விருப்பமில்லாதவர்கள் அரசிலிருந்து வெளியேறிச் செல்லலாம்-ஜனாதிபதி- mahinda

அரசாங்கத்தின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு அரசில் இருப்பவர்கள் இருக்கலாம். அதில் முரண்பாடு இருப்பவர்கள் உள்ளிருந்து சதிவேலைகளைச் செய்யாமல் விரும்பிய நேரத்தில் வெளியேறலாம். அதற்கு எதுவித தடைகளும் கிடையாது என ஜனாதிபதி மகிநத ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சி அங்கத்தவர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலம் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக நாட்டுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு எவரின் உதவியையும் நாடி, அதில் தங்கியிருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ஆளும் கட்சியின் பங்காளிகள் தீர்மானங்களை ஆதரிக்கத் தயங்குவது குறித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை நாடுகடத்த சுவீடன் தீர்மானம்-

உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுவீடனில் தஞ்சமடைந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்தப்போவதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தாம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் சுவீடன் அரசு குறிப்பிட்டுள்ளது. சுவீடன் அரசு இந்நடவடிக்கை குறித்து எழுத்துமூலமாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. அத்துடன் சுவீடனில் தங்கியுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையார்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றையும் நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்திருக்கிறது.

நாடளாவிய ரீதியில் 210 பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டம்-

நாடளாவிய ரீதியில் கிராமப்புற பாதைகள் ஊடாக 210 பாலங்களை நிர்மாணிப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை மாத்தளை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் கிராமப்புற பாலம் நிர்மாணத்துறை திட்டத்தின் இணைப்பதிகாரி பொறியியலாளர் சந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். மகநெகும அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களுக்கான பாலங்களை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்திற்குள் சுமார் 70 பாலங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய எஞ்சிய பாலங்கைள அடுத்த வருடத்திற்குள் நிறைவுசெய்ய எண்ணியுள்ளோம் என இணைப்பதிகாரி பொறியியலாளர் சந்தன குணதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸி. செல்ல முயன்றவர்கள் கைது-Australia[1]

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கடற்பரப்பின் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலைய அதிகாரிகளால் இவர்கள் இன்று அதிகாலை 5.30 அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 6 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 9 சிறுவர்கள் அடங்குகின்றனர். இவர்கள் வவுனியா, வென்னப்புவ, பிங்கிரிய, மாரவில, செட்டிக்குளம் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் இவர்களை ஆஜர்செய்ய பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 தெற்கிலேயே தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்-பிரதமர்-

வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் பார்க்க தெற்கில் அதிக தமிழர்கள் வாழ்வதால் நாட்டை பிளவுபடுத்துவதற்கான தேவையில்லை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிலரும் உள்நாட்டில் உள்ள சிறு அரசியல் கட்சிகளுமே வேறு நாட்டுக்கு வலியுறுத்துவதாகவும், அவர்களின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் இடமளிக்காது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, உன்னஸ்கிரிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே பிரதமர் டி.எம்.ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.

யாழில் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு-

யாழ்.மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழில் கடந்த 2012ஆம் ஆண்டைவிட தற்போது 06மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட இரு மடங்காக இருப்பதாகவும் அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தைபிறப்பு என்பன அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி இந்த தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ். வைத்தியசாலை அறிவித்துள்ளது

ஜனாதிபதி தான்சானியாவுக்கு விஜயம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆப்பிரிக்க இராஜ்ஜியமான தான்சானியாவிற்கு இன்றுகாலை சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியொருவர் தான்சானியாவுக்கான பயணத்தை மேற்கொள்கின்றமை இதுவே முதன்முறையாகும். இதுதவிர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீஷெல்ஸ் தீவிலும் ஒருநாள் தங்கியிருப்பார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இருதரப்பு வர்த்தக, பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறைகளில் மேம்பாடு குறித்து ஜனாதிபதி மற்றும் தான்சானி அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.