கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி ஒருபோதும் வெற்றியளிக்காது-இரா.சம்பந்தன்-

untitledஅரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து, துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில ஊடகங்களையும் பயன்படுத்த முனைகின்றது. கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் பலிக்காது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட ஓர் கட்சியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த விவகாரம் தொடர்பிலும் எந்தவித பிளவுமின்றியே தனது ஒருமித்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. கூட்டமைப்பைப் பிளவுபடுத்த வேண்டுமென்பதில் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை. தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு புரட்டாசி மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பேராளர் மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேராளர்கள் ஒன்றுகூடுவார்கள். இவர்கள் ஒன்றுகூடி ஏகமனதான தீர்மானங்களை மேற்கொள்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகக் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். அந்த வகையில், எனது பொறுப்புக்களை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன். அது தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பேராளர்கள் ஒன்று கூடி இணக்கமான முடிவுக்கு வருவார்கள். இதன்மூலம் ஒருபோதும் பிளவுபடவோ, பிரச்சினைகள் எழவோ இடமில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமிழர்களின் ஈடேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயனற்ற ஒன்றாகவே அமையும். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அது தொடர்பில் சாதகமாகப் பரீசிலிக்கப்படும். எப்படியாவது கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று அரசு கங்கணம் கட்டி செயற்படுவதையே காண முடிகின்றது. அதற்கு கட்சியோ தமிழ் மக்களோ ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

படகு நடுக்கடலில் தடுக்கப்பட்டமை குறித்து ஆஸி பிரதமர் விளக்கம்-

australiaஅகதிகள் வருகையை தடுக்கும் வகையிலே, 157 பேரை ஏற்றிய இலங்கை அகதிகள் படகு, நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி எபோட் தெரிவித்துள்ளார். தென்னிந்திய கடற்பரப்பில் இருந்து கடந்த மாதம் அவுஸ்திரேலிய சென்றிருந்த அகதிகளை ஏற்றிய படகு காரணமாக அவுஸ்திரேலியா மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ள அகதிகள் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு இடம் வழங்க போவதில்லை என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். இந்தியாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, படகிலுள்ள 157 பேரையும் அவுஸ்திரேலியா கொண்டுவர இணக்கம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அவர்களை இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும். அந்த நடவடிக்கைகள் இடம்பெறும்வரை அவர்கள் ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் கொள்கையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி-

tamilசர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள் தொடர்பிலும் கற்பிக்கப்படும் எனவும் இது தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்;.

திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி-

திருகோணமலை, பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று கைமுந்தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது நீரினுள் முழ்கி மரணமடைந்துள்ளனர். பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்விபயிலும் டேவிட் ஜெயசீலன் மற்றும் தங்கபுரம் ஸ்ரீகணேச வித்தியலாயத்தில் 4ஆம் தரத்தில் பயிலும் இலட்சுமணன் யசுர்சனன் ஆகியவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். இம் மாணவர்கள் இருவரும் விடுமுறையை சந்தோசமாக கழிப்பதற்கு நீராடுவதற்காக குளத்திற்கு சென்றிருந்தார்கள் என இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம்-

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் விசாரணைக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில புலம்பெயர் தமிழர்களும் சாட்சியம் அளிக்க முடியும் எனவும் எனினும், புலம்பெயர் மக்களின் சாட்சி விசாரணைகளுக்கான அமர்வுகள் தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாட்சி விசாரணை அமர்வுகளில் 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.