இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான தொழில்நுட்ப பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தயாராவதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வௌியிட்டுள்ளன. தொழில்நுட்ப பேச்சுவார்த்தை ஊடாக இரு நாடுகளுக்கிடைய ஸ்தாபிக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் கட்டமைப்பின் பௌதீக திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோசனை திட்டத்திற்கமைய,  தமிழகத்தின் நாகப்பட்டிணம் முதல் இலங்கையின் யாழ்ப்பாணம் வரையில் குறித்த குழாய் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு தயாராவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், எரிசக்தியை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பெட்ரோலிய சந்தை சீனாவின் Sinopec மற்றும் அமெரிக்காவின் R M Parks நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் United Petroleum நிறுவனமும் இந்த சந்தைக்குள் பிரவேசிக்கவுள்ளது.

LNG-யிலிருந்து  மின்சாரம் தயாரிக்கும் செயல்முறைக்காக ஏற்கனவே அமெரிக்காவின் New Fortress நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.