சுவிற்சர்லாண்ட் சூரிச் மாநிலத்தில் தொழிலாளர் தினமானது சுவிஸ் தொழில்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு முன்னணிகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள், மற்றும் உரிமைக்காய் போராடும் பல இன மக்களுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கிளையினரும் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் அனைத்து இன மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய அணிதிரளவும் அனைத்துலக ஆதரவு கோரியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார் தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி தனது மே தின உரையில் குறிப்பிட்டார் .
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். தம்மை சந்தித்த தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார். 