வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் செல்வரட்ணம் லவன் (தோழர் லவன்) அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (05.04.2022) செவ்வாய்க்கிழமை மரணித்தார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
1982களில் மாணவர் அமைப்பின் ஊடாக கழகத்தில் இணைந்துகொண்ட இவர், 1982-1984களில் கழகத்தின் மிகத்தீவிர செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1984ல் யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீட மாணவனாக தெரிவானபோதிலும், வன்னிப்பகுதியில் கழகத்தின் தீவிர அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
1984ன் நடுப்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு 1987 நடுப்பகுதிவரை சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்த இவர், விடுதலையானதும் வைத்தியபீட கற்கையை தொடர்ந்து மருத்துவரானார்.
தோழர் லவன் மருத்துவராக சேவையாற்றிய அதேநேரம் இறுதிவரை கழகத்துடனான தொடர்பினைப் பேணி வந்தார்
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
06.04.2022.