10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.