காங்கேசன்துறையில் 533 குடும்பங்களுக்கு காணிகள் திரும்ப ஒப்படைப்பு
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 700 ஏக்கர் காணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணி உரிமையாளர்களிடம் சனிக்கிழமை கையளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 700 ஏக்கர் காணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணி உரிமையாளர்களிடம் சனிக்கிழமை கையளித்துள்ளார்.
இதனை அடுத்து 533 குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் நடேஸ்வரா கல்லூரி ஆகிய இரண்டு பள்ளிக்கூடங்களும் அவற்றின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் 6 மாதங்களில் அவர்களது சொந்தக் காணிகளில் மீளக் குடியமர்த்ப்படுவார்கள் என அளித்த வாக்குறுதிக்கு அமைய, அவர்களது காணி படிப்படியாக மீளக் கையளிக்கப்பட்டு வருகிறது என அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
எஞ்சியுள்ள காணிகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிவழங்கினார்.
நல்லிணக்கம் தென்னிலங்கை மக்களிடமிருந்தே வரவேண்டும’ என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் இராணுவத்தை வெறுக்கவில்லை இராணுவ அடக்குமுறையையே வெறுக்கின்றனர்’ என தெரிவித்தார்.
தமிழர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறிய அவர், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அவ்வாறான அபிப்பிராயங்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
வைபவத்தில் அமைச்சர்களான டி.எம் சுவாமிநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


