ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ரயில்வே நிலையத்தில் கடமையாற்றும் உப ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொழும்பில் இருந்து முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் தாமதமாகியிருந்தன.

இந்த நிலையில், ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வழமையான கால அட்டவணைக்கு அமைய ரயில்கள் இயக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.