இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர், சீன கப்பலின் இலங்கை பயணத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் விஜயமாக இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவை சந்திக்கவுள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, சீன உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலான Shi Yan 6 எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் NARA நிறுவனத்துடன் இணைந்து கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ள சீன கப்பல் 17 நாட்கள் இலங்கைக் கடலில் நங்கூரமிட்டிருக்கும்.
2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், இறுதியில் வந்த Yuan Wang 5 கப்பலையும் இந்தியா உன்னிப்பாக கவனித்திருந்தது.
Shi Yan 6 கப்பலின் இலங்கை விஜயம் தொடர்பிலும் இந்தியா உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதுடன், அது தொடர்பில் இலங்கைக்கு உயர் மட்டத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயம் நிறைவடையும் வரை சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Hindustan Times இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள “ஒரே பாதை ஒரே மண்டலம் மாநாட்டில்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.