Header image alt text

யாழில் 2லட்சம் போலி நாணயத்தாள் விவகாரமாக பெண் கைது-

arrestயாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் 2லட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில்புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று 17 பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்றபோது அதில் சுமார் 2 லட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Read more

மக்களின் காணிகள் 2018ல் முழுமையாக மீள கையளிக்கப்படும்-மங்கள-

mangala (4)வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், Read more

காணியை ஒப்படைக்கக் கோரி குடும்பமொன்று கவனயீர்ப்புப் போராட்டம்-

dfdfdfதமது காணியை முழுமையாக தமக்கு வழங்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்றுகாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையால் வெட்டப்பட்ட 140 பேர்ச்சஸ் காணியை முழுமையாக வழங்குமாறு தெரிவித்து முத்தையா விஜயநாதன் என்பவர் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். இந்தப் போராட்டத்தில் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர். காணியை முழுமையாக ஒப்படைக்க கரைச்சி பிரதேச செயலாளர் மறுத்து வருவதாகவும் ஒருதலைப்பட்சமாக அவர் செயற்படுவதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அனுர சேனாநாயக்க, சுமித் பெரேராவுக்கு பிணை மறுப்பு-

courtsமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரது பிணை கோரிக்கைகள் கொழும்பு மேலதிக நீதவானால் மறுக்கப்பட்டுள்ளது. றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்வரும் 7ம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து இன்று நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய சுங்க சட்டத்திற்கு மக்களும் யோசனை முன்வைக்க சந்தர்ப்பம்-

customsபுதிய சுங்க சட்டத் தயாரிப்பு தொடர்பிலான யோசனைகளை முன்வைக்குமாறு, அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த சட்டமூல தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழு போன்றன தற்போது நியமிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மக்களுக்கு இது குறித்து யோசனை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, ஜூலை 11ம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் இது குறித்த மேலதிகத் தகவல்களை 0112 484599 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கராயனில் வர்த்தக நிலையம் எரிந்து நாசம்-

f93012e0-9753-44ac-a55e-8e48475f56b9-720x480கிளிநொச்சி அக்கராயன்குளம் அண்ணா சிலைச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டு வர்த்தக நிலையம் முற்றாக நாசமாகியது.. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ பற்றியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் மரணம்-

UN secretaryஅமெரிக்காவில், தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வந்த ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் உயிரிழந்துள்ளார். 61 வயதாகும் ஜான் ஆஷ், ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் ஐநா தூதராக பணியாற்றியுள்ளார். ஜான் ஆஷ் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 2014 வரை, ஓராண்டுக்கு ஐநா பொது சபையின் தலைவராக ஜான் ஆஷ் செயற்பட்டார். சீன வர்த்தகர்களிடமிருந்து 1.3 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாகவும், சீன வர்த்தகர்களின் நலன்களை முன்னெடுக்க தனது பதவியை பயன்படுத்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அக்டோபரில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜான் ஆஷின் கண்டனத்துக்குள்ளானமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் முன்பாக இம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி-

gun shootingமஹர நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைபிரிட் காரில் வந்திருந்த ஒருவர், நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்த ஒருவர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஹெரியோரின் போதைப்பொருள் வழக்கு பற்றி சாட்சியமளிக்க வந்திருந்த 35வயதான ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை இன்றுகாலை 10.45 மணியளவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்துக்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களனி பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் நடத்தப்பட் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் மீது கண்ணீர்புகை, நீர்த்தாரை பிரயோகம்-

sdfdfdஎதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த பேரணியால் பம்பலபிடியில் இருந்து கொள்ளுப்பிட்டிவரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்புப் பேரணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை, கடையடைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது-

sfdfவவுனியாவில் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட வர்த்தகர் செல்வராஜா கடத்தல்காரர்களினால் புதன்கிழமை பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் உள்ள பூவரசங்குளம் பகுதியில் கடத்தல்காரர்கள் இவரைக் கொண்டு வந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலையாகிய இவரிடம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவருடைய கடத்தலைக் கண்டித்தும், வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் நாளையதினம் நடத்தவிருந்த கடையடைப்பு கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

புதிய கட்சி உருவாக்கும் எண்ணமில்லை-மஹிந்த ராஜபக்ச-

mahinda (4)புதிதாக கட்சி ஒன்றினை உருவாக்கும் திட்டம் தம்மிடம் இல்லையென முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக கட்சி உருவாக்கும் எண்ணமில்லை. என்ன நடக்க போகின்றது என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். Read more

தேசிய அடையாள அட்டையில் இனரீதியாக பாரபட்சம்- எஸ்.வியாழேந்திரன் எம்.பி-

sfdfdதேசிய அடையாள அட்டையில் இன ரீதியாக பாரபட்சம் காணப்படுகின்றதென சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள “ஓ” என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட அட்டைகளுக்குப் பதிலாக அனைவருக்கும் ஒரே வகையிலான தேசிய அடையாள அட்டைகளே வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆட்பதிவு திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

வவுனியாவில் பிரபல வர்த்தகர் கடத்தல்-

sfdfவவுனியா கோவில்குளம் இராணி மில் ஒழுங்கையில் வைத்து நேற்றிரவு 7.15 மணியளவில் பிரபல வர்த்தகரான எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்படும் சண்முகம் செல்வராசா என்பவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரிசி ஆலை உட்பட வர்த்தக நிலையங்களை வவுனியா நகரில் நடத்திவரும் இவர் நகர்ப்பகுதியில் இருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயமே வீட்டின் அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். வாகனமொன்றில் வந்தவர்களாலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டு வவுனியாவில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தொப்பியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் தலைக்கவசம் வீதிக்கருகில் காணப்பட்ட சிறிய கால்வாய்க்குள் காணப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்-

samurdhiவவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா கலபோகஸ்வௌ என்ற பிரதேசத்தில் வைத்து, கடந்த 16ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். பிரதேச செயலகததில் இருந்து பிரதேச செயலக சந்தி வரை உர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மீண்டும் பிரதேச செலயகத்திற்கு சென்றனர். இதன்போது, சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பல கோரிக்கைகளை உள்ளடக்கியும் பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்தனர்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள்-

housing scheme (2)தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் உச்சபட்டி முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 13 பேருக்கு புதிய வீடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நேற்று வழங்கினார். திருமங்கலம் அருகே உச்சபட்டி அகதிகள் முகாமில் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1610 பேர் வசித்து வருகின்றனர். 1992-ம் ஆண்டு முதல் இங்கே தங்கியிருக்கும் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் சில வீடுகளில் 10க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1.20 இலட்சம் இந்திய ரூபாயில் முதல்கட்டமாக 19 வீடுகள் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் 13 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை பயனாளிகளிடம் வழங்கினார் என கூறப்படுகிறது.

மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட ஆசிரியர் கைது, அதிபர் தலைமறைவு-

zxsdsdsயாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலய மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவத்தை மூடி மறைத்ததாக கூறப்படும் குறித்த பாடசாலையின் அதிபர் தலைமறைவாகியுள்ளார். மாணவிகள் மீது ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அதிபர் அதனை மூடி மறைக்க முயன்றதாக பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்து இன்றுகாலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும், சம்பவத்தை மூடிமறைத்த அதிபரை பதவிநீக்கம் செய்யவேண்டுமெனவும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு ஆசிரியரை கைதுசெய்யக்கோரியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள அதிபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றைய ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லைகா மொபைல் நிறுவன பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது-

likaசர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் லைகா மொபைல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வரி ஏய்ப்பின் அளவு 13 மில்லியன் பவுன்களுக்கும் அதிகம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் நம்புகின்றனர். பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல கோடி பவுன் பணம் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாற்றப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த 2011ம் ஆண்டு முதல் பிரித்தானியப் பிரதமரின் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்கள் நிதி வழங்கியுள்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நிறுவனம் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகளை போலியான பற்றுச்சீட்டுக்கள் மூலம் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உலகில் பாரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் லைகா மொபைல் சர்வதேச அளவில் உள்ள தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு-

vithya kolaiபுங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்குஅச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலைவழக்கு சந்தேகநபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பம் செய்தார். பிணை மனுவை நீதிவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

முள்ளியவளை வடக்கில் மூத்த பிரஜைகள் கௌரவிப்பு-

mullaiavalaiமுல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கில் மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று, நேற்று இடம்பெற்றது. இதன்போது, சுமார் 50 மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர். மூத்த பிரஜைகளின் மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், மூத்த பிரஜைகள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு, அவர்களுக்கு சில போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆணைக்குழுவின் ஆயுட் காலத்தை நீடிக்கவும்-மெக்ஸ்வெல் பரணகம-

missingகாணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் காலம் ஜூலை 15ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் இன்னும் 1 வருடகாலத்துக்கு ஆணைக்குழுவின் ஆயுளை நீடிக்குமாறு அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லசந்த, எக்னெலிகொட விவகாரத்துக்கு நீதிமன்றங்களை அமைக்க முடிவு-

lasanthaprageeth ekneligodaஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவ, இரண்டு ஆரம்ப கட்ட விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இராணுவம் தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான சில ஆவணங்கள் காணமல் போயுள்ளதாக, இது தொடர்பில் இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரும் சில ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படும் குற்றச்சாட்டை இராணுவம் இந்த அறிக்கையில் மறுத்துள்ளது.

குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைப்பு-

jailகல்கிஸை, விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி குணரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

தெஹிவளையில் வசிக்கும் பெண்ணொருவரிடம் 20 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொறுப்பதிகாரி குணரத்ன, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

களனி பகுதி மக்களை அங்கிருந்து அகற்ற தீர்மானம்-

kelaniyaகளனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டது.

இதற்கு அமைவான வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறினார். மீண்டும் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

செங்கலடி வேப்பவெட்டவானில் பால் சேகரிப்பு நிலையம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

vbvbvvvமட்டக்களப்பு கொம்மாதுறை கால்நடை அபிவிருத்தி பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் செங்கலடி வேப்பவெட்டவானில் பால் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வானது UNDP திட்டமிடல் அதிகார சபையின் அனுசரணையுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் திரு. கே.சிவநாதன் (கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, விவசாய, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர்), திரு. ப.யோகநாதன் (கால்நடை அபிவிருத்தி பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் சங்கம்),

திரு. எஸ்.கிருபை ராஜசிங்கம் (கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மட்டக்களப்பு), திரு. கே.பார்த்தீபன் (UNDP திட்டமிடல் நிபுணர் மட்டக்களப்பு) மற்றும் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு-

fffமட்டக்களப்பு கொக்குவில் பகுதி காணியொன்றிலிருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் பொலிஸ் காவலரணுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இருந்துள்ளன. இதன்போது, ரி 56 துப்பாக்கிகள் 04, மகசின்கள் 08, ரி-56 துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக மனுத் தாக்கல்-

arjun mahendran (2)அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கெபே அமைப்பினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். அர்ஜூன மகேந்திரன் இந்த நாட்டுப் பிரஜை இல்லை எனவும், அவரை அப் பதவியில் நியமித்தது சட்ட ரீதியானது அல்ல எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிணை முறி மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கீர்த்தி தென்னக்கோன், அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே அர்ஜூனவை தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் நீடிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கீர்த்தி தென்னக்கோன் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மாலோக்க தேரர் பிணையில் செல்ல அனுமதி-

dammaloka theroசட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரரை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னர் விடுக்கப்பட்ட நோட்டிசுக்கு அமைய இன்று, தம்மாலோக தேரர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்போது, சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி அவரை 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னதாக குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்மாலோக தேரரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.

மொஹமட் முஸாமில் கைதாகி விளக்கமறியலில் வைப்பு-

musamilதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான மொஹமட் முஸாமிலை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். வரணி பகுதி பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்-

jailயாழ்ப்பாணம் வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரும் நான்கு ஆசிரியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்விகற்கும் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நேற்றுமாலை ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் முதலாம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வைத்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அதிபர் உள்ளிட்ட ஏனைய மூன்று ஆசிரியைகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

சங்கானை வண்ணத்துப்பூச்சி சர்வதேச பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு2016-(படங்கள் இணைப்பு)

19.06.2016 chankanai (1)யாழ். சங்கானை வண்ணத்துப்பூச்சி சர்வதேச பாடசாலையின் 2016ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வு சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (19.06.2016) பிற்பகல் 2மணியவில் பாடசாலையின் பணிப்பாளர் திரு. ரி.முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருமதி எம்.ரஞ்சன் (வலிகாமம் கோட்டக் கல்வி வலய கணக்காளர்) திரு. ராமசாமி சிறிதரன் (சிவப்பிரகாச மகா வித்தியாலய அதிபர்) ஆகியோரும், திரு. கே.சுதாகரன்( சைவப்பிரகாச மகாவித்தியாலய அதிபர்), மற்றும் கே.ஜெகநாதன் (முன்னாள் அதிபர்), நாலந்த ஜயவீர(மானிப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி), திரு. கே.குணசிறி(நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து தேவாரம், கிறிஸ்தவ கீதம், தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியம், விளையாட்டு நிகழ்வுகள் என்பன நடைபெற்று இறுதியாக பரிசில்களும் வழங்கப்பட்டன. Read more