ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, இஸ்ரேல், நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு யுத்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.சேதம், இழப்பு மற்றும் காயம் ஆகியவற்றிற்கான இழப்பீடுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான இந்த தீர்மானத்துக்கு சுமார் 50 நாடுகள் இணை அனுசரணை வழங்கின.

பொதுச் சபை என்பது அனைத்து 193 உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் பிரதிநிதித்துவ அமைப்பாகும். இந்தநிலையில் உக்ரைன் தொடர்பான தீர்மானத்துக்கு 94 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 73 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா முன்வைத்தார். இதன்போது சர்வதேச சட்டத்தை மீறியமைக்காக, ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

20 ஆம் நூற்றாண்டின் கொடுங்கோன்மையின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ரஷ்யா, தனது சொந்த போர் மற்றும் ஆக்கிரமிப்புக்கான விலையை செலுத்துவதைத் தவிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. அத்துடன், தான் செய்யும் குற்றங்களுக்கான, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக, உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் தீர்மானத்தை ரஷ்யா, வீட்டோ செய்ததைத் தொடர்ந்து பொதுச் சபையில் நேற்று இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது.