தேசியத்தை சுட்டெரிக்கும் நெருப்பில், குளிர் காய்வது முறையோ?கடந்த 30ம் திகதி வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டின் சமகால அரசியல் பகுதியில், 13 ம் திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் நிலைப்பாடு சம்பந்தமாக, வவுனியாவில் இருந்து செயற்படும் செய்தியாளர் ஒருவர் தனது கட்டுரையில் முன்வைத்த கருத்துகள் சம்பந்தமாக அவதானம் செலுத்துவது பயனுள்ளதாகப் படுகிறது.
மேற்படி செய்தியாளர், புளொட் அமைப்பு சம்பந்தமாகவும் அதன் தலைமைத்துவம் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிட்டிருந்தவர் என்பதற்கப்பால், 13 வது திருத்தம் சம்பந்தமான அவரது பதிவுகளின் அடிப்படையில் சில விடயங்களை பொதுவில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
“சித்தார்த்தனும் சமஷ்டித் தீர்வு தொடர்பாக எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்” என்றும், “சமஷ்டியை இந்தியா ஆதரிக்கவில்லை. இந்தியா அதனை ஏற்றுக் கொள்ளாது என்று கூறி வருகிறார்” என்றும், “இந்தியா விரும்பாத தீர்வை நாங்கள் வலியுறுத்தக் கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்” என்றும், “பிரதமர் மோடியே 13 ற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றி குறிப்பிடும்போது தமிழ் மக்கள் தங்களின் அபிலாசைகளை 13 ற்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என சித்தார்த்தன் கூற முனைந்திருப்பது வேடிக்கை” என்றும் அந்தச் செய்தியாளர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒருதலைப்பட்சமான கருத்துகளை கடந்து செல்வதே புளொட் அமைப்பின் வழமையான இயல்பாக இருப்பினும், 13 ம் திருத்தத்தின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் அதற்கான நோக்கங்கள் பற்றிய மயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் சமகாலச் சூழ்நிலையில், புளொட் அமைப்பின் நிலைப்பாட்டினை தெளிவான முறையில் வெளிக்கொணர்வது காலத்தின் தேவையாகவுள்ளது.
தமிழ் மக்களுக்குரிய ஆகக் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வானது சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலான புதிய அரசியலமைப்பே என்பது 1987 காலப்பகுதி தொடக்கம் புளொட் அமைப்பின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. காலத்துக்கு காலம் தனது, அதிகாரம் மிக்க பொதுச்சபைக் கூட்ட தீர்மானங்கள் மூலம் அவ் அமைப்பு அதனை உறுதிப்படுத்தியும் வந்துள்ளது.
13 வது திருத்தம் என்பது அதிகாரப் பகிர்வு அல்ல என்பதும், இலங்கையின் நடைமுறை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்குரிய திருத்தம் என்பதும், அது தமிழ் மக்களின் நிரந்தரத் தீர்வுக்கு கிட்டவும் இல்லை என்பதும் புளொட் அமைப்பின் நிலைப்பாடாக இருந்தாலும் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள 13 வதின் அமுலாக்க நடைமுறையில் இருந்து விலகி நிற்கும் மனநிலையில் புளொட் அமைப்பு என்றும் இருந்ததில்லை. சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகள் எதிலும் ஆரம்பப் புள்ளியாக 13 ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே புளொட்டின் எதிர்பார்ப்பாகும்.
தொடர்ச்சியாக, தேசிய இன அரசியல் செயற்பாடுகளில் பங்குகொண்டு வரும் அமைப்பொன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் காணப்படுகின்ற அக, புறச் சூழ்நிலைகளை ஆராய்ந்து ஏற்ற இறக்கங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தந்திரோபாயங்கள் எனும் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
தேசிய இன அரசியலின் இன்றைய யதார்த்தம் எமக்கு என்னத்தைப் புரிய வைக்கிறது எனப் பார்ப்போமானால்,
அ) தெற்காசியாவில் மேற்குலக நாடுகளின் பிராந்திய ஆதிக்கம், பாதுகாப்பு, மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடு ஏற்படும் சூழலுக்கு இடம் கொடுக்காத வரையிலும் ரணிலின் ஆட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த அந்த நாடுகள் விரும்பவில்லை.
ஆ) இலங்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழர் தரப்பின் பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்தி, தமிழர் அபிலாசைகளை பயன்படுத்தி தான் உருவாக்கிக்கொண்ட 13 வது திருத்தத்தை மீறி, ஒரு அரசியல் தீர்வை உருவாக்கவோ தன் எல்லையில் அமைந்துள்ள நாட்டின் அரசுடன் வலுவாக கட்டியெழுப்பபட வேண்டிய உறவினைப் பலவீனப்படுத்தவோ இந்தியா தற்போது தயாராக இல்லை. இந்திரா காந்தியின் விசேட தூதுவர் ஜி. பார்த்தசாரதி தொடக்கம் நரேந்திர மோடியின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரையிலும் மிகத் தெளிவாகவே தம்மால் அனுமதிக்கக்கூடிய, இயலக்கூடிய வரையறைகள் பற்றி புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களிடமும் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளனர்.
இ) மேற்கு நாடுகள் மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஆபத்தான வேளையில் உடனடி உதவி வழங்கும் நாடாகவும், தன்னை மீறி இன்னொரு நாடு இலங்கையில் தலையிட்டால் அதனைக் குழபபக்கூடிய வலுவுள்ள நாடாகவும் பிராந்திய வல்லரசான இந்தியா திகழ்கிறது.
ஈ) ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட கால முடிவில் இந்தியத் தலைமையை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி தனது எதிர்காலச் செயற்பாடுகளுக்கான குழப்பம் விளைவிக்காத ஆதரவை இந்தியாவிடமிருந்து உறுதிப்படுத்த விரும்புகிறார். அவ்வாறான இலங்கையின் சிந்தனையை இந்தியாவும் பயன்படுத்த விரும்புகிறது.
உ) தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை ரணில் முன்னெடுக்கும்போது 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலை வலியுறுத்துங்கள் என்று இந்தியத் தரப்பினர் யாரும் தமிழ் அரசியல் அமைப்புகளிடம் கோரிக்கை முன்வைத்ததாக தெரியவில்லை. மாறாக, ரணில் – மோடி சந்திப்பு நிகழும் காலத்தின் அரசியல் சூழல் கருதி தமிழ் அமைப்புகளே இந்தியத் தலையீட்டுக்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தன. ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவிடம் வேறெதனைக் கேட்க முடியும்? தனிநாட்டை அல்லது சமஷ்டியை பெற்றுத் தாருங்கள் என்றா கேட்க முடியும்?
பட்டு வேட்டிக் கனவில் ஒருபக்கம் கதையெழுதிக் கொண்டிருக்க நாளாந்தம் கட்டியிருக்கும் கோவணம் கிழிக்கப்பட்டு உருவுப்படுகின்ற நிலையை உணர்கிறோம்.
ரணிலின் தெளிவான நிகழ்ச்சி நிரலுடனான சுத்துமாத்து அரசியலையும், இந்திய அரசின் தன் நலன் சார்ந்த தலையீட்டின் எல்லைகளைப் புரிந்து கொள்கிறோம்.
தென்னபிரிக்காவைப் போலல்லாது, இத் தேசத்தில் அடக்கும் சிங்கள சமூகம் பெரும்பான்மையாக இருப்பதையும் நாடாளுமன்ற அரசமைப்பு மூலம் அச் சமூகம் தன்னை வலுவாக்கி ஏனைய இனங்களை வலுவிழக்கச் செய்யும் கைங்கரியங்களைக் கண்கூடாகக் காண்கிறோம்.
பொருளாதார நெருக்கடிகள், சமூக ஏற்ற தாழ்வுகள் காரணமாக தமிழ் இளையோர் சமூகம் தேசியத்தை விட்டு விலகி வேறு நிழல் தேடி ஒதுங்குவது அப்பட்டமாக தெரிகிறது.
கிழக்கில் தமிழர்கள் அநாதரவாக கைவிடப்படும் நிலைமை வலு வேகமாக வளர்வதை நாளாந்தம் அறிகிறோம்.
இவ்வாறானதோர் நிலைமையில், ‘என் அப்பன் யானை கட்டிப் போரடித்தான்’ எனும் தோரணையில் இப்போதும் கருத்துகளைப் பதிவிடுவோர் எவரேனும், தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் என்ன செய்ய வேண்டும்? தென்னிலங்கை அரசாங்கங்களுடன் தமிழ்த் தரப்புகள் எவ்வாறான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்? மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம்தான் தரிக்க வேண்டுமா? தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய ஒரு தீர்மானத்தை எப்போதாவது தெளிவாகக் கூறியிருப்பார்களா யாமறியோம்.
ஏனெனில், இன்னமும் சிலருக்கு சுட்டெரிக்கும் நெருப்பை அணைக்க விரும்பவில்லை. தேசியத்தின் பேரால் அதில் குளிர்காயவே விரும்புகின்றனர்.
கே.என்.ஆர்
02.08.2023