இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, வட பகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை, இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக, மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றஞ்சாட்டினர்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (19) மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மேற்படி சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்   கருத்துரைக்கையில்,

இந்தியாவுக்கு நீண்ட கால  குத்தகை அடிப்படையில் கச்சத்தீவு பகுதி  வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும் மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் பரவலாக அறியக்கூடியதாக இருக்கிறது.

இதன் உண்மைத்  தன்மை, மீனவர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக செயல்படும் எங்களுக்கே இன்னும் தெரியாது.
இருப்பினும், இந்தியத் தரப்பினரால்  தொடர்ச்சியாக கச்சத்தீவு பகுதியை இந்திய மீனவர்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

அதனோடு இணைந்து இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, ஏதோ ஒரு விடயம் கச்சத்தீவு தொடர்பாக பேசப்பட்டு கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
கச்சத்தீவு இந்தியாவுக்கு  வழங்கப்படுமாக இருந்தால் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

உண்மையில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு உரிமை உள்ளதாக இருந்தபோது கூட இந்திய மீனவர்களால், நாட்டின் வட பகுதி மற்றும்  மன்னார் மாவட்ட கடல் பகுதி  தொழில்ரீதியான ஆக்கிரமிப்பின் ஊடாகவும்  ஏனைய கடத்தல் நடவடிக்கையில் ஊடாகவும் கடலில் உள்ள மீன் வளங்கள் அழிந்து, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் இங்கு அதிகமாக பதிவாகியுள்ளன.

இதனால்  பாதிக்கப்படப்போவது எமது வட பகுதி மீனவர்கள் மட்டுமல்ல எமது நாடும் முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இப்போது பொறுப்பேற்று இருக்கின்ற  பிரதமர், அவரோடு இணைந்து செயல் படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக வட பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கச்சதீவு விடயத்தில் அதிக கரிசனை எடுத்து, பொருளாதார நெருக்கடிக்கு எமது இறைமையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இந்த ஊடக  சந்திப்பில்  மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், மன்னார் மாவட்ட கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் ஜஸ்ரின் சொய்சா, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொருளாளர் அன்ரனி சங்கர், வட மாகாண இணையத்தின் உப தலைவர் பாலசுரேஸ் அச்சுதன், மன்னார் பிரதேச சமாசத்தின் தலைவர் ஜோகராஸ் குரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.