இன்று குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக நீண்டநாள் வழக்குக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் சாராம்சம் யாதெனில், இது இரண்டு பிரிவினருக்கிடையிலான முரண்பாட்டினால் மன்றுக்கு கொண்டு வரப்பட்ட வழக்கேயன்றி இந்து அல்லது புத்தவிகாரைக்கான வழக்கல்ல. இதில் வழமையான வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டதோடு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த விதமான கட்டடங்களோ அல்லது நிர்மாணப்பணிகளோ மேற்கொள்ளக் கூடாது எனவும் பணிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் முதலாவது மன்றினுடைய களவிஜயத்தின்போது ஒரு கட்டுமானத்துக்கான அடித்தளம் அவதானிக்கப்பட்டது.
எனவே கட்டளையை மீறி கட்டப்பட்டதை அகற்றும்படி கட்டளை பிறப்பித்க்கப்பட்டது. இருப்பினும் சட்டமா அதிபரின் தினைக்களத்தினால் அது அகற்றப்படும்போது தொல்பொருட்கள் பாதிக்கப்படும் என அறிக்கை சமர்ப்பித்ததால் அதை அகற்றுவதை தவிர்த்து அதேநிலையில் பேணும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் அதன்பின்னரான களவிஜயத்தின்போதும் விகாரைக்கான தூபி கட்டப்பட்டதும், அங்கிருந்த எண்கோண வடிவிலான கல் அகற்றப்பட்டிருப்பதும் அவதானிக்கப்பட்டது. எனவே இச்செயலானது சட்டத்துக்குப் புறம்பான நீதிமன்ற கட்டளையை மீறிய தொல்பொருட் திணைக்கள ஆணையாளரின் செயற்பாடு என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. அத்தோடு இந்நிர்மானப் பணிகளை நிறுத்தும்படி பொலீசருக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தீர்ப்பு வழங்கப்பட்டபோது இவ்வழக்கின் மேல்முறையீட்டாளர்களான க.சிவனேசன் (முன்னாள் வடமாகண விவசாய அமைச்சர்), து. ரவிகரன்(முன்னாள் மகாணசபை உறுப்பினர்), யூட்சன் ஆகியோருடன்
ஆதிசிவன் ஐயனார் ஆலய தலைவர் விக்னேஷ்வரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(பா.உ) எஸ்.கஜேந்திரன்(பா.உ) எஸ்.சிறீதரன்(பா.உ), எம்.ஏ.சுமந்திரன்(பா.உ) இவ்வழக்கிற்கு எவ்வித பிரதிபலனையும் பாராது வாதாடிய, உறுதுணை வழங்கிய சட்டத்தரணிகள், ஐயனார் ஆலய பக்தர்கள், பொதுமக்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.