கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்று இரவு தாம், போராட்டம் குறித்து அறிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்த போதும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் மறுத்துள்ள நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் போது, பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று (10) பிற்பகல் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்கு செல்ல முற்பட்ட போது, ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் இடம்பெற்ற அரசாங்கத்தக்கு எதிரான போராட்டத்துக்கு பங்களிப்பு செய்து உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதற்காக போராட்டக்கள உறுப்பினர்கள்,
காலி முகத்திடலில் நேற்று (09) ஏற்பாடு செய்த அமைதிப் போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.