பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு

Moodyபுதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற கட்சியின் கூட்டம் 20ம் தேதி நடக்கிறது. அதில், பிரதமராக  மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களை பிடித்து வரலாறு காணாத வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 282 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மை பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் அல்லாத தனிப் பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி என்ற சாதனையையும் பாஜ படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான பாஜ பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது அகமதாபாத்தில் இருந்தார். தனது வீட்டில் இருந்தபடி, தேர்தல் முடிவுகளை கவனித்தார்.
பாஜ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும், தான்போட்டியிட்ட வதோதரா தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த மோடிக்கு தொண்டர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அசோகா சாலையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு காரில் ஊர்வலமாக மோடி அழைத்துச் செல்லப்பட்டார். வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் திரண்டு வந்து மோடியை வாழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடியை, பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத்வரவேற்றார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் மோடி பேசுகையில், ”இந்த மகத்தான வெற்றிக்கு மோடி என்ற தனிநபர் மட்டுமே காரணமில்லை. லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டர்களின் அயராத உழைப்பினால் கிடைத்த வெற்றி இது. 4, 5 தலைமுறையாக கட்சிக்காக பாடுபட்டவர்களால் கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை இந்தியாவின் 125 கோடி மக்களுக்கும், கட்சிக்காக தியாகம் செய்தவர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சிக்காக நம் தொண்டர்கள் பலரும் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி இது” என்றார்.
இதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் பாஜ நாடாளுமன்ற குழு கூட்டம்  நடந்தது.  இதில், பாஜ தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மோடி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில், பாஜ.வின் வெற்றிக்கு பாடுபட்ட மோடிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்துக்கு பின் ராஜ்நாத், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் வரும் 20ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இதில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் கலந்து கொண்டு, பாஜ நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடியை தேர்ந்தெடுப்பார்கள். இக்கூட்டத்துக்கு தேஜ கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. பிரதமர் பதவியை மோடி எந்த தேதி யில் ஏற்பார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதுவும் நாடாளுமன்ற கட்சி கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்படும்.
இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பதே பாஜ.வின் குறிக்கோள். இதற்காக, நாட்டை வளர்ச்சிப் பாதை யில் கொண்டு செல்ல வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தேஜ கூட்டணி அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தேர்தலில் மகத்தான வெற்றி பெற உறுதுணையாக இருந்த தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.