மிரிஹானவில் நேற்று(31) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தக் குழுவில் 20 விசேட அதிரடிப்படை வீரர்கள், மூன்று பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் உள்ளடங்குவதாக பேச்சாளர் கூறியுள்ளார்.
மிரிஹானையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஊடகவியலாளர்கள் நால்வரும் அடங்குவர். இது தொடர்பிலான தகவலை சட்டத்தரணி நுவான் போபகே வெளியிட்டுள்ளார்.
மிரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.