தென்னாப்பிரிக்க விசேட பிரதிநிதி திங்கள் இலங்கைக்கு விஜயம்-

then africa viseda pirathinithiஇலங்கைக்கான தென் ஆபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிரில் ராம்போசா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கிலேயே ராம்போசாவின் விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ராம்போசாவின் இலங்கை விஜயம் தொடர்பில் தமக்கு எவ்வித தகவல்களும் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக ராம்போசா அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதான சமூகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது-ஆஸி பிரதமர்-

ilankaiyil samaathana samukmஇலங்கையில் சமாதான சமூகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளை ஏற்றிவந்த இரு படங்குகள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் வானொலி நிகழ்ச்சியில் இன்றுகாலை கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் நடுக்கடலில் வைத்து அகதி படகுகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் இரகசியங்கள் இல்லை. இது தேர்தலுக்கு முன்னரே நாம் கொள்கையாக வெளியிட்ட விடயமாகும் என்றார் அவர். இதேவேளை தாம் தப்பிவந்த நாட்டுக்கே மீண்டும் அகதிகளை திருப்பியனுப்புவது குறித்து அபோட்டிடம் கேட்டபோது, தாம் சர்வதேச சட்டங்களை மதிப்பதால் அதன்படி செயற்படுவதாகவும், போருக்கு பின்னர் இலங்கையில் மனித உரிமை விடயங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கச்சதீவை மீளப் பெறுமாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்-

kachchativai meelaகச்சதீவு குறித்து மத்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் கச்சதீவை இந்தியா மீள பெறுவதற்கு மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கச்சதீவு தொடர்பில் மத்திய அரசு அண்மையில் உயர்நீதிமன்றில் தெரிவித்த கருத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் மேலும் கூறியுள்ளார்.

திலீபனின் சடலத்தை தேடி சோதனை நடவடிக்கை-

thileepanin sadalathaiஇந்திய அமைதிகாக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. இத்தகவல் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. புலிகளை மீளக்கட்டியெழுப்ப முயற்சிக்கிறார் என்ற சந்தேககத்தின்பேரில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவரை விசாரணை செய்தபோதே திலீபனின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள விடயம் அம்பலமானது என்று பொலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை வாசிக்க…..

மன்னாரில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு-

மன்னார், மருதமடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். குறிப்பிட்ட நபரிடமிருந்த மிருகவெடி தவறுதலாக வெடித்துள்ளதுடன், பலத்த காயங்களுக்குள்ளான அவர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சம்பவத்தில் மருதமடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமாலையில் மேலுமொரு எலும்புக்கூடு மீட்பு-

யாழ்., முகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காவலரண் ஒன்றிலிருந்து நேற்று பெண் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே மேற்படி எலும்புக்கூடுகளை அவதானித்து, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதால் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பளைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது 2 கைக்குண்டுகள், 3 மகசின்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள், புலிகளின் பெண் உறுப்பினர்களின் சீருடைகள், உள்ளாடைகள் என்பனவும் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனுஷ்கோடியில் கைதானோரில் புலிகளின் கணக்காய்வாளர் அடங்குகிறார்-

தமிழகத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் புலிகள் அமைப்பின் கணக்காளராக செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று இராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு ஒரு படகில் 2 ஆண்கள், 2 பெண்கள் சென்று இறங்கியுள்ளனர். இவர்களில் எஸ்.சதீஸ் (வயது 39) எனும் நபர் புலிகள் அமைப்பில் கணக்காளராக பணிபுரிந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் (ஈ.பி.டி.பி) பணிபுரிந்த ரவி எனப்படும் எஸ்.ரவீந்திரன் (வயது 38) என்பவரும் ஜே.சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வருமே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.எஸ்.பி. விஜயகுமார் அறிவித்துள்ளார்.

பாக். சிறுபான்மையினரை இலங்கை நாடு கடத்தக் கூடாது எனக் கோரிக்கை-

பாகிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர்களான அஹமதியவினரை நாடுகடத்த வேண்டாம் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் கண்கானிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களுடன் முழு அளவு தொடர்புகளை பேணும் வரையிலும், சர்வதேச பாதுகாப்புத் தேவைகள் உறுதிப்படுத்தப்படும் வரையிலும் அவர்கள் நாடு கடத்தப்படக் கூடாது எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது. குறைந்தது 142 பாகிஸ்தானியர்கள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் அஹமதியர்கள் எனவும் இவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் கண்கானிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.