ssasகாணி  விடுவிப்பை வலியுறுத்தி முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் தற்போது அரசினால் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு வடக்கில் உள்ள தீவுகளில் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக தீவக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு முற்றாக இடம்பெயர்ந்தனர். பின்னர் ஏற்பட்ட சுமுகமான சூழலையடுத்து யாழ். மாவட்டத்தில் உள்ள தீவுகளில் மக்கள் படிப்படியாக மீள்குடியேறினர். இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைத்தீவு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு எனும் மிகவும் பழமை வாய்ந்த தீவானது பல்வேறு இயற்கை வளங்களையும் கடல்சார் வளங்களையும் கொண்டமைந்து காணப்படுகின்றது. இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த சமூகம் கடலோடும் திறனையும் கடல் பற்றிய அறிவையும் நன்கு கொண்டிருந்தனர்.

இங்கு வாழ்ந்த மக்கள் கடற்தொழிலையே பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்ததுடன் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கடல் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் நிறையவே கொண்டிருந்தனர். அத்துடன் பெண்களும் கடற்தொழில் செய்யும் ஓர் இடமாகவும் இருந்துள்ளது என இப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து வெளியேற்றப்பட்ட 240 குடும்பங்கள் முழங்காவில் பகுதியில் உள்ள இரணைமாதா நகர் என்ற இடத்தில் 140 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்டனர்.

இந்தப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மின்சார வசதி போக்குவரத்து வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டபோதும் மக்கள் தமது சொந்த நிலத்திற்குச் செல்லும் ஆவலுடனேயே உள்ளனர்.

தற்போது பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவில் சென்று குடியேறி வாழ்வதற்கு 336 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 214 பேர் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.