மேலும் இரு வௌிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். Read more
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து, ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸின் பொரளை பகுதியிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்பவரின் வழக்கில், சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்த உதவி உறுதுணையாக இருக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தம் பாக்ஜி ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவை உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் தடுப்பில் உள்ளவர்கள் பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு வழிகாட்டல் கோவையை தயாரிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளதாக அவர் இன்று நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையுடன் 2020- 22ஆம் ஆண்டுகளில் தொடர்புகளை கொண்டிருந்த சிம்பாப்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க இராஜதந்திரிகளில் ஒருவரான யூபெர்ட் ஏஞ்சல்(Uebert Angel,) தமது தகுதியை பயன்படுத்தி தங்கக் கடத்தல் திட்டத்தின் மூலம் மில்லியன் டொலர்களை சலவைச் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களின் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது. முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களே புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.