Header image alt text

நெடுங்கேணி சேனைப்பிலவு பிரதேசத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

IMG_7225தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்றுமாலை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு இப்பிரதேசங்களில் இன்றுமாலையில் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவது குறித்து நவிபிள்ளை எச்சரிக்கை-

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் விடயம் குறித்து தான் ஐநா சபையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் நவநீதம்பிள்ளை மேலும் கூறியுள்ளார். 

இன்றும் நாளைய தினமும் அஞ்சல் மூல வாக்களிப்பு-

வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பிலான அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றைய தினமும், நாளையும் இடம்பெறுகின்றன. 11 லட்சத்து 383 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல் மூல வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ள மத்திய நிலையங்களில் அரச பணிகளுக்காக அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று அல்லது நாளை அஞ்சல் வாக்குகளை பதிவளிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்

சீன  கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழுவின் அரசியல் நிலையியற்குழு மற்றும் செயலக உறுப்பினர் லிவ் யுன்ஷான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் டி.எம்.ஜயரத்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை லிவ் யுன்ஷான், சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

107 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிப்பு-

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வு பெற்ற 107 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 101ஆண்களும் 06 பெண்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வெலிகந்தை மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் ஆவர். வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 75 பேரும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 32 பேரும் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சமூகத்துடன் இன்றையதினம் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஒரு வாரத்தில் 13 தேர்தல் முறைப்பாடுகள்-

தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பாக வட மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று மாகாணங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 141 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்தவார ஆரம்பம்வரை 251 முறைப்பாடுகளே பதிவாகின. எனினும் கடந்தவாரம் மட்டும் மூன்று மாகாணங்களிலும் 154 முறைப்பாடுகள் பதிவாகின. இதன்படி கடந்தவாரம் இறுதிவரையான காலப்பகுதிகள் மொத்தம் 405 முறைப்பாடுகள் பதிவாகின. வடமாகாணத்தில் கடந்தவார ஆரம்பம்வரை 43 ஆகவிருந்த நிலையில் கடந்தவார இறுதிவரையான காலப்பகுதியில் 56ஆக அதிகரித்தன. மூன்று மாகாணங்களிலும் விதிமுறை மீறல்கள் தொடர்பில் 376 முறைப்பாடுகளும் வன்செயல்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன எனவும் கபே கூறியுள்ளது. 

வடக்கின் வசந்தத்திலிருந்து அமைச்சர் பசில் விலகல்-

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளிலிருந்து விலகி, புதிய மாகாணசபையிடம் அதனை ஒப்படைக்கவுள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாள்வதை தாம் புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பொருளாதார அமைச்சின்கீழ் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24ஆவது மாநாடு-

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24ஆவது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா காரியாலயத்தில் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 25ஆம் திகதி மனிதவுரிமைகள் தொடர்பில் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்மூல அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, நவனீதம் பிள்ளையினால், ஏற்கனவே இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கு அமைய, பொறுப்பு கூறல் மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்படவுள்ளது. கடந்த வருட மாநாடு உட்பட ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த முறையும் மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும், ஐ.நாவின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.