Header image alt text

கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டார்.-

imagesCA47OAWZஇராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப் புலிகளால்  பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய  கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் புலிகளின் 2 விமானங்களும் அழிந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தப்பி சென்றார் தேவியன். ஐரோப்பாவில் இருந்து நெடியவனால் கோபி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தேவியனும் இலங்கைக்கு சென்று இணைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இலங்கை அரசு கோபியுடன் சேர்ந்து தேவியனைப் பற்றியும் தகவல் தரக்கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று நடந்த மோதலில் கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

vaddukottai army roundதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது. நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. இராணுவ பயிற்சியொன்றின் போதே நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு இராணுவ வீரர் உயிரிழந்தார் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

மூவரின் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன- காவல்துறை பேச்சாளர்

kopi and towஅநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாகவும்.  இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும்;. நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கும், இறுதிக்கிரியைகளில் அவர்கள் பங்குபற்றுவதற்கும், அவரவர் கலாசாரத்திற்கமைவாக கிரியைகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவு காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார். ஆயினும் காவல்துறையின் ஏற்பாடுகளுக்கமைவாக, இந்த இறுதிக்கிரியைகளில் இறந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. கோபி என்று படையினரால் குறிப்பிடப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் மாமனராகிய செகராசசிங்கம் பாலகுருபரன், கஜீபனின் சடலத்தைப் பார்வையிட்ட போதிலும், இறுதிக்கிரியைகளில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மகளும், கஜீபனின் தாயாரும் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது பற்றிய தகவல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறினார்

அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் தீக்குளிப்பு

imagesCAJSGE78ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை இரவு தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனை ஒன்றில் உயிருக்காக போராடி வருவதாகவும். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து அகதித் தஞ்சம் கோரினார் என்றும், அவரது கோரிக்கை இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதாலேயே  விரக்தியடைந்த அவர் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தமது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியா சென்றடையும் இவரைப் போன்றவர்கள் பலர் விரக்தி நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் தோழர் நந்தன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்-

nandan...யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், பின்னர் வவுனியா திருநாவற்குளத்தில் வசித்து வந்தவருமான பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) அவர்கள் இன்று 11.04.2014 வெள்ளிக்கிழமை மரணமெய்தினார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த தோழர் நந்தன், மலையக ஏதிலி மக்களை வடக்கு கிழக்கு எல்லைப் பிராந்தியத்தில் குடியேற்றும் காந்தீயத்தின் பணிகளில் அயராது, அர்ப்பணிப்போடு பாடுபட்டவர். 1982களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தம்மை இணைத்துக் கொண்டு ஆயுதப் பயிற்சிபெற்ற தோழர் நந்தன், 1983 முதல் 1986 வரையிலான காலப்பகுதியில் கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டார். கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த சிரேஸ்ட உறுப்பினர் தோழர் நந்தன், கழகத்தின் பணிகளில் தொடர்ச்சியாக மரணிக்கும் வரையில் தனது பங்களிப்பை ஆற்றினார். சில மாதங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் நந்தன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் யாழ். திருநெல்வேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமெய்தினார், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை-

kopi and towபுலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்கின்ற பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகிய மூவருமே கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன. வவுனியா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் இம்மூவரும் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றிரவு அப்பிரதேசங்களைச் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைதுசெய்ய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகநபர்கள், இராணுவத்தினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவத்தையடுத்து நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் மிகவும் வறுமைநிலை-பிரித்தானியா-

vada kilakkil varumaiகடந்த 2013ம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை நேற்று பிரித்தானியா வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பகுதிகள் மற்றும் வடமாகாணத்தின் சில பகுதிகளில் பல்வேறு மனித உரிமைமீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஊடக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமைநிலை தொடர்ந்தும் காணப்படுவதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் அலன் டன்கான் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் மில்லேனியம் இலக்குகளை இலங்கை அடைந்து வருகிறது. எனினும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தொடர்ந்தும் வறுமை நிலைமை காணப்படுகிறது என்றார் அவர்.

விபூசிகா ஜெயக்குமாரியை ஒன்று சேர்க்கக் கோரிக்கை-

vaalvakam (2)கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட விபூசிகா மற்றும் அவரது தாயான ஜெயக்குமாரி இருவரையும் ஒன்று சேர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனக் கோரி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபூசிகாவுக்காக ஒரு முறைப்பாடும், அவரது தாயுக்காக மற்றொரு முறைப்பாடும் ஆணைக்குழுவில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் என விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் கடந்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து 13வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வவுனியாவில் சிறுமியும் தாயாரும் கைது-

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்கிற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16வயது பாடசாலை மாணவியும் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலய மாணவியாகிய இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர தேர்வு எழுதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14வயதான மகள் விபூசிக்காவும் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுவரை 65 பேர் இப்படியான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அவர்களில் 5பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், மிஞ்சியுள்ள 60பேரில் 10பேர் பெண்கள் என்றும் அவர் நேற்று வியாழன்று கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் வாழ்வக மாணவர்கள் நால்வர் சாதாரணதர பரீட்சையில் சித்தி-

vaalvakam (1)யாழ். சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து நான்கு மாணவர்கள் கல்விப பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். ஸ்ரீதரன் யோகதாஸ், கலாமோகன் பிரகான், பொன்னம்பலம் தீபன், வில்வராஜா நாளாயினி ஆகியோரே சித்தியடைந்தவர்களாவர். ஸ்ரீதரன் யோதாஸ் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கடந்த தடவை க.பொ.த சாதாரண தர பரீட்சையை எழுத்தியிருந்தார். தோல் நோயொன்றின் காரணமாக இவரது பார்வை குறைவடைந்துகொண்டே போனது. சாதாரண தரப் பரீட்சையை பார்வைக் குறைபாடோடு மிகவும் கஸ்டப்பட்டே எழுதியிருந்தார். இரண்டு கண்களும் தற்போது பார்வையிழந்த நிலையில் சுன்னாகம் வாழ்வகத்தில் தொடர்ந்தும் படிப்பதற்காக தங்கியுள்ளார். இவருக்கு 5ஏ, 2பி, 2சி, 3எஸ் என பெறுபேறுகள் கிடைத்துள்ளன. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இவர் கற்றலை மேற்கொண்டுள்ளார். வில்வராஜா நளாயினி வன்னிப் போரின்போது இரண்டு கண்களையும் இழந்தார். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மாணவியான இவருக்கு 2ஏ, 2பி. 2சி 1எஸ் என 7 பாடங்களில் சித்திபெற்றுள்ளார்.

கமலேந்திரனின் வெற்றிடத்திற்கு தவராசா நியமனம்-

epdpவடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்த ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கந்தசாமி கமலேந்திரன் கொலை குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உறுப்புரிமை நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்குமாறு வடமாகாண சபை தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியிருந்தது. இதன்படி கமலேந்திரனின் வடமாகாண சபை உறுப்பினர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் கமலேந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த சின்னத்துரை தவராசாவை தேர்தல்கள் ஆணையாளர் நியமித்துள்ளார். இதனடிப்படையில் சின்னத்துரை தவராசா எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நியமித்துள்ளது. இந்நிலையில் தாம் விரைவில் வடமாகாண சபையின் உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக தவராசா கூறியுள்ளார்.

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் ஒளிநூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும்-

unnamed (1)unnamed (6)unnamed (5)unnamed (4)unnamed (7)unnamed (9)unnamed (10)முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் குமுழ ஒளிநூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் நேற்று (09.04.2014) புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை பிரதி தவிசாளர் ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், மேரிகலா ஆகியோரும், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னைநாள் வவுனியா உப நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் விழா மேடைக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.

சர்வதேச கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்-பிரித்தானியா

imagesCA5L8U3Dஇலங்கை அரசு சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு, இலங்கை சர்வதேச சமூகம் தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலும், மேற்கொள்ள வேண்டிய விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகளின் ஊடாக இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் நல்லாட்சியுடன் கூடிய நாடொன்றை உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. விசாரணையை இந்தியா விரும்பவில்லை-சுஜாத்தா சிங்-

sujatha singhஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விசாரணை செய்வதை இந்தியா விரும்பவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாத்தா சிங் சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், உள்ளக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதனை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை தமது வரையறைக்கு அப்பாற்பட்டு இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள முனைகின்றது. இதனை இந்தியா விரும்பவில்லை. இதேவேளை, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே இந்தியா எதிர்பார்க்கிறது என்பதை இலங்கை நன்றாக அறியும். எனவே, இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதை இந்தியா தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வட மாகாணசபை செயற்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும்-அமைச்சர் திஸ்ஸவிதாரண-

Tissaவடமாகாண சபையின் செயற்பாட்டுக்கு மத்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவித்தாரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தற்போது சர்வதேச அழுத்தங்கள் மேலோங்கியுள்ளன. இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு வடமாகாண சபையுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு வினைத்திறனாக செயற்படுவதற்கு, தமிழ் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலமே சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களை கட்டுப்படுத்த முடியும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு சமிக்ஞை ஒன்றை வழங்கி இருக்கின்றனர். அதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியோரை தண்டிக்க தீர்ப்பாயம்-

Jathika Hela Urumayaதமிழ் பிரிவினைவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தண்டனை பரிந்துரை செய்யவென தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் பிரதிப் பொதுச் செயலாளர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். தீர்ப்பாயத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அறிஞர்களுக்கு தண்டனை பரிந்துரை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின் அதனுடன் தொடர்புடை அனைத்து தரப்பினரையும் அழிப்பது மேற்குலக வழக்கம். ஆனால் இலங்கை பௌத்த வழக்கத்தின்படி மன்னிப்பு அளித்து மறந்துவிட தீர்மானித்தோம். மேலும் ஆயுத போராட்டத்தின் பின் அதன் அரசியல் பிரிவை தடை செய்யாதிருந்த ஒரே நாடு இலங்கையாகும். சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் உண்மை கதையை சொல்ல வேண்டியுள்ளதால் தீப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளை மீள் கட்டியெழுப்ப உதவிய 65 பேர் கைது-பொலீஸ் பேச்சாளர்-

imagesCA47OAWZபுலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ததாகக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பணம் இவர்களிடம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கும் விசேட நீதிமன்றங்கள்-அமைச்சர் ஹக்கீம்-

Hekeemசிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக துரிதமாக விசாரிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாகாணங்களிலும் விஷேட நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் தற்பொழுது கொழும்பு, யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் செயற்படுவதுடன் கண்டி மற்றும் குருநாகலிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளின் இரகசிய தன்மைகளைப் பாதுகாக்கும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுவாக வழக்ககளில் சந்தேகநபர்களின் புள்ளி விபரங்கள் பேணப்படுகின்ற போதிலும் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் கற்பழிப்பு தொடர்பான குற்றவாளிகள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் பெறமுடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளுக்கு தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை-

telephone facilities for jailசிறைக் கைதிகளுக்கு தொலைபேசி அழைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் அமைக்கப்படவுள்ள விசேட தொலைபேசி கூடத்தில் சிறைக் கைதிகள் அழைப்புகளை எடுக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். சிறைக்குள் இருந்து கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இத்திட்டம் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு இல்லாததால் கைதிகள் சட்டவிரோதமான முறையில் கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றனர். திட்டத்தின் ஆரம்பமாக நாளை கொழும்பின் வெலிக்கடை சிறையில் தொலைபேசி கூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. தொலைபேசி அழைப்பு எடுக்கும் கைதியின் கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள்-

imagesயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் 5 கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச் சம்பவத்தையடுத்து பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு சென்றிருந்தனர். தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதன்போது திருடர்கள் கொண்டு வந்ததாக நம்பப்படும் மதுபான டின் ஒன்று மட்டுமே பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும் 12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராயில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சிறைக் கைதிகளை பார்வையிட புத்தாண்டில் வாய்ப்பு-

velikadaதமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறித்த இரு தினங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை, சிறைக்கைதிகளை பார்வையிடவும் விரும்பினால் உணவுகளை வழங்கவும் முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். இதன் பிரகாரம், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரண நாட்களில் சிறைக்கைதியொருவரைப் பார்வையிட அவரின் உறவினருக்கு சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இந்த புத்தாண்டு தினங்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை சிறைக்கைதிகளைச் சந்தித்து பேச முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் பொலிஸார் எனக் கூறி கொள்ளை-

kalavuவவுனியா கற்பகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.10அளவில் வீடொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற நால்வர், தாம்மை பொலிஸார் என கூறி வீட்டினுள் சோதனை நடத்த வேண்டும் என அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றதாகவும் வந்தவர்கள் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்திருந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை பிரிமா தொழிற்சாலையில் தீ விபத்து-

prima corporation trincoதிருகோணமலை, சீனக்குடாவிலுள்ள பிரிமா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அத் தீயை விமானப்படையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க பயணம் ஐநா விசாரணைகளை பாதிக்காது-இரா.சம்பந்தன்-

sampanthanஇலங்கை விவகாரம் பற்றி பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்வது ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைக்கும் இந்த விஜயத்திற்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார். மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாப்பிரிக்கா சென்று பேச்சு நடத்துவதாக முன்கூட்டியே முடிவாகியிருந்தது. அப்பேச்சுக்களுக்கான அழைப்பை தென்னாபிரிக்கா விடுத்திருந்த பின்னணியிலேயே, புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஆர்.சம்பந்தன் கூறியுள்ளார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகலவிதமான விடயங்கள் பற்றியும் இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும். சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல. அரசாங்கம் இத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு-

unnamedவடக்கு மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மிக விரைவில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது எமது கடமை. இருப்பினும் கடந்த காலங்களில் அவர்களால் கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை. எனினும் கடந்தவாரம் அவைத்தலைவரால் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உறுப்பினர் அனந்தி சசிதரன் நேரடியாக என்னைச் சந்தித்து கடிதத்தினை ஒப்படைத்திருந்தார். இதன்படி அவற்றை நான் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரது பதில் கிடைக்கப்பெற்றதும் மிகவிரைவில் அவர்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் அமர்த்தப்படவுள்ளனர். மேலும் அனுமதி கோராதவர்களும் தமக்கு பாதுகாப்பு தேவை என அனுமதி கோரினால் நாம் வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் அமைச்சர்களுக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ ஏதாவது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படுமானால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது எனக்கோ தகவல் தந்தால் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர் கைது-

imagesCA5PZGM2வடக்கில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் முன்பு புலி உறுப்பினராக இருந்து புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (வயது-30) என்பவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். இவர் யாழ்.பருத்தித்துறை முனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஐந்து மீனவர்களை விட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபர் இவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருக்கையில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிறு இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர். பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பலநாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வடக்கில் ரி.ஐ.டியினரால் சுமார் 50இற்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒருமாத காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை-

robberyவவுனியா, கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சிறிய துப்பாக்கிகளுடன் வந்த நால்வரால் நேற்றிரவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்தாகவும் வவுனியா தலைமையக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியில் முரண்பாடு இல்லை-மனோகணேசன்-

mano ganesanஜனநாயக மக்கள் முன்னணியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை என கட்சியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்து;ளளார். கட்சியின் செயற்பாடுகளையும் தீர்மானத்தையும் விமர்சித்தமைக்காக கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து நல்லையா குமரகுரூபரன் பதவி விலக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிரக்கின்றன. எனினும் இதனை நிராகரித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், இத்தீர்மானம் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒத்தூதி பதவியை தக்கவைக்க தயாரில்லை, ஆதலால் விலகுகிறேன்-குமரகுருபரன்-

kumaraguruparan 01ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகுவதாக அதன் முன்னாள் பிரதித் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து தான் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மனோ கணேசனே தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் உள்ள ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோ கணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. குறித்த இடைநீக்கமும், பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கலும் சட்ட ரீதியாகப் பிழையானது. இது போன்றதொரு முடிவெடுப்பதற்கான கூட்டம் இரவோடிரவாக கூட்டப்பட முடியாது. மாறாக குறித்த கால அவகாசத்தில் அரசியல் குழுவிலுள்ள யாவருக்கும் முறையான அழைப்பும், குறித்த பிரேரணை தொடர்பான முறையான அறிவித்தலும், நிகழ்ச்சி நிரலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். Read more

வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் பஜனை பாடசாலை திட்டம்-

pajanai padasalai (1)

யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்களின் பஜனைப் பாடசாலைத்திட்டம் இன்று (08.04.2014) செவ்வாய்க்கிழமை யாழ். சித்தன்கேணி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பல மாணவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்-

வலிமேற்கு பிரதேச சபையில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு-

ulaga neer thinam (1)ulaga neer thinam (2)உலக நீர் தினம் இன்று (08.04.2014) செவ்வாய்க்கிழமை வலிமேற்கு பிரதேச சபையில் உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது,

இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது,

இன்று நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுள் நீர்ப் பிரச்சனை மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. சுத்தமான குடிநீரை பெறுவதற்கு நாம் மிக கஸ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர்; புத்தகங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடம் ஆபிரிக்கா என்றும் அங்கு நீரை பெறுவதற்கு பல மைல் துரம் நடக்கவேண்டி உள்ள நிலை இருப்பதையும் புத்தகங்களில் பார்த்தோம். ஆனால் இன்று அவ் நிலைமையை நாம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. மிக மோசமான வகையில் நீர்ப் பிரச்சனையை நாம் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

Read more

பிரதி தலைவர் பதவியிலிருந்து குமரகுருபரன் நீக்கம்-

kumaraguruparan 01ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் கட்சி அங்கத்துவமும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியை தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எந்த ஓர் ஊடக, சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை உடனடியாக என்.குமரகுருபரனிடம் இருந்து அகற்றப்படுகிறது என்று அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாமை, பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை, தேர்தலின்போதும் தேர்தலின் பின்னரும் கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறியமை மற்றும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை முன்வைத்தே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குமரகுருபரன் நீக்கப்பட்டதையடுத்து கட்சியின் உபதலைவர் வெற்றிடத்துக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்-

thakaval tharavumபொலிஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கோபி, இவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் அல்லது காசியன் என அழைக்கப்படுவதுடன், 31 வயதுடைய இந்த நபர் 6 அடி உயரமும் பொது நிறமும் கொண்டவர். அப்பன். இவர் புலிகள் இயக்கத்தின் புலனாவுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு 36 வயதுடைய இவர் 5 அடி 2 அங்குலம் உயரமுடையவர். தேவன். இவர் ராதா படையணியின் விமானி என்பதோடு, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய நபர்களில் இவரும் ஒருவர். இவர் தேவன் என அழைக்கப்படுகிறார். இவர்கள் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112321838 எனப்படும் தொலைநகல் ஊடாகவோ தகவல் தரும்படி பொலிஸார அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை-

imagesCA47OAWZமலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் சந்தேகநபர் நந்தகோபனிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலின்கீழ், சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார். புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய புலி உறுப்பினரான நந்தகோபன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயற்சித்தபோது, மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு, ஆறு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நந்தகோபன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். யுத்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையில் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நந்தகோபனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொலீஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்-அமைச்சர் பீரிஸ்-

GL-Peirisஐக்கிய நாடுகளின் சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் இவ்விடயத்தினை கூறியுள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நியாயம் உள்ளிட்ட சிக்கல்களினால் ஐ.நாவின் விசாரணையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாது, விசாரணைகளுக்காக எவரும் நாட்டிற்கு வருகைத்தர முடியாது என அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு-

untitledமட்டக்களப்பு வாகனேரி மாந்திராறு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சட்டவிரோத வெடிபொருட்கள் இன்றுகாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மெகசீன்களும், டீ-55 ரக குண்டுகள் சிலவும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் புதைகுழி, பண்டைய மயான பூமி-

mannar pandaya mayanamமன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய புதைகுழி, ஒரு தொகை சடலங்களை ஒருங்கே கொண்ட மனிதப் புதைகுழி அல்லவென தொல்பொருள் அகழ்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய மரபுரிமங்கள் தொடர்பான அமைச்சர் ஜகத் பாலசூரிய இத்தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த மனித எச்சங்கள் 1930ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதைக்கப்பட்டவையாகும். அது பண்டைய மயான பூமி எனவும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையுடன் விமான சேவை-

imagesCA2V43VHஅபுதாபியை தளமாகக் கொண்டுள்ள ரொட்டனா ஜெட் விமான சேவை இலங்கையுடனான விமான சேவையினை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் ஊடாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையங்கள் சர்வதேச ஜெட் சேவையுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியின் அல் பற்றீன் விமான நிலையத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று சேவைகளை இலங்கையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மலேசிய விமானம் மாயமாகி ஒரு மாதம் நிறைவு-

airமலேசியா பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அவுஸ்திரேலிய அரசு, இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சில சிக்னல்களை கண்டறிந்ததாக கூறியது. விமான கருப்புப் பெட்டியிலிருந்து வரும் சிக்னல்களாக கருதப்பட்டு, அதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பெர்த் பகுதிக்கு வடமேற்கே உள்ள கடல் பகுதியில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. Read more

தென்னாபிரிக்க அனுசரணையை பெறுவதில் தவறில்லை-அமைச்சர் வாசு-

vaasudevaஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான தவறும் இல்லை. அது வரவேற்புக்குரியதாகும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் பிரச்சினை அல்ல என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஐனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். மேற்குலகம் எமக்கு அதை செய் இதை செய் என்று கட்டளையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை எதிர்க்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்வது நல்ல விடயமாகும். ஏனென்றால் தென்னாபிரிக்காவில் யுத்தத்தின் பின்னர் அவர்கள் எப்படி இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்றும், மீள்கட்டமைப்பினை உருவாக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் கூட்டமைப்பினர் தெரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசாங்கம் தடை விதித்தவர்களுள் 32 பேர் இந்தியாவில்-

imagesCA47OAWZநாட்டில் மீண்டும் விடுதலை புரட்சிக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், அரசாங்கம் கடந்தவாரம் புலிகள் இயக்கம் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்திருந்தது. அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் உள்ள 422 நபர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 32பேர் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 32 பேர்களில் 6 பேரின் இந்திய முகவரி மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள மற்றையவர்கள் தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை கைதுசெய்ய சர்வதேச போலீசாருக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

திருமலையில் மற்றுமொரு கைக்குண்டு மீட்பு-

granadeதிருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் வீடொன்றின் பின்புறதிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றுமாலை கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திருமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பஹ்ரெய்ன் விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பஹ்ரெய்ன் நாட்டுக்குச் செல்லவுள்ளார். இம்மாதம் 28ம் திகதி ஜனாதிபதி பஹ்ரெய்ன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி, பஹ்ரெய்னுடன் உறவை பலப்படுத்தும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பஹ்ரெய்ன் பிரதமர் 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

செல்வாக்கு மிக்கவர்களுள் ஜனாதிபதிக்கு 34ஆவது இடம்-

‘எசியன் அவார்ட்ஸ்’ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தை இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நான்காம் இடத்தில இந்திய பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் ஷெல் மற்றும் கண்ணிவெடி மீட்பு-

kannivedi kunduயாழ்ப்பாணம் மாவைக்கலட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் இருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஆட்லெறி ஷெல் ஒன்று நேற்றுமாலை மீட்கப்பட்டதாக காங்கேசன்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். மாவைக்கலட்டிப் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தமையினால், மீள்குடியேறும் நோக்குடன் வீட்டு உரிமையாளர் தனது வளவினைத் துப்பரவு செய்யும்போது, நிலத்தில் வெடிக்காத நிலையில் புதையுண்டிருந்த ஷெல் ஒன்றினைக் கண்டுள்ளார். இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இராணுவத்தினருடன் வந்த பொலிஸார் ஷெல்லினை மீட்டுச் சென்றனர். இதேவேளை, அச்சுவேலி இடைக்காடு அக்கரைப் பகுதியிலுள்ள மைதானமொன்றிலிருந்து கண்ணிவெடி ஒன்ற நேற்று (மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பை மாற்றி ஆட்சியிலிருக்க வேண்டிய அவசியமில்லை-சந்திரிகா-

chandrikaநாட்டில் நேர்மையான நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்திற்கு பேராசை பிடித்தவர் நானல்ல. அதனால் தான் ஆட்சியிலிருந்து செல்லும்போது மிகவும் ஏழ்மையாகவே சென்றேன். எனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த காணிகளை விற்றுத்தான் தற்போது நான் வாழ்க்கையை கொண்டு செல்கிறேன். அரசியல் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டு 5 அல்லது 6 வருடங்கள் ஆட்சியில் இருக்கவோ அல்லது சாகும்வரை பதவியில் இருக்கவோ வேண்டியதில்லை. நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது இருதடவைகளுக்கு மேல் பதவியில் இருக்கப்போவதில்லை என எனது பிள்ளைகளுக்கு உறுதி மொழியளித்தேன். அதற்குபின் நான் வீட்டில் ஓய்வாக இருப்பதாக கூறினேன். ஆனால் தாங்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவில்லை. Read more

நிறைவேற்றப்பட்ட பிரேரணை அமெரிக்காவின் வஞ்சக செயற்பாடு-ரஜீவ விஜேசிங்க-

rajeeva wijesingheஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, அமெரிக்காவின் வஞ்சக செயற்பாடு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க அல்ஜெசீரா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். அமெரிக்கா தமது வஞ்சமான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த பிரேரணையை தந்திரமாக நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் பிரேரணைக்கு தேவையற்றவை. மதங்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமைமீறல் போன்ற விடயங்கள் தொடர்பில் அனைத்து நாடுகளையும் அறிக்கைப்படுத்தினால், அமெரிக்காவும் சிக்கலுக்குள்ளாகும் என்றார் அவர். இதேவேளை அல்ஜெசீராவுக்கு கருத்து வெளியிட்டுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத் தலைவர் பாக்கிசோதி சரவணமுத்து, இந்த பிரேரணை ஊடாக எவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா? என்பதும் ஒரு சவாலான விடயமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது தொடர்பில் பதில் இல்லை-

KACHCHATIVEஇலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவது குறித்து இந்திய அரசாங்கம் இன்னும் பதில் கூறாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடித்துறை திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் கடந்த ஜனவரியில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு தமிழக அரசு எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் இரண்டு தடவைகள் கோரிக்கைளை முன்வைத்திருந்த போதும், இந்திய அரசாங்கம் இன்னும் பதில் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கை மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள துரித திட்டம்-

un manitha urimai peravaiஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002-2009ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கென விசேட நிபுணர்குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இவ் விசேடகுழு அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இக்குழு தனது விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் 27வது அமர்வின்போது இந்த குழு வாய்மொழிமூலமான அறிக்கையை முன்வைக்கவுள்ளது. இதன் பின்னதாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென கூறப்படுகிறது.

வில்பத்து பகுதியில் குடியேறிய முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவு-

vilpattuவில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்துமீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு வெளியேறாவிட்டால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரியவந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சகோதர மொழிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவது குறித்து முடிவில்லை-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் வருவதற்கு விசா வழங்குவது குறித்து இன்னும் அரசாங்கம் முடிவெடுக்கவில்லை என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவிக்கின்றார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விசாரணைக்குழு தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் விசா வழங்குவது குறித்து எதுவும் கூறமுடியாதெனவும் பிரதியமை;சசர் நியோமல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பு-

aarpaattamகுடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இப் பணிப் பகிஷ்கரிப்பினால் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களுக்கான சிகிச்சைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் தீப்தி பெரெரா குறிப்பிட்டுள்ளார். பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் இரு தரப்பினருக்கும் தெளிவுபடுத்தியுள்ள போதிலும் அவர்கள் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவத்தாதி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மகப்பேற்று பயிற்சியை நிறுத்துமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம்-

பாகிஸ்தானின் பாதுகாப்பு படையணிகளின் இணைத் தலைமைத் தளபதி ஜென்ரல் ரஷாட் மஃமூட் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவர் தளபதியாக பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது விஜயம் இதுவென கூறப்படுகிறது. இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் அழைப்பிற்கமைய இலங்கைவரும் அவர் எதிர்வரும் 11ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் அவர் தங்கியுள்ள காலப்பகுதியினில், பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர் மட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அதேவேளை, இலங்கையின் பல பாகங்களில் உள்ள பாதுகாப்பு படைத்தளங்களுக்கும் அவர் விஜயம் செய்வார் என பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிக வாகன பரிமாற்றம்-

hambantotaஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் ஊடான வாகன பரிமாற்று வர்த்தகம் முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் இந்த துறைமுகத்தில் 79 ஆயிரத்து 147 வாகனங்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. அத்துடன் 36 ஆயிரத்து 401 வாகனங்கள் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்ப்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இவ்வாறான அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கே இந்த துறைமுகத்தின் ஊடாக அதிக அளவில் வாகன பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ஜனநாயக கட்சி கோரிக்கை-

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைக்கான விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையாளரை கடிதமொன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது. விருப்பு வாக்குகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு 72மணித்தியாலங்களுக்கு பின்னர் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டு மற்றுமொரு பட்டியல் வெளியிடப்பட்டதே காரணமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையாளரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் இது குறித்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ஏ. மானவடு தெரிவித்துள்ளார்.

தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் வீதியில் விநாயகர்சிலை உடைப்பு-

vinayagar silaiமன்னார் மாவட்டத்தின் தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் (ஏ32) பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த விநாயகர்சிலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்றுகாலை முறைப்பாடு செய்துள்ளதாக இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா தெரிவித்துள்ளார். தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியோரத்தில் பல வருடங்களாக வீற்றிருக்கும் மேற்படி விநாயகப் பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகளை திருக்கேதீஸ்வர கிராம மக்கள் மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி வீதியூடாக பயணிக்கும் மக்களும் இந்த விநாயகப்பெருமானை வழிபட்டு வந்தனர். இந்நிலையிலேயே நேற்றிரவுஇனந்தெரியாதோரினால் மேற்படி விநாயகர்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி வீதியூடாகச் சென்ற மக்கள் விநாயகப்பெருமான் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமையைக் கண்டு தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா மேலும் கூறியுள்ளார்.

ஆஸி. செல்ல முயற்சித்த 26பேருக்கும் ஒரு கோடி ரூபா பிணை-

ரோலர் படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது இந்தியாவின் அந்தமான் தீவு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 26 பேரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஐ.எம்.பண்டார கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கோடி ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். இவர்களில் 20பேர் வயது வந்;தவர்களாவர். ஆறு பேர் சிறுவர்களாவர். பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கடந்த வருடம் ஜுலை 14ஆம் திகதி அம்பாந்தோட்டை கிரிந்த பிரதேசத்திலிருந்து ரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக 31-7-2013 அன்று குறித்த படகு அந்தமான் தீவில் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட 26 பேரும் ஸ்பை ஜெட் விமானம் மூலமாக கடந்த புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பல இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள கட்டுநாயக்க பிரிவினர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, மேலதிக நீதவான், 20 பேரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், சிறுவர்கள் அறுவரையும் பிணையின்றியும் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேரணையுடன் ஒத்துழைத்து செயற்பாட்டால் இலங்கைக்கே நன்மை-மிச்சேல் ஜே சிசோன்-

ஐக்கிய நாடுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையைத் தொடர்ந்து, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கம் இடையிலான ராஜதந்திர உறவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதகரத்தின் இணையத்தளத்தில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தாம்இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்டிருந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றமின்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்கதல்கள் போன்றன இந்த வருடமும் கவலைக்குறிய விடயங்களாக இருக்கின்றன. துரதிஸ்டவசமாக இந்த வருடமும் அவற்றில் மாற்றம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும் இலங்கை மக்களின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பட அமெரிக்கா தயாராக இருக்கிறது. இதேவேளை சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு கோரியுள்ள அமெரிக்காவின் பிரேரணையுடன் இலங்கை ஒத்துழைத்து செயற்படுவதால், இலங்கைக்கு நன்மைகளே ஏற்படும் என்று மிச்சேல் ஜே சிசோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை-

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை முழுமையாக அமுலாக்கப்பட்டு, சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு, சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூற வேண்டிய செயற்பாடுகளும், மனித உரிமை மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த செயற்பாடுகள் இலங்கையை நிலையான சமாதத்துடன் கூடிய பலமான நாடாக மாற்றும். இந்நிலையில் அவற்று வழி செய்யும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு என்பவற்றின் உறுப்பு நாடுகளுடன் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என டேவிட் கெமரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்-வை.கே.சின்ஹா-

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதற்காக இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து நடக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

கொடிகாமத்தில் தனியார் பேருந்து வழிமறித்து சோதனை-

யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் மர்மப்பொருள் இருப்பதாகக் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து அந்த பேருந்து கொடிகாமத்தில் வைத்து வாகனத்தில் வந்த பொலிஸாரினால் இன்று சோதனையிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு அவர்களின் உடமைகள் அனைத்தும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இன்றுகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் அவ்விடத்தில் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த பஸ்ஸிலிருந்து எவ்விதமான மர்மப் பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை அரசியம் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு-

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை குறித்து, இந்தியா வாக்களிக்காதிருக்க மேற்கொள்ளப்பட்ட முடிவானது, அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நலன் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழர் ஆதரவு அமைப்புகள் மௌனம்-

எதிர்வரும் லோக்சபா தேர்தல் தொடர்பில், தமிழகத்தில் இயங்கும், ஈழ ஆதரவு அமைப்புகள் இன்னும் தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 24ம் திகதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் இந்த தேர்தல் நிமித்தம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அங்கு செயற்படுகின்ற அமைப்புகள் தங்களின் செயற்பாடுகளை இன்னும் வெளிப்படுத்தாதிருக்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மே 17 இயக்கம், தங்களின் இறுதி நிலைப்பாட்டை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூறியுள்ளது. அதேநேரம் ஜெயலலிதாவின் அனைத்திந்திய அ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் 9982 மாணவர்கள் சித்தி-

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. நடந்து முடிந்த 2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வடக்கில் 65.33வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன்படி கடந்த 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் 15ஆயிரத்து 820பேர் பரீட்சைகளுக்கு தோற்றி 9ஆயிரத்து 982பேர் உயர்தரத்திற்கு தகுதியடைந்துள்ளனர். வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 8396 பரீட்சார்த்திகளும், வவுனியாவில் இருந்து 2478 பேரும், மன்னாரிலிருந்து 1517 பேரும், முல்லைத்தீவிலிருந்து 1318 பேரும், கிளிநொச்சியிலிருந்து 1571 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர். Read more