மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன்(முகுந்தன்) அவர்களின் 78ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, வவுனியா, கோயில்குளம், உமாமகேஸ்வரன் நினைவில்ல வளாகத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் பொது நூல்நிலையத்தினை பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (18.02.2023) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. இந் நூலகம், கடந்த 1992 ம் ஆண்டு, செயலதிபரின் 03ம் ஆண்டு நினைவு நாளன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் இருந்தது.

2022 இல் நடைபெற்ற பத்தாவது பொதுச்சபைக் கூட்ட தீர்மானத்தின் பிரகாரம் புதிதாக உருவாக்கப்பட்ட நினைவில்லப் பிரிவால் மீண்டும் நூல்நிலையம் பொறுப்பேற்கப்பட்டு அதனை இயங்க வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நினைவில்லப் பிரிவுப் பொறுப்பாளர் ஜி.ரி லிங்கநாதன்(விசுபாரதி) அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் நூல் நிலையம் மீளத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றல், மலர்மாலை அணிவித்தல், மங்கல விளக்கேற்றல் என்பன இடம்பெற்றதுடன், மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமை உரையினை புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் ஜி.ரி லிங்கநாதன் ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பிரமுகர்களின் உரைகளும் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றன. இதன்போது தமிழ்மணி அகளங்கன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர் ஆரிப், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

நிகழ்வில் கலைமாமணி சிவசோதி, கோயில்குளம் சிவன் ஆலய குருக்கள், கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் வே.நல்லநாதர்(ஆர்.ஆர்), செயலாளர் நா.இரட்ணலிங்கம், நிர்வாகப் பொறுப்பாளர் ம.பற்றிக், வவுனியா மாவட்ட அமைப்பாளர் வே. குகதாசன் மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் பிரதேசசபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் லண்டன் கிளை உறுப்பினர் தோழர் பாலா, கட்சியின் அமெரிக்கா செயற்பாட்டாளர் தோழர் கோபி. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.