Header image alt text

மகிந்த போட்டியிட்டால் படுதொல்வி-எஸ்.பி திசாநாயக்க-

spமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி படுதோல்வி அடையும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் விசேடமாக சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சியின் வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு அவசியம். கட்சியை பிளவடையச் செய்வதில்லை என முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள இரட்டை வாக்குச்சீட்டு முறை பொருத்தமானதாக அமையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பதை விட அமைச்சர்கள் எண்ணிக்கை குறைவதையே மக்கள் விரும்புகின்றனர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவது உகந்தது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

பசிலின் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி-

courts (2)தாங்கள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோத செயல் என அறிவிக்கும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நபர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதம நீதியரசர் கே.சிறீபவன், பிரியசாத் டெப் மற்றும் ரோகினி மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழு இந்த அனுமதியை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு நாட்டின் சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் உரிமை மீறல் இடம்பெறாதென அவர் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதிகள் மனுவை மேலும் விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளனர். மனு தொடர்பில் எதிர்ப்பு இருப்பின் இன்றிலிருந்து இரு மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு விசாரணை ஒக்டோபர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

பிரகீத் காணாமல் போனதன் பின்னணியில் 22 தொலைபேசிகள்-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் 22 தொலைபேசிகள் குறித்து தகவல்களை பெற்றுள்ளனர். குறித்த தொலைபேசிகளுக்குச் சென்ற அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர். 22 தொலைபேசிகளில் பல சிம் காட்கள் இட்டு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த 22 தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டுவந்தது யார் என்பது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சுங்கப் பிரிவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள் குறித்து தகவல் வழங்குமாறு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு அறிக்கையும் கிடைக்கப் பெற்றவுடன் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி வழக்கில் சிக்கியுள்ள சாலியவுக்கு பிணை-

courtsசுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கவென ஏற்படுத்தப்பட்ட ராடா நிறுவனத்தின் முன்னாள் பிரதான இயக்குநர் சாலிய விக்ரமசூரிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 16.9 கோடி ரூபா நிதி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். இதன்போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ம் திகதி சாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ராடா நிறுவனத்தின் முன்னாள் கணக்காய்வாளர் ஜயந்த சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையக விசேட விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின் நேற்றுமாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய தேர்தல் முறையில் தகுதிக்கு இடமில்லை-சோபிதர்-

sofitharதற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முறையில் தகுதியான நபர்கள் பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் இல்லாது போவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மாதுலுவாவே சோபித்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய அத்துரலியே ரத்தன தேரர், 20ம் திருத்தத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சி-

somawansaமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் முதலாவது அரசியல் பேராளர் மாநாடு, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முதலாவது அமர்வானது பொதுமக்கள் முன்னிலையிலும் இரண்டாவது அமர்வு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து. கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவதுடன் கட்சியின் பெயரை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இடம்பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு கொள்கையைத் தயாரிக்க தீர்மானம்-

siruvarசிறுவர் பாதுகாப்பு கொள்கையொன்றை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். சிறுவரின் பாதுகாப்பு பொறுப்பு குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

20ஆவது திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகம்-பொன்சேகா-

sarath fonseka20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாக காணப்படுவதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெக்கிராவயில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி பெரிய கட்சிகள் தமது பலத்தை நிலை நாட்டிக் கொண்டு மக்களை நட்டாற்றில் விடும் நிலையே இந்த 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தினால் உண்டாகும் எனவும், எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் 25 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

கடந்த அரசின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தோல்வி-மங்கள-

mangalaபயங்கரவாதம் மீள தலைதூக்குவதை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு, அமெரிக்க ராஜாங்க செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனை உறுதி செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கம் இலங்கையினுள் போர் அடிப்படையில் தோற்கடிக்கபட்டாலும் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையானது புதிய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் புதிய அரசாங்கமே புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பாவில் அமுல்ப்படுத்த காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

accidentகிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10மணிக்கு இடம்பெற்றுள்ளது. பரந்தனைச் சேர்ந்த துரைராசா சித்திராதேவி ( வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார். விசுவமடுவில் இருந்து வவுனியாவிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அரச பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. அந்த வேளை கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த குறித்த பெண்ணை தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளிலில் வந்துகொண்டிருந்த பெண் ஸ்தலத்திலேயே தலைசிதறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனியார் பேருந்து சாரதியை கிளிநொச்சிப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகன விபத்தில் ஆசிரியர்கள் ஐவர் காயம்-

accidentமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக களுவாஞ்சிக்குடியிலிருந்து திருகோணமலைக்கு, மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வேன் மரமொன்றுடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.பிக்களின் எண்ணிக்கை ஒன்பதாகவே இருக்க வேண்டும்-இரா.சம்பந்தன்-

Sampanthan (3)யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 வருடங்களுக்கு ஒன்பதை விட குறையக்கூடாது. அதனை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாயபூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலும் இது அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சு-

tna (4)கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரச தரப்பினருடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு கொழும்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்;தில் இராணுவத்தாலும் கடற்படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் செய்யவேண்டிய பரவிப்பாஞ்சான், மருதநகர், முகமாலை, இரணைதீவு கிராமங்களை இராணுவத்திடமிருந்து விடுவித்து காணி உரிமையாளர்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. முகமாலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாகவும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவின் உழவனூர், தம்பிராசபுரம், நாதன்திட்டம், புன்னைநீராவி போன்ற காணி அனுமதிப்பத்திரம் இல்லாத மத்திய வகுப்பு திட்ட காணி உரிமையாளர்களுக்கு தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை எட்டப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று, மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி 1 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட் செயலக்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம், மன்னார் குஞ்சுக்குளம், திருக்கோணமலையின் சம்பூர், முல்லைத்தீவின் கோப்பாப்பிளவு ஆகிய கிராமங்களின் மீள்குடியேற்றத் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.

உள்ளுராட்சி தேர்தல் ஒரேதினம் நடத்தப்படும்-அமைச்சர் கரு

karu jeyasuriyaமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களை ஒரே நாளில் எதிர்காலத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான எல்லைகளை நிர்ணயிக்கும் தேசிய குழுவின் இறுதி அறிக் கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை அடிக்கடி நடத்துவது இயலாது. அடுத்துவரும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் தொகுதிகள் முறைமையின் கீழ் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் நாடு முழுவதிலும் ஒரே தினத்தில் நடத்தப்படும். இரு தேர்தல்களையும் ஒரேதினத்தில் நடத்தி முடிப்பது குறித்தும் அரசின் விசேட கவனம் திரும்பியுள்ளது. ஏற்கனவே 234 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் முடிவுற்றுள்ளதோடு மேலும் 88 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதியுடன் முடிவுறவுள்ளது. அதேவேளை தேசிய எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கைக்கு அமைய இனிமேல் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக தெரிவாகும் உறுப்பினர்களின் தொகை 4 ஆயிரத்து 486இல் இருந்து 5 ஆயிரத்து 081 வரையில் 595 உறுப்பினர்களால் அதிகரிக்கக்கூடும்.

Read more

திருகோணமலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு-

missingகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை (27-30) வரை இடம்பெறுமென ஆணைக்குழுவின் நிருவாக உத்தியோகத்தர் எச்.டபிள்யூ. குணதாஸ தெரிவித்தார். குறித்த தினங்களில் அந்த ஆணைக்குழு திருகோணமலை மாவட்டத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சாட்சியங்களைப் பதிவு செய்ய உள்ளது. சனிக்கிழமையும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அந்த இரு தினங்களிலும் மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 326 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி சனிக்கிழமையன்று 157 பேர் விசாரிக்கப்படவுள்ளனர். ஞாயிறன்று 169 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Read more

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்-

maiththiriஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், இத்தாக்குதலானது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலாகும் என கூறியுள்ளார். பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் குடியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை இல்லாதொழிப்பது குறித்து அனைவரது பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு என்ற வகையில் ஆப்கான் பாராளுமன்றத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது மிகவும் வெறுக்கத்தக்கதொரு பயங்கரவாதச் செயலாகும். இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் குடியுரிமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளாகும். அத்துடன் இவர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணுவத்தினர் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் பின்வாங்க கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக போராடி இன்று அதனை வெற்றிகரமாக முற்றாக ஒழித்துவிட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இன்று நிம்மதியுடன் வாழ்கின்றோம். அவ்வகையில் பயங்கரவாதத்தின் வடுக்கள் வேதனைகள் என்ன என்பது பற்றி தெளிவாக அறிந்த நாடு என்ற வகையில், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் என ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் விழாவுக்கு நிதி வழங்கவில்லை-யூஎன்எச்ஆர்சீ-

unhcrவெளிவிவகார அமைச்சினால் இவ்வருட இறுதியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக வந்த செய்தியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிராகரித்துள்ளது. இது முழுப்பொய் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ருப்பர் கொல்வின் கூறினார். புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்த இடங்கொடுக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்ததுடன் இந்த நிகழ்வுக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ண சிங்க, கடந்த 21ஆம்திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த விழாவுக்கு நிதி வழங்குவதன் பின்னாலுள்ள காரணம் பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இலங்கை புலம்பெயர்ந்தோர் சமுதாயம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு செய்ய ஓர் உத்தியோகபூர்வ ஏற்பாட்டை உருவாக்குவதற்காக இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

வவுனியா அரச அதிபரை இடம் மாற்றக்கோரி போராட்டம்-

NPC membersவவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையிலையே மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தினுள் எவரும் உட்செல்ல விடாது மண்டப வாயிலில் அமர்ந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர். வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து கடந்த அமர்வின் போதும் உறுப்பினர்கள் சபை அமர்வை ஆரம்பிக்க விடாது சபை நடுவில் கூடி போராட்டம் நடாத்தினார்கள். அதன் போது அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், அரச அதிபர் இடமாற்றம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாhராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமருடன் கலந்துரையாட உள்ளதாகவும், விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் எனவும் உறுதி அளித்ததால் அன்றையதினம் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் இன்னமும் அரச அதிபர் இடமாற்றம் செய்யப்படவில்லை என கூறியே இன்றைய தினம் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்-

police ...பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவை அவசியம் கருதி பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மீரிகம பொலிஸ் பொறுப்பதிகாரி, மோசடி விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி, ரம்புக்கன பொலிஸ் பொறுப்பதிகாரி, தந்திரிமலை பொலிஸ் பொறுப்பதிகாரி, நுகேகொட வலய பொறுப்பதிகாரி, தலவாக்கலை பொலிஸ் பொறுப்பதிகாரி, முல்லியாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு தெற்கு வலய பொறுப்பதிகாரி, தம்பகல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி, இரத்தினபுரி வலய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேன் திருடப்பட்டமை தொடர்பில் மூவர் கைது-

rob vanவேன் ஒன்றை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் குடாஓய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனறாகலை மாவட்டம் புத்தல உனாவட்டுன்ன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை கொள்ளையடித்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெல்லவாய மற்றும் பெல்வத்த பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

சமிக்ஞையை மீறிச் சென்ற லொறிமீது சூடு, ஒருவர் உயிரிழப்பு-

 gun shootingபொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த லொறிமீது அரந்தலாவ பொலிஸ் சோதனைச் சாவடி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 2.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லொறியில் மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மங்களகம பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தியுள்ளனர். லொறி நிறுத்தாது பயணித்ததால் அரந்தலாவ பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அறிவித்துள்ளனர். அரந்தலாவ பொலிஸார் லொறியை நிறுத்தி போதும் லொறி நிறுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்போது ஒருவர் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். லொறியில் பயணித்த ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் லொறியை மீட்கும்போது அதில் மாடுகள் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

உருத்திரபுரத்தில் 3வயது சிறுமியை காணவில்லை-

missingகிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் 3 வயதான சிறுமியொருவர் நேற்று முன்தினம் தொடக்கம் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி வசித்த வந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதும் அவர் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காணாமல் போனமை தொடர்பாக பெற்றோர் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிறுமியை நாட்டில் இருந்து வேறெங்கும் கடத்திச் செல்லும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதைத் தடுக்க விமானநிலைய அதிகாரிகளுக்கும் சிறுமியின் படங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறுமி தாயாருடன் சென்றிருந்த வேளையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு நாணயம் கடத்த முயன்றவர் கைது-

arrest (2)சென்னை நோக்கி ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தை கொண்டு செல்ல முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 28,000 யூரோ, 4000 பவுன் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் இலங்கை பெறுமதி 51 லட்சத்து 88,267 ரூபா என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

தனுனவின் கோரிக்கை மனு நிராகரிப்பு-

dhanunaதடைசெய்யப்பட்டுள்ள தன்னுடைய கடவுச்சீட்டு தடையை நீக்குமாறும் அரசுடமையாக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீண்டும் வழங்குமாறும் கோரி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் கோரிக்கை மனுவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா நிராகரித்துள்ளார். தனுன திலகரத்ன, ஐந்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தவர் என்பதனால் இந்த கோரிக்கை மனுவை இப்போதைக்கு ஆராய்ந்து பார்க்கமுடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்க கோரிக்கை-

vasஆயுத களஞ்சியசாலையை கொண்டு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்ப்பு இருக்குமாயின் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி அதனை முன்வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.எஸ் மொரயாஸ். சட்டமா அதிபருக்கு கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை-

employment2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கையை நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவிடம் இன்று கையளித்துள்ளதாக சட்டத்தரணி அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தலதா அத்துகோரல பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர். விசேட விசாரணை குழுவொன்றை நிறுவி, அந்த வேலைவாய்ப்பு பணியகத்தில் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பணித்திருந்தது.

உயர்தர வணிகத்துறை மணவர்கட்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு-

8999கா.பொ.த உயர்தர வணிகத்துறை மணவர்கட்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சட்டத்தரனி வே.தேவசேனாதிபதி அவர்களின் முழுமையான அனுசரனையுடன் முல்லைத்தீவு மாவட்ட உதவிக்கல்விப்பணிப்பளர் ததலைமையில் கடந்த 13.06.2015 அன்றுகாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. க.குருகுலராஜா, பாரளுமன்ற உறுப்பினர். கௌரவ. ஈ.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் வட மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.க.இராஜேந்திரம். தற்போதய மேலதிக மாகாணப் பணிப்பளர் ச.கைலைநாதன், கொழும்பு ரோயல் கல்லுரியின் பிரபல விரிவுரையாளர்களான எஸ்.கலாகரன், வி.சோதிலிங்கம் மற்றும் முழுமையான அனுசரனையாளராகிய சட்டத்தரனி வே.தேவசேனாதிபதி அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். 

Read more

ஆப்கான் நாடாளுமன்ற தாக்குதல் அறுவர் உயிரிழப்பு-

455ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தினுள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த சில மணி நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அவைக்குள்ளும், வளாகத்திலும் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், பொதுமக்கள் 31பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் காபுல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கீழவை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு முதல் குண்டுவெடிப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதால் உறுப்பினர்கள் பதற்றமடைந்தனர். நாடாளுமன்றத்தில் செய்தி சேகரித்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் இதனை நேரலையில் ஒளிபரப்பியது. அவைக்குள்ளே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்தின் வெளியேவும் கார் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திலிருந்து அதிக அளவில் புகை வெளியேறியுள்ளது. இதற்கிடையே பாராளுமன்ற வளாகத்தில் இருந்து எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகண களப்புகளின் எல்லைகளை நிர்ணயிக்க நடவடிக்கை-

kalappuநந்திக்கடல் உள்ளிட்ட வட மாகணத்தின் பிரதானமாக காணப்படும் களப்புகளில் எல்லைகளை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கின்றது. களப்புகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை களப்புகளை எல்லைப்படுத்துவதன் ஊடாக அதனை அண்மித்து வாழும் மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படுததோடு மீன்பிடியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். நாடாளாவிய ரீதியில் சுமார் 74 பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள களப்புகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் தம்பலகாமம் பகுதிகளில் உள்ள களப்புகளின் எல்லை நிர்ணயிக்கப்ட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு பூராகவும் உள்ள அனைத்து களப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரபாத் சந்திர கீர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபத்தில் ஒருவர் கொலை, களனி சுற்றிவளைப்பில் பலர் கைது-

murderசிலாபம் மாதம்பே வீரக்கொடியான பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொலையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 42பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்போது சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-
tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா அவர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் கருத்துக் கூறினார்கள். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்தபோதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.  

காலிமுகத்திடலில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

yogaசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலி முகத்திடலில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்ளுர் சமுதாய யோகா மற்றும் ஆன்மீக அமைப்புக்களுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் காலை 6.30 முதல் 8.30 வரை நடைபெற்றன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் கடந்த 2014 டிசம்பர் 11ஆம் திகதி இந்தியாவால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இணை அநுசரணையாளரான இலங்கை உட்பட 170 நாடுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும்படியான இந்த அழைப்பு இந்தியப் பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடியினால், கடந்த செப்டம்பர் 27ஆம் திகதியன்று அவருடைய ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின்போது விடுக்கப்பட்டது. “யோகா உள்ளத்தையும் உடலையும் ஒன்றிணைக்கும் ஒரு உருவாக்கம் ஆகும்: அது சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்குமான ஒன்றிணைந்தவொரு அணுகு முறையாகும். இது தேகாப்பியாசம் பற்றியதல்ல ஆனால் ஒருவரிடமுள்ள தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகும் என நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை-

murderமன்னார் அடம்பன் முள்ளிக்கணடல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தந்தையர் தினம் மற்றும் உலக இசை தினம்-

fathers day......சர்வதேச தந்தையர் தினம் இன்று அனுஸ்ட்டிக்கப்படுகிறது. வருடாந்தம் ஜுன் மாதம் 3வது வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது. உலகின் 52 நாடுகளால் இந்த தினம் அனுஸ்ட்டிக்கப்படும். 1910ம் ஆண்டு முதல் ஜுன் 19ம் திகதி முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் தலைவராக தந்தை ஒருவர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளுக்காக, அவரை கௌரவிக்கும் வகையில் இன்றையதினம் கொண்டாடப்படுகிறது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் திகதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

பல கட்சி ஜனநாயகத்தை ஒழிக்கும் யோசனைக்கு உடன்பட மாட்டோம் – பிரதமர் உறுதி-

Ranilபல்வேறு கட்சிகள் இடம்பெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் எந்த ஒரு தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்துக்கும் தாம் உடன்பட போவதில்லை என, இன்று காலை நடத்தப்பட்ட கூட்டத்தில் பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட சிறு மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தன், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், அனுர குமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன், லால் காந்த ஆகியோரை அழைத்து அலரி மாளிகையில் பிரதமர் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது, பிரதமரிடம் நாம் அனைவரும் எமது சிறு மற்றும் சிறுபான்மை பேரவையின் ஒருமித்த கருத்தை முன் வைத்தோம். இப்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இது இந்த நாட்டிலே இன்று இருக்கின்ற பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு கட்சி அரசியலுக்கு வழி காட்டுகின்றது. இரட்டை வாக்குரிமை தொடர்பாகவும், உறுப்பினர் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. அதைவிட இந்த வர்த்தமானி யோசனைகளில் அடிப்படையில் பல கட்சி அரசியலை ஒழிக்கும் திட்டம் இருக்கின்றது. இந்த அபாயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. வண. சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய வர்த்தமானி பிரகடனத்தில் வெளியாகியுள்ள 20ம் திருத்த யோசனைகளுக்கு எதிராக, பாராளுமன்றத்துக்கு வெளியில் நாம் நடத்தும் போராட்டத்தில் பங்கு வகிக்கவும் அவர் உடன்பட்டுள்ளார். எமது கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் யோசனைகளை ஐதேக ஏற்காது என்றும், இதை பாராளுமன்றத்தில் இந்த யோசனைகள் கொண்டு வரப்படும் போது தெரிவிக்க போவதாகவும், எதிர்க்க போவதாகவும் கூறினார். உடன்பாடுகள் எட்ட முடியாவிட்டால் உடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து முக்கியமான பிரச்சினைகள் திசை திருப்பப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில், புதிய யோசனைகள் தமது கட்சிக்கு பாரிய கெடுதல்களை செய்யப்போவதாக தோன்றவில்லை என்றாலும் நாட்டில் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிறு கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பில் தமக்கு கடப்பாடு இருப்பதை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பிரதமருக்கு தெரியப்படுத்தினார். அத்துடன் வடக்கில் தேர்தல் தொகுதிகளை குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் தாம் ஏற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு  (படங்கள் இணைப்பு)

dfdமுல்லைத்தீவு, உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று (19.06.2015) காலை 9.45மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. க.சிவநேசன்(பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தார். பாடசாலையின் அதிபர் திரு. மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்வி அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Read more