அமைச்சர் டியு குணசேகர புளொட் தலைவர், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சந்திப்பு-ep sugu du kunasekara Sithar plote
சிரேஷ்ட அமைச்சர் டி.யு.குணசேகர அவர்களை புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலாளர் திரு.சிறீதரன் ஆகியோர் நேற்று பிற்பகல் சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சடமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் புளொட் முக்கியஸ்தர் திரு.ராகவன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

சுமார் 01 மணி 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர்,  13ஆவது திருத்தம் தொடர்பாக இங்கிருக்கின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து உரையாடி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாகவே தங்களையும் சந்தித்து கலந்துரையாட வந்திருக்கின்றோம் என்பதைத் தெரிவித்தனர்.

13ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கக் கூடாதென்பதில் அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் தீவிரம் காட்டுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்  கொண்டதுடன், 13ஆவது  திருத்தத்தை  மாற்றியமைக்கும் நடவடிக்கையினைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் உபாயங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் மிகவும் ஆழமாக கலந்துரையாடினர். மற்றும் 13ஆவது திருத்தத்தினை மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் காட்டிவரும் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 13 திருத்தக்குழுவில் திஸ்ஸ விதாரணவின் பெயர் நீக்கம்-du kunasekara

13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்படாமை அரசாங்கம் நினைத்து செய்த தவறில்லை என்றால், அது அரசாங்கத்தின் இனவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என லங்கா சமசமாஜ கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவிற்கு, திஸ்ஸ விதாரணவையும் பெயரிட வேண்டும் என  லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதிச்செயலர் அனில் டி சொய்சா அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள், தெரிவுக்குழுவில் இடம்பெற செய்யப்பட்டுள்ளபோதிலும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இது பாரிய அநீதியாகும். இது அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக வேண்டுமொன்றே செய்யப்பட்டதாகும் அனில் டி சொய்சா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளராகும் கால அவகாசம் நிறைவு-election box

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்களை இணைத்துக்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது இதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எல்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் குறித்த பெயர்ப் பட்டியல்களை குறித்த பகுதிகளிலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர்களை இணைத்துக்கொள்ள முடியாதவர்கள் அடுத்தமாதம் 5ஆம் திகதிவரை மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தளபதி இலங்கைக்கு விஜயம்- மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பக் பார்வஸ் கயானி இன்றுமாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பையேற்று இங்கு வருகை தந்த ஜெனரல் கயானி, இலங்கையின் முக்கிய இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், நாளை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் பதுளை, தியத்தலாவ இராணுவ பயிற்சி முகாமில் நடைபெறவுள்ள விஷேட நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.