எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான (தோழர் பக்தன்) மகாதேவன் சிவநேசன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…மலர்வு – 1963.03.03
உதிர்வு –2021.05.09
80களின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக மக்கள் மத்தியில் தொண்டாற்றிய தோழர் பக்தன், இயல்பிலேயே இனப்பற்றும் சமூகப்பற்றும் மிகுந்தவர்.
இளவயதிலேயே உரிமைகளுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட தன்னை அர்ப்பணித்திருந்தார்.
காந்தீயம் அமைப்பின் ஊடாக கழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு
அம்பாறை-மட்டக்களப்பு பிராந்தியத்தின் கழக பொறுப்பாளராக இருந்த இவர் துணிச்சலும், நேர்மையும், துடிப்பும் மிகுந்த தனது செயற்பாடுகளினால் தோழர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்தார்.
சமூக மேம்பாட்டை நோக்கிய தனது அக்கறையும், அர்ப்பணிப்பும் உடனான செயற்பாடுகளினால் கிழக்கு மாகாண மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட போராளியாக இருந்தார்.
அம்பாறை மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் தோழர் பக்தன் இனவெறி இராணுவத்தை பலதடவைகள் ஆயுதரீதியாக முகங்கொண்டிருந்தார்.
கழகம் பல்வேறு இழப்புகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டபோதெல்லாம் துவண்டுவிடாது கொள்கையில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இறுதிவரை இயங்கினார்.