காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வழங்காதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்காக இவ்வாரம் குறித்த குழு கூடவுள்ளதாகவும் பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட பகுதியில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வட பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.