சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர் பத்தரமுல்லையில் படுகொலை-

journalistசிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லை கெமுனு மாவத்தையிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்றுமுற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், அவரது பெற்றோர் தேவாலயத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். திருமணமாகாத இவரது சடலம் வீட்டின் சமையலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையால் அந்த வீட்டுக்கு பழக்கமுள்ள ஒருவரே வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்தில் இறுதியாக கடைமாற்றியுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராக பணியாற்றியிருந்தார். இவரது கொலை தொடர்பிலான விசாரணைக்கு கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்-

mannar puthaikuli (1)மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெறவிருக்கின்ற சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் மனித புதைகுழியை தோண்டும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இரகசிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அன்றிலிருந்து கடந்த வெள்ளி வரையும் 55 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேபாள இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

nepalஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜங்பஹதூர்ரணா இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். யாழ். சென்றுள்ள அவர் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உதய பெரேராவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பினை அடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். அத்துடன் யாழ். கோட்டை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் நேபாள இராணுவ தளபதி விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தில் அவரின் பாரியார் ரோகினி ரணாவும் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 19 இந்திய மீனவர்கள் கைது-

see3யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 19 பேரை இன்று அதிகாலை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா ஜகதாப்பட்டிணம் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 19பேரை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் இவர்களை ஒப்படைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

மாணவனின் மரணத்துக்கு அரசாங்கமே பொறுப்பு: ஆசிரியர் சங்கம்-

ceylonகண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெறும்போது உபாதைக்குள்ளாகி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவர் கடந்த 28ஆம் திகதி கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது வயிற்றில் உபாதை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, குறித்த மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் புதைகுழி விடயமாக பக்க சார்பற்ற விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்-

மன்னார் திருகேதீஸ்வரம் புதைகுழியில் மீட்கப்பட்ட 55 எலும்புக்கூடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்த வேண்டுமெனக்கோரி இவ்வாரம் மன்னாரில் மாபெரும் ஆர்பாட்டமொன்று நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

சிதம்பரபுரம் மக்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு-

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதேயிடத்தில் காணி வழங்குவதற்கு தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 30ஆம் திகதி வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமுக்கு சென்ற அமைச்சர் மக்களின் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 32 வருடங்களாகக் குறித்த நலன்புரி முகாமில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்து வரும் 180 குடும்பங்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக தகவல் அறிந்த மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியதை அடுத்தே குறித்த மக்களுடன் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இம்மக்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் குடியமர்த்த முடியாது. உள்ளக இடம் பெயர்ந்தோருக்கும் இந்தியாவில் இருந்து மீளத் திரும்பிய வர்களுக்கும் என இந்த இடைத்தங்கல் முகாம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தங்கியுள்ள 180 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் நிலையில் வேறு இடங்களில் குடியமர்த்துவது இவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு-

யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார். யாழ். அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவளிப்பேன்-நிஷா தேசாய் பிஸ்வால்-

Pisvalகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் உறுதியளித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நிஷா தேசாய் பிஸ்வாலும் அனந்தி சசிதரனும் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில் அனந்தி சசிதரன் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், அரசியல் கைதிகளின் விடுதலை, வடபகுதி மக்களின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் நான் எடுத்துக்கூறினேன். உலக அரங்கில் எமக்குச் சாதகமான சூழல் உள்ளது. அதை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த நேரம் சரியான நேரமென நம்புகிறேன். நிஷா தேசாய் பிஸ்வாலின் வருகையால் 60 சதவீதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட, காணாமல் போனோர்கள் மற்றும் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிடாமலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் காணாமல் போனோர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை காட்ட வேண்டும். நடுக்கடலில் தத்தளிக்கும் எமக்கு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைக்கொண்டு கரைக்குவர முயற்சிப்போம். இந்நிலையில் தான் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். ஜெனீவா மாநாட்டின் மூலம் சர்வதேசத்திலிருந்து நல்ல பதில் கிடைக்குமென்று நம்புகிறோம் என்றார்.