2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பற்றியும் இதன் போது ஆராயப்படவுள்ளன. வதிவிடங்களை மாற்றியவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் இடாப்பில் உள்ளீர்ப்பது சம்பந்தமாக இதன் போது கவனம் செலுத்தப்படும். தேர்தல்கள் சட்டதிட்டங்களில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் திருத்தங்கள் பற்றியும் ஆராயப்படும்.