தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமருடன் பேச்சு-

tnaபுதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்திய அரசின் அழைப்பின்பேரில், தமிழ்த் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா சென்றுள்ளனர். இவர்களை இன்று இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளையும் இவர்கள் சந்திக்கவுள்ளனர். நாளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரையும் இவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியர் சிவசங்கர் விடுதலை-

law helpகடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு மொழிபெயர்ப்பிற்காக சென்றிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியக் கலாநிதி இரட்ணசிங்கம் சிவசங்கர் இன்றுகாலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்மீது ஒலிப்பதிவு நாடா வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கடந்த ஆறு மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜாவினால் இவர் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சர்கள் மாநாடு-

பொதுநலவாய நாடுகளின் மகளிர் விவகார அமைச்சர்களின் 10வது மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. தொழில் முயற்சிகளுக்காக பெண்களின் தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்முறை மாநாட்டில் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்சார் பெண்கள் சம்மேளனத்தின் தலைவர் பெட்ரா மிரக்ரலிஸ் தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். டாக்காவில் இன்று ஆரம்பமாகும் மாநாட்டில் இலங்கை சார்பில் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன படகுகளின் பிரசன்னத்திற்கு மீன்பிடி அமைச்சு மறுப்பு-

srilanka flag

சீன மீனவப் படகுகள் இலங்கைக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சு மறுத்துள்ளது. அந்த மீனவப் படகுகள் சில சமயங்களில் இலங்கை கடற்பிராந்தியத்தில் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பெரும்பாலும் சீன மீனவப்படகுகள் இலங்கை தேசிய கொடியுடன் சஞ்சரிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

ராஜித, வாசுதேவ, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-பொதுபல சேனா-

Bodu_bala sanaராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருக்கு தேவையான வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்துச்செல்ல இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேற்படி அமைச்சர்களின் அரசியல் வாழ்க்கையை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அத்துடன் வாசுதேவ, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் நாட்டு மக்களின் உரிமைகளை கொள்ளையிட இடமளிக்கக் கூடாது. பிரிவினைவாத இடதுசாரி அணியில் இருக்கும் சிலர், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை எனக் கூறுகின்றனர். அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு கூறுகின்றனர். அதற்காக அவர்கள் குரல் கொடுப்பார்களாம். முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று நாங்கள் சவால் விடுக்கின்றோம் என கலகொட அத்தே ஞானசாரதேரர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நாவின் இலக்கினை அடைந்த 38 நாடுகள்-

unoபட்டினியை அரைவாசியாகக் குறைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கினை 38 நாடுகள் எட்டியுள்ளன. 2015ஆம் ஆண்டிற்குள் பட்டினியை அரைவாசியாக குறைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. ஐ.நா பொதுச்சபையினால் அறிவிக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இலக்குகளின் பிரகாரம் முதலாவதாக கடுமையான வறுமை மற்றும் பட்டினியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலைதீவு, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளும் இதில் உள்ளடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அல்கய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு தடை-

thalipanஅல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவி;த்தலை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல்கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இப் பட்;டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அல்கய்தா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்-

கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கு புதிய பதில் பிரதி பொலீஸ் மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்;.குணவர்தனவே பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமையேற்றுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளனர். அவர்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும்நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமனம்-

LK policeஉப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சிபெற்ற மேற்படி தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்துகொண்டு, இன்று யாழ்ப்பாணத்துக்கு நியமனம் பெற்று வருகை தரவுள்ளனர் என அவர் கூறியுள்ளார். இவர்கள் வட மாகாணத்தில் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 உயர் நீதிமன்ற தகவல்கள் கணனிக்கு மாற்றம்;-

உயர் நீதிமன்ற தகவல்கள் கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பான தரவுகள் இவ்வாறு கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இலத்திரனியல் முறையில் வழக்குகளை பதிவுசெய்ய முடியும். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். எனவே  நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதம நீதியரசர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க விசேட திட்டம்-

sri india mapஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய இலங்கை கடல் எல்லைக்கு அருகில் முன்னெடுக்கப்படுகின்ற ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்கு இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்படும் படகுகளை நிறுத்தி மீண்டும்  இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதனைத் தவிர இந்திய மீனவர்களின் படகுகளில் அந்த நாட்டின் தேசிய கொடிகளை பறக்கவிட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மீனவ படகுகளில் பதிவு இலக்கங்களும் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என மீனவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜிய ஜனாதிபதியின் பாரியாரும் புதல்வரும் இலங்கை வருகை-

ஜோர்ஜிய நாட்டு ஜனாதிபதியின் பாரியார் சன்ரா எலிஸபெத் மற்றும் அவரது புதல்வரும் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்றுகாலை 8.30 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் இங்கு தங்கியிருந்து இரு நாடுகளுக்குமிடையிலான சுகாதாரம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.