நெடுங்கேணி சிறுமியை பலாத்காரப்படுத்திய படைச்சிப்பாய் அடையாளம் காணப்பட்டார்-

வவுனியா நெடுங்கேணியில் 7வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை, பாதிக்கப்பட்ட சிறுமி இன்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி நெடுங்கேணி, சேனைப்பிலவில் பாடசாலை சென்று வீடு திரும்புவதற்கு காத்திருந்த இச்சிறுமி ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின் பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள பற்றைக்குள்ளிருந்து இந்தச் சிறுமி மீட்கப்பட்டிருந்தார். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் படைச்சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி இன்று வவுனியா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி அண்மையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா உதவி-

இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்கு உதவியளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொழும்பு பத்தரமுல்லயில் அமைந்துள்ள நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம் செய்துள்ளார். அமெரிக்க உதவியுடன் இந்த நவீன ஆய்வுகூட கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இந்த உதவியின்மூலம் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகளைக் கொண்டதாக இந்த ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் வெடிகுண்டு மீட்பு- 

மட்டக்களப்பு காத்தான்குடி நகரிலுள்ள முதியோர் இல்ல வீதியிலிருந்து இன்றையதினம் முற்பகல் 10.30 அளவில், வெடிக்காத நிலையில் 2அடி நீளமான 15கிலோ எடையுள்ள குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வாய்க்காலைத் துப்பரவு செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தபோதே குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. மிகவும் பழுதடைந்த நிலையில் இக்குண்டு உள்ளதாக தெரிவிக்கும் காத்தான்குடி பொலீசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

 யாழ். மணியந்தோட்டத்தில் திருச்சொரூபம் உடைப்பு-

யாழ். மணியந்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கைப் பகுதியில் பொதுமக்களால் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த திருஇருதய ஆண்டவரின் திருச்சொரூபம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே நேற்று முன்தினமிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வழிபாட்டுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களால் ஆயரிடமும், கிராமசேவையாளரிடமும் முறைப்பாடு செய்யடப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலும் புகை பரிசோதனை சான்றிதழ்-

ஜூன் மாதம் 01ஆம் திகதிமுதல் வட மாகாணத்திலும் புகைப் பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் சகல பகுதிகளிலும் தங்போது புகை பரிசோதனையை செய்து கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வாகனப்பதிவு உள்ள அனைவரும் புகைப் பரிசோதனை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை வட மாகாணத்தில புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் அற்கிருந்து தெற்கிற்கு வரும் வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும், தற்போது வட மாகாணத்திலும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் சகல வாகனங்கள் தொடர்பிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற முடியும் என எஸ்.எச் ஹரிஷ்சந்திரி மேலும்; தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை சுவரை உடைத்து கைதி தப்பியோட்டம்;-

கொழும்பு, தெகிவளை பகுதியிலுள்ள கொஹூவல பொலீஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றமை தொடர்பில் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். களவொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தவரே தப்பிச்சென்றுள்ளார். பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூடத்தின் சுவரை உடைத்துக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த தலைமைப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மேலும் இரு பொலீஸ் கான்ஸ்டபிள்களும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக விசேட பொலீஸ்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதுவராக நியமனம்-

இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான மூத்த இராஜதந்திரி சமந்தா பவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சமந்தா பவர், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய தீர்மானங்களை எடுத்து வருபவராக உள்ளார். இதேவேளை, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றும் சூசன் ரைஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவராகச் சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ள நிலையில் சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும், மனித உரிமை விவகாரங்களிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இறுக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படையின் ஹெலிகொப்டர் திடீர் தரையிறக்கம்-

கொழும்பிலிருந்து விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச்சென்ற ´பெல் 412´ என்ற ஹெலிகொப்டர் கட்டுபெத்த மைதானத்தில் இன்றையதினம் காலையில் திடீரென தரையிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் என.;டி விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை-

வவுனியா ஹொரோவப்பத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்று கொள்ளையர்களால் உடைக்கப்பற்று 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. நேற்றிரவு இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வவுனியாவில் அண்மைக்காலமாக வியாபார நிலையங்கள், வழிபாட்டிடங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கலாம்-அமைச்சர் ஹக்கீம்-

தங்களது முந்தைய வசிப்பிடங்களில் இருந்து, 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும், யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்குமே வாக்களிக்கும் வகையில் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தலுக்கு முன்பாக, அமுல்படுத்தும் வகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டுக்கு முன்;, யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களுடைய பெயர்கள் 2009ஆம் ஆண்டுக்கு முந்திய வாக்காளர் இடாப்புகளில் வட மாகாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ இடம்பெற்றிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் 2009ஆம் ஆண்டில் 18வயதிற்கு குறைந்தவர்களாகவே இருக்கவேண்டும். அதற்கு பின்னர் வருகின்ற தேர்தல்களில், அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இரு வருடங்கள் அமுலில் இருக்கும். தேவைப்படின் துறைசார்ந்த அமைச்சர் அதனை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு அமுல்செய்ய முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.