிலர் நினைப்பார்கள். யதார்த்த ரீதியில் பார்க்கையில் இன்றைய அரசு அவ்வாறான நிகழ்ச்சித்திட்த்திற்கேற்பட வேலைசெய்துகொண்டிருக்கும் உண்மையை பலர் அறிந்திருந்தும்  அதனை  அறியாதவர்கள்  போல நடிக்கப்பார்க்கிறார்கள். இந்த நிலைமையயை இவ்வாறாவது காப்பாற்றுவதற்கு எதாவது உடனே செய்தேயாகவேண்டும்.

கேள்வி:- சட்டத்தரணி சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் ஆகியோரை இந்திய அரசாங்கம் கடத்தியதன் பின்னணி என்னவாக உள்ளது?
பதில்:- உண்மையிலேயே ரெலோஅணிக்காக சத்தியேந்திரா பேச்சுவார்த்தை மேடைக்கு வர காரணமாக இருந்தவர் சந்திரகாசன் செல்வநாயம் என்ற நிலைமை அன்றிருந்தது. அதேநேரம் விடுதலைப்புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம் வருகைதந்திருந்தார். இவர்கள் ஆயுதக்குழுக்கள் மூலம் கடுமையாக செயற்படக்கூடியவர்கள் என அவர்களிடம்(இந்தியஅரசிடம்) அடிப்படை அபிப்பிராயம் காணப்பட்டதன் காரணத்தாலேயே அவர்கள் கடத்தப்பட்டார்கள். திம்பு பேச்சுவார்த்தையில் நாம் உறுதியாக எமது கொள்கைளில் இருப்பதற்கும் அதேநேரம் இறுதியில் பேச்சுவார்த்தையில் இருந்து நாம் வெளியேறுவதற்கும்  சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயம்  ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் இந்திய அரசாங்கம் கருதினார்கள். அதிகாரிகளுடன் பேசும் போதும் அதையே தான் கூறினார்கள். சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் போன்றவர்கள் கடுமையாக செயற்படபோகின்றார்கள் என கருதியதில் ஒரு உண்மையில்லை. பாலசிங்கத்தை பொறுத்தவரையில் 1977இல் இருந்தே விடுதலைப்புலிகளுடன் மிக நெருக்கமாகபணியாற்றி ஆலோசகராகவே செயற்பட்டுவந்தவர்.

ploteகேள்வி:- புளொட் அமைப்பைபொறுத்தவரையில் ஆரம்பத்திலே லெபனானில் பயிற்சிபெற்று பலம்பொருந்திய அமைப்பாக காணப்பட்டது. பின்னர் அது பலவீமடைந்து சென்றமைமக்கான காரணம் என்னவாக இருக்கின்றது?
பதில்:- முதலாவது காரணமாக காணப்படுவது எங்களுக்கு ஆயுதம் கிடைக்காது விட்டமையே. வெளிநாடு ஒன்றிலிருந்து நாங்களாக முயற்சித்துக்கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியாவின் சென்னை நகரிலிருந்து வெளிக்கொண்டு வர இயலாது போனது. அதனை இந்திய அரசாங்கம் கைப்பற்றியது. இரண்டு அதிபார ஊர்திகளில் நிரப்பபட்ட ஆயுதங்களே அவ்வாறு கைப்பற்றப்பட்டன. அவை எமது கைகளுக்கு கிடைத்திருந்தால் அந்தநேரத்தில் பெரியதொரு ஆரம்பமாக இருந்திருக்கும். புளொட் ஒரு சுதந்திரமாக இயங்கும் இயக்கமாக இருக்குமே தவிர மற்றைய எவரின் சொல்லையும் கேட்டு நடக்காது என  அப்போது எங்களுடன் தொடர்பாடலில் இருந்த இந்திய அதிகாரிகள் எம்மீது வைத்த அவநம்பிக்கையும் ஒரு காரணமாகும். அதன் காரணத்தாலேயே பல உதவிகளை மறுத்திருக்கின்றார்கள்.
அடிப்படையாக ஆயுதக்குழுவொன்றுக்கு ஆயுதம் இல்லாது செயற்படுவது என்பது மிக கடினமான விடயம். அதன் காரணமாக  வடகிழக்கில் விடுதலைப்புலிகள் எம்மை தடைசெய்யும் போதும் அவர்கள் மற்றைய இயக்கங்களை தாக்கியது போல் எம்மையும் தாக்க முற்படுகின்றபோதும் நாங்கள் எம்மை தற்காத்துக்கொள்ள முடியாத நிலை உருவானது.  இதுவே எமது இயக்கம் பலவீனமடைவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்தியாவின் தலையீட்டினால் வங்களாதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கொமாண்டர் பதவியிலிருந்த லோரன்ஸ் லிப்சூல் (Lorenz Lifzultz) என்பவர் எழுதிய நூலின் தமிழாக்கமாகவே ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல்; 1985இல் புளொட்டினால் வெளியிடப்பட்டது. இந்தப்புத்தகத்தின் வெளியீடு இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையயும் புளொட்டின் ஆயுதப்புரோட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. உதவிகளை செய்ய மறுத்தது. ஆகவே இதுவும் எமது கட்சி பலவீனமடைவதற்கு ஒரு காரணமாக உள்ளதென கூறமுடியும்.

கேள்வி:- செப்ரம்பரில் நடைபெறவிருக்கும் வடக்கு மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- இன்றுவரை ஒருசரியான நிலைப்பாட்டிற்கு எமது கட்சி வரவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தேர்தல் தொடர்பில் இருக்ககூடிய சில கருத்துவேறுபாடுகள் அல்லது கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் இந்த நான்கு கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் வேட்பாளர்களை நியமிப்பதில் இருந்த மிகப்பாரிய பிரச்சினைகள் இவற்றினை கருத்தில் கொண்டு இதே நிலைமைதான் வடக்கிலே வந்துவிடுமோ என்ற மனகிலேசம் ஒன்று நான்கு கட்சிகளிடையே இருந்துகொண்டிருக்கின்றது. இதன் காரணத்தால் நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் மிக விரைவில் அதற்கொரு முடிவெடுக்கவுள்ளோம். இன்று அரசு வடமாகாணசபைத்தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. மிகத்தீவிரமாக அந்த நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எந்தவிதமான ஒரு தேர்தல் வேலைகளையும் செய்யவில்லை. அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அபேட்சகர்களை தெரிவுசெய்யவேண்டும். அவர்களை இப்போது முதல் செயற்பட சென்றால் தான் வாக்குகளை சேகரிக்க முடியும். கட்சிகளுக்கிடையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படவேண்டும். ஆனால் அவற்றை கூட தீர்மானிக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு மிகவும் இழுபறியான நிலையில் இருக்கின்றது. இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என நினைக்கின்றேன்.

கேள்வி:- வடக்கில் தற்போது நடைபெறும் குடியேற்றங்களில் உள்ள சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- இன்று முக்கியமாக இருக்கும் முறைப்பாடாக இதுவே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அல்லது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் வந்து குடியேறுவதை எவரும் தடுக்கவும் முடியாது அதனை பிழை என கூறவும்முடியாது அதனை வரவேற்கவேண்டும். அந்த போர்வையில் வெளியில் இருக்க கூடிய அல்லது சம்பந்தமில்லாதவர்ள் குடியேறுவதை நாம் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களை காட்டிலும் சிங்கள மக்கள் முல்லைத்தீவில் அதிகமாக குடியேறுவது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதே நிலைமை முல்லைத்தீவில் நீடித்துக்கொண்ட செல்லுமாகவிருந்தால் 2020,2021 தேர்தல்களில் தமிழ்மக்கள் சிறுபான்மையாக மாறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அதேநேரம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தை அரச சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரித்து அப்பகுதி மக்களுக்கு நட்ட ஈட்டுக்களை வழங்கி அவர்கள் அதனை மறந்து ஓரிரு ஆண்டுகள் கடந்த பின்னர் அங்கு என்ன நடக்கும் யார் குடியேறுவார்கள் என கூறமுடியாத ஆபத்தான நிலை காணப்படுகின்றது. வடக்கில் உறுதிகாணிகளாக காணப்படுவதால் குடியேற்றங்களை செய்யமுடியாது அதனால் தான் அவர்கள் சுவீகரிப்பு நடவடிக்கைமூலம் திட்டமிட்டு கையகப்படுத்த முயற்சிசெய்கிறார்கள். 

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு நோக்கிய பயணத்தில் இந்தியா எவ்வாறன நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் என கருதுகின்றீhகள்?
பதில்:- தற்போது 70,80 கள் அல்ல. நிலைமைகள் முற்றாக மாறியுள்ளன. ஆகவே ஒரு எல்லைக்கு மேல் தங்களால் அழுத்தங்களை வழங்க முடியாது என அவர்களுடன் பேசும்போது கூறுகின்றார்கள். இருப்பினும் நாங்கள் அழுத்தத்தை வழங்குவோம் நீங்கள் அரசுடன் பேசித்தீர்வைக்காணுமாறு பகீரங்கமாக கூறுகின்றார்கள். இந்தியாவின் அழுத்தங்கள் உதவிகள் முக்கியமாக தமிழ் நாட்டு மக்களின் அழுத்தங்கள் ஒன்று இல்லாது இங்கு தீர்வு ஒன்று வரமுடியாத நிலைமையை இலங்கை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் மிக இலகுவாக பேசித்தீர்த்துவைக்ககூடிய பிரச்சினையை இன்று சர்வதேசமயமாவதற்கு அரசாங்கமே காணரமாக இருக்கின்றது. இதற்கு நாங்கள் காரணமல்ல. கடந்தகாலங்களில் தொடர்ந்து வந்து பெரும்பான்மை அரசாங்கங்கள் தாங்கள் ஒரு நியாயமான தீர்வை வைப்போம் அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை அதனால் முன்வைக்க முடியாதுள்ளது என தொடர்ச்சியாக கூறிவந்தன. இதனை இந்திய உட்பட வெளிநாட்டவர்கள் நம்பி யுத்தம் முடிந்தவுடன் தீர்வு வந்துவிடும் என கருதினார்கள். ஆனால் தீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை என்பதை இந்தியா உட்பட பல வெளிநாட்டவர்கள் உணரத்தொடங்கியுள்ளார்கள். ஆகவே தான் அவர்கள் அமெரிக்க பிரேரணைகள் ஐ.நா தீர்மானங்கள் போன்ற அழுத்தங்கள் மூலமே அதனை செய்யமுடியும் என கருதுகின்றார்கள். அதனைத்தான் நாங்களும் நம்பியிருக்கின்றோம். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  பாராளுமன்றத்திலும் , வெளியிலும்  இந்தியாவும் அமெரிக்காவும் தான் எமக்கு ஒரு தீர்வைத்தரவேண்டும் நாங்கள் வெளிநாட்டைத்தான் நம்பியிருக்கின்றோம் என கூறியுள்ளார்கள். ஆகவே அவ்வாறான அழுத்தங்கள் தான் எதாவது ஒரு தீர்வைபெற்றுக்கொடுக்க முடியும். (12.05.2013)

News13.05.2013.
மதவாச்சி மடு ரயில்சேவை நாளை ஆரம்பம்-

மதவாச்சியிலிருந்து மன்னாரின் மடுவிற்கான ரயில் சேவையானது 27 வருடங்களின் பின்னர் நாளையதினம் முதல் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 43 கிலோ மீற்றர்களைக் கொண்ட இந்த ரயில் பாதை இந்திய அரசிடமிருந்து கடனாகப் பெற்ற நிதிமூலம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதவாச்சியிலிருந்து மடு வரையிலான ரயில்பஸ் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இச்சேவைக்கு பொறுப்பான அதிகாரி பீ.ஏ. ஆரியரத்ன தெரிவித்துள்ளார். காலை, பகல் மற்றும் பிற்பகல் ஆகிய மூன்று வேளைகளில் இந்த ரயில்பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. மதவாச்சி – மடு ரயில்சேவை இறுதியாக 1986ம் ஆண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

கடத்தப்பட்டதாக கூறப்படும் காரொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன நுழைவாயிலுக்கு அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடத்தப்பட்ட கார் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைக்காக பயாகல பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் புயல்; மின்சாரம் தடை, உடைமைகள் சேதம்-

யாழில் இன்றுகாலை 6.35 மணியளவில் வீசிய புயல் காற்றினால் மல்லாகம் கோணக்குளம் இடம்பெயர் முகாமிலுள்ள தற்காலிக குடிசைகள்மீது சுமார் 25 பனைமரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இடி, மின்னலுடன் கூடிய மழையோடு வீசிய மினி புயல் காற்றினால் மக்கள் பெரும் அவலங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்த கோணக்குளம் முகாமைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (42) மற்றும் அவரது மகன் சுமந்தன் (13) ஆகியோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாவை கலட்டியில் வீடுமீது பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் சதீஸ்வரன் (43) என்பவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி, மாத்தறை படகுகள் ஒலுவிலில் கரையொதுங்கின-

தெற்கிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற படகுகள் கிழக்கில் கரையொதுங்கியுள்ளன. காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலிருந்து கடலுக்கு சென்ற 25-30 படகுகளே ஒலுவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளன என அட்டாளைச்சேனை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை வீசிய மினி சூறாவளியினால் படகுகள் கரையொதுங்கியுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு கிராமத்தில் இன்றுகாலை சுமார் 3நிமிடங்கள் வீசிய சுழல்காற்று காரணமாக 10 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயுள்ளன. இக்கிராமத்திலுள்ள மின்கம்பங்களும் உடைந்து வீழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது, தேர்தல் நடத்த வேண்டும்

விக்ரமபாகு- காணி மற்றும் பொலீஜ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது, வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம் என்பதால், அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை எனவும், தமிழ் மக்களுக்கு பெரும் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கிற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காணி, பொலீஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்படுவதை நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம். இதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த அதிகாரப்பரவலாக்கம் போதுமானதல்ல. எனினும் நாட்டின் சட்டத்தில் உள்ள அதிகாரங்களையாவது பாதுகாக்க வேண்டும். அதிகாரத்தை பரவலாக்குவதே பிரச்சினைக்காக சிறந்த தீர்வு என அவர் மேலும் கூறியுள்ளார்.

அரச கரும மொழி கொள்கை தொடர்பான செயற்றிட்டம்-

அரச கரும மொழி கொள்கைகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளின்போது நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அரச கரும மொழிகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் குறித்த விசேட செயற்றிட்டமொன்று எதிர்வரும் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மொழி ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்கள், நிபுணர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் பங்கேற்பரென்றும் அவர் கூறியுள்ளார். விசேடமாக, கனடாவின் அரச மொழிகள் ஆணையாளர் இந்த செயற்திட்டத்தில் பங்கேற்பாரென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கைதடி விபத்தில் 31பேர் காயம்-

யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 31பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்றுமுற்பகல் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலீசார் தெரிவித்துள்ளனர். கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி இந்த விபத்து இட்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தைத் தொடர்ந்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கம்

கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 07 10 10 10 10 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்த முடியும் என நாரா நிறுவனத்தின் தலைவர் சயூர சமரசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இதன்மூலம் கடற்றொழில் துறைசார் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் இத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தும் இதனூடாக அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 12 May 2013
Posted in செய்திகள் 

12.05.2013.
மன்னார் ஆயர் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு-

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுற்பகல் 10மணியளவில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்  தேசியக்கூட்டமைப்பின்  வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,        சிவசக்தி ஆனந்தன்,        வினோ நோகராதலிங்கம்,     அப்பாத்துரை விநாயகமூர்த்தி,  சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், தமிழர்  விடுதலைக்   கூட்டணியின்   செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, புளொட்  தலைவர்   தர்மலிங்கம்  சித்தார்த்தன்   ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது  கூட்டமைப்பை  அரசியல்  கட்சியாக  பதிவுசெய்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இது  விடயமாக  தமிழ்க்  கட்சிகள்  தமது கருத்துக்களை  விரிவாக  எடுத்துக்  கூறியதுடன், கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டியதன்  அவசியத்தையும்  வலியுறுத்தினர். இதன்போது தமிழரசுக் கட்சியானது படிப்படியாக இந்நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது இதிலிருந்து கூட்டமைப்பை பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு நாட்டமில்லை என்பதை அது தெளிவாகக் காட்டியது. இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆயர் இராயப்பு ஜோசெப், தமிழ்க்  கட்சிகள்  இது  விடயத்தில்  தமக்குள்  பேசித்  தீர்த்துக் கொள்ளவேண்டுமென்ற கருத்தினை முன்வைத்ததுடன், தாம் சிவில் சமூகம் என்கிற ரீதியில் இவ்விடயத்தில் பெரியளவில் தலையிட்டு தீர்த்துவைக்க முடியாது என்றும் தமிழ்க் கட்சிகளே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து நேற்றுபிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ்  தேசிய மக்கள்  முன்னணின்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது  தமிழ்மக்களின்  குறைந்தபட்சம்  அனைவரும் இனங்காணக்கூடிய நிலைப்பாட்டினை எட்டுவதற்கு மூவர்கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் இதுபற்றிய அறிக்கையினை எதிர்வரும் 08ம் திகதி சமர்ப்பிப்பது என்று தீர்மனிக்கப்பட்டதுடன், மீண்டும்  இது விடயமாக  08ம் திகதி  கூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு

attoகொழும்பு-03, கொள்ளுபிட்டி கடற்கரை வீதியில் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  விபத்தில் காயமடைந்த கந்தானையைச் சேர்ந்த 27வயதான அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோ என்ற ஊடகவியலாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் புலிகளையும் களமிறக்குவதற்கு அரசு நடவடிக்கை- 

ruined[1]வடமாகாண சபைத் தேர்தல் களத்தில்; புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாக களமிறக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆரம்பக் கட்ட ஆலோசனைகள் சாதகமாக முடிவடைந்துள்ளதாகவும், இறுதிக் கட்டப் போரின்போது படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு  விடுதலை  செய்யப்பட்ட  முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரே வட மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

 
வாக்காளர் பட்டியலில் திருத்தம்-

election boxவட மாகாணத் தேர்தலை நடாத்தும் முன்னர் அந்த மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பெயர்களை வட மாகாண வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்காக தேர்தல் சட்டமூலத்துக்கு திருத்தமொன்றை  மேற்கொள்வதற்கு  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை  அமைச்சர்களான  சம்பிக்க  ரணவக்கவும், ரிஷாத் பதியூதீனும் ஆரம்பித்துள்ளனர். இதேவேளை  வட மாகாணசபைத்  தேர்தல்களுக்கு  முன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

ஜேர்மன் தூதுவர் யாழ்பாணதிற்கு விஜயம்- ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் BRDஜே.ரேகன்  மோஹார்ட்  யாழ்ப்பாணத்துக்கு  விஜயம்  செய்துள்ளார். யாழ்  இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவை அவர் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மீளமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பிலும், இராணுவ  பிரசன்னத்தை குறைப்பது குறித்தும் அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர் பல்வேறு பிரதேசங்களையும் நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உலக வங்கியிடம் இலங்கை நிதியுதவி கோரல்-

world bankஉலக  இலங்கை 70 கோடி அமெரிக்க டொலர்  நிதி  உதவியைக்  கோரியுள்ளது. வரவு செலவு திட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 கோடி  அமெரிக்க  டொலர்களை  பெற திறைசேரி  தவறிய நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பல குறைந்த தொகையான நிதியினை, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளிலிருந்து பெறும் முயற்சியிலேயே திறைசேரி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக ஹிருனிகா அறிவிப்பு

hirunikaஅரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்ளப்போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை எனவும் எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். முழு அளவில் அரசியலில் ஈடுபட போதியளவு ஆதரவு தேவைப்படுகிறது. சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும். இலங்கையில் அரசியல் செய்வது  மிகவும்  கடினமானது. குடும்பத்தாருடன்  இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என ஹிருனிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை-

fisch bortசர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடல் பிராந்தியங்களில் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கமைய 1983ஆம் ஆண்டு தமிழக கடற்பிராந்திய சட்டத்தினை மீறும் மீனவர்களுக்கு எதிராக அவர்களின் இழுவைப் படகுகளின் தொழில்பாடுகளை இடைநிறுத்த முடியும் என மாவட்ட ஆட்சியாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தமது படகுகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அவர் மேலும் அறிவுறுத்திக் கூறியுள்ளார்.

19ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு-

Hekeem19வது அரசியல் சீர்த்திருத்தத்தினை முன்ன்னெடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது எதிர்ப்பை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி கருத்து தெரிவிக்கையில்  இவ்விடயத்தினைக்  கூறியுள்ளார். 19வது  அரசியல் சீர்த்திருத்தை ஏற்றுக்கொள்ளும்  பட்சத்தில், 17வது அரசியல்  சீர்த்திருத்ததில் தெரிவிக்கப்பட்டுள்ள, காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் அகற்றப்படும் எனவும், காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை அகற்றுவது நியாயமற்றது என தமது கட்சி கருதுவதாகவும் ஹசன் அலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காத்தான்குடி கைகலப்பில் மூவர் காயம்-

museமட்டக்களப்பு, காத்தான்குடியில நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள காணியொன்றில் காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்றை அமைப்பதற்காக அக்காணியை  அடைத்து  வேலி  போட்டுக்கொண்டிருந்தது. மேற்படி காணி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு சொந்தமான மையவாடிக் காணியென கூறி அப் பள்ளிவாயலின்  ஒலி பெருக்கியில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் காத்தான்குடி நகரசபையால் போடப்பட்ட வேலியை உடைத்ததுடன் அங்கு போடப்பட்ட தூண்களையும் பிடுங்கியுள்ளனர். இதையடுத்து  இவ்விடத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் 3பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு  விரைந்த  பொலிஸாரும்  இராணுவத்தினரும் நிலைமையை கட்டு;பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் இதுபற்றி விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

News

Posted by plotenewseditor on 11 May 2013
Posted in செய்திகள் 

11.05.2013.

மாகாணசபை அதிகாரங்கள் வேண்டுமென கோரிக்கை-

untitled13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்ததில் மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்ட பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இரத்து செய்யப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையினை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்;சியான சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சி விடுத்துள்ளது. இந்த அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுமானால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்காக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை, வட மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானம்-

jaffnaவட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டுமுதல் 2009ம் ஆண்டு மேமாதம் வரையில் வடக்கு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து கொண்டவர்கள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளவும், வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது, வேறு மாவட்டங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 15ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் புத்தளத்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கந்தரோடையில் சேற்று நீர் விநியோகம்-

kanthயாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையால் வழங்கப்படும் குழாய் மூலமான நீர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லையென அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஒருவார காலமாக மிகவும் கலங்கிய நிலையில் சேற்றுநீராக குழாய்மூலம் தண்ணீர் வருவதால் குழாய் நீரைப் பயன்படுத்துகின்ற 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குழாய் நீர்மூலம் தண்ணிர் பெறுவதில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக உடுவில் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச சபைக்கும் பொதுமக்கள் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் யாழ். அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

வாக்காளர் பதிவேட்டு திருத்தத்திற்கு விண்ணப்பம்-

election box2013ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களை இந்த மாதம் 15ஆம் திகதிமுதல் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சில வாக்காளர்கள் தங்களை பதிவு செய்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, வாக்காளர்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட திட்டமொன்று இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளது. வாக்காளர் பதிவேட்டு திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் சுமார் ஒருவருட காலம் கடந்துள்ளது. இந்நிலையில் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதான வீதி திருத்தப்படாமையால் மக்கள் சிரமம்

mullai roadவீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் நாட்டிலுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகிற போதிலும் சில கிராமங்களின் பிரதான வீதிகள் இன்னமும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதி 30 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாத நிலையில் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால், அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளின்போது பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இடையிடையே சிறியளவிலான திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீண்டும் இப் பிரதான வீதி சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனாதிபதி உகண்டாவிற்கு விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின்போது உகண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உகண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளுர் அரசாங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.