Header image alt text

அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரை-

sivalaya yaaththirai (1)அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரையானது யாழ். சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் கடந்த சிவராத்திரி தினத்தன்று ஆரம்பமாகியிருந்தது. இவ்வாறு புறப்பட்ட வீரர்கள் நேற்றைய தினம் 12.03.2014 மாலை ஏறத்தாழ 1700 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி முடித்து மீண்டும் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் தமது யாத்திரையினை நிறைவு செய்துள்ளனர். இவர்களை வரவேற்ற வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்கினி ஐங்கரன் அவர்கள் இவ் வீரர்களை வாழத்தியதோடு அவர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் வழங்கி வைத்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறையில் பேரணி-

thesiya sugathara thinam kayts...thesiya sugathara thinam kayts,iதேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ஊர்காவற்றுiயில் இன்று பேரணியொன்று நடைபெற்றது. இன்றுகாலை 9.00 மணியளவில் (13.03.2014) ஊர்காவற்றுறை பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள், போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு ஒர் அணியில் இணைய வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து வளவாளராக கலந்துகொண்ட உழவள மருத்துவர் திரு ரவீந்திரன் அவர்கள், போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் விளைவுகள் தொடர்பாக மிகவும் தெளிவாக விளக்கவுரையாற்றினார் இந்நிகழ்வில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை பனை தென்னை வள அபிவிருத்திச் Read more

யாழ். சென்ற அதிசொகுசு பஸ் எரிந்து சாம்பல்-

bus burned..கொழும்பிலழருந்து யாழ். நோக்கிச் சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்றுஅதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதென கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் பஸ்ஸில் திடீரென பிடித்த தீ வேகமாக பரவிய நிலையில் பயணிகள் அதிஸ்டவசமாக எவ்வித பாதிப்புமின்றி பஸ்ஸை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கனகராயன்குளம் பொலிஸார் நீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் பஸ் முழுமையாக எரிந்த நிலையில் அதனுள் கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான பொருட்களை மீட்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். பஸ்ஸில் பயணித்த சுமார் 50 பயணிகள் வேறு பஸ்ஸில் யாழுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையாளர் கட்சி செயலர்கள் சந்திப்பு-

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அலுவலகங்களை, வேட்பாளர்களின் தராதரம் பாராது அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் அவ்வாறான அலுவலகங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அலுவலகமொன்றை ஸ்தாபிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஏற்கனவே அரசியற்கட்சிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, வெற்று இடமொன்றில் வேட்பாளர்களின் நிழற்படங்களை காட்சிப்படுத்தி, கட்சி அலுவலகங்களை ஸ்தாபிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் குத்திக் கொலை-

untitledஅவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் இலங்கை வர்த்தகர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 20வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் குடியேறிய விசாகீசன் (ஈசன்) என்கிற 40வயதான இந்த தமிழ் வர்த்தகர் வீடுகள் காணிகளை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றுகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும், கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா பொலிஸார் கூறுகின்றனர். தமக்குக் கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து தாம் கொலை இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது வீசாகீசன் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்திற்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை எனவும் அவுஸ்திரேலிய பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் பஸ்களுக்கான கட்டணம் குறைப்பு-

BUsதெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணத்தை குறைப்பதற்கு அதிவேக பஸ் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எல்.ஏ விமலரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, கடுவெலவில் இருந்து காலி வரையான அதிவேக மார்க்கத்தின் பஸ் கட்டணம் 420 ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது. கடுவெலவில் இருந்து மாத்தறையில் வரையில் 500 ரூபா அறவிடப்படுமென எல்.ஏ விமலரத்ன கூறியுள்ளார். இந்த கட்டண திருத்தம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமல்லாது, தனியார் பஸ்களுக்கும் செல்லுபடியாகும் என நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு தொடர்பில் விசாரணை-

mannarமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோடு மற்றும் எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியூடான ஏ 9 வீதியின் 225ஆவது மற்றும் 226ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் காணியொன்றை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மண்டையோடும், எச்சங்களும் அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து காலணி, கைப்பை போன்ற பொருட்களுடன், கறுப்பு நிறத்திலான காற்சட்டை மற்றும் வெள்ளைநிற மேற்சட்டை என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்-

மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும், நாளையும் நடைபெறுகின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தினங்களில் வாக்களித்தத் தவறும், வாக்காளர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி தமது வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தல்கள் செயலகத்தினால் கோரப்பட்டுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கமலேஷ் ஷர்மா சந்திப்பு-

kamalesh Peris meetபொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் லண்டனில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவ பொறுப்பை வகிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுநலவாய நாடுகள் தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்தபோதே வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்ளடக்கப்படும் வகையில் மனிதாபிமான செயற்பாடுகளுக்குரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் வருகையை கண்காணிப்பதற்கு 2.7 பில்லியன் செலவு-

அகதிகளின் வருகையை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எபட் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து ஆளில்லா கண்காணிப்பு வானூர்திகளை கொள்வனவு செய்யவிருப்பதாக பிரதமர் டொனி எபட் தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதி மீளாய்வுக்கு ஜப்பான் நிதியுதவி-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஜப்பான் 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு சமூக மறுசீரமைப்பு வேலைத்திட்டம், வாழ்வாதார மேம்பாடு பெண்கள் அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் மர்மப்பொருள் வெடிப்பு-

imagesCAQZGPQAயாழ். மணியந்தோட்டம் 10ஆம் குறுக்கு வீதியிலுள்ள தோட்டக் காணிக்கு முன்பாக இருந்த குப்பைக்கு இன்று காலை தீ வைத்தபோது அதனுளிருந்து பாரிய சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்துள்ளது. இதனால், எவரும் காயமடையவில்லையெனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று இராணுவத்தினர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 4ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இந்த வேலைத்திட்டம் தெரிவுசெய்யப்பட்ட 55 கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாபபமைச்சின் இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் 130 ஆசிரியர்களும், ஆயிரத்து 500க்கும் அதிகமான மாணவர்களும் பங்குபற்றியதாகவும் அவ்விணையத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விபத்தில் இலங்கையர்கள் காயம்-

karadiyanaru accidentஇந்தியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் (வயது 63) ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இவர்கள் பயணித்த மினிபஸ் டிரக் வண்டியொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. எட்டு நாட்களுக்கு முன்னர் புதுடில்லி வந்த இச்சுற்றுலாப் பயணிகள், தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக ஆக்ரா வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது யமுனா நெடுஞ்சாலையில் நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளனர். மேற்படி சுற்றுலாப் பயணிகளும் பஸ் சாரதியான கைலாஷ் என்பவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.