அரச ஊழியர்கள், வேலை வாய்ப்புக்காக 5 வருடங்களுக்கு வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்குவதற்கான சுற்றிக்கையை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இன்று (22) வெளியிட்டுள்ளார்.

சிரேஷ்டத்துவத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், அவர்கள் வௌிநாடு சென்றதன் பின்னரான 2 மாதங்களுக்கு சலுகைக்காலம் வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆவது மாதம் தொடக்கம் அவர்களது பெயர்களில் திறக்கப்பட்ட வௌிநாட்டு கணக்குக்கு டொலர்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், வெளிநாடு செல்லும் ஒவ்வொரு அதிகாரியும் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்ப வேண்டிய அமெரிக்க டொலர் தொகையும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முதன்மை சேவை அதிகாரி மாதாந்தம்100 டொலர்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், இரண்டாம் நிலை அதிகாரி 200 டொலர்களையும் மூன்றாம் நிலை அதிகாரி 300 டொலர்களையும் நிர்வாக அதிகாரி 500 டொலர்களையும் அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதாயின் அவர்கள் சேவையில் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் இன்று முதல் சம்பளமற்ற விடுமுறைக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.