அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கும் முன்பதாக மூன்று பிரதான விடயங்களை முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் தேசியக் கட்சிகள் இன்றுமாலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடாத்திய சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறீதரன், கோ.கருணாகரம், வினோ நோகராதலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்படி, நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம் ஆகிய விவகாரங்களை முன்னிறுத்தி ஜனாதிபதியுடனான பேச்சுக்கான அழைப்பினை அணுகுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானமொன்றை எட்டுவதற்காக ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.