உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நிகழ்வு (22.05.2017) திங்கட்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் திரு. ரி.சிந்துஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. எம்.செல்வஸ்தான் (அதிபர், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), திரு. எஸ். சண்முகவடிவேல் (மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து இறைவணக்கம், கொடியேற்றம், இளைஞர் சத்தியப்பிரமாணம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினரால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. விளையாட்டு நிகழ்வுகளின் இறுதியாக ஞான முருகன் இளைஞர் கழகம் மற்றும் குறிஞ்சிக் குமரன் இளைஞர் கழகம் ஆகிய அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்று இறுதியில் ஞான முருகன் இளைஞர் கழகம் வெற்றியீட்டியது. தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கும், வெற்றியீட்டிய அணியினருக்குமான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.




































