ஐ.நா. விசாரணைக் குழு நீதியைப் பெற்றுத் தருமென கூட்டமைப்பு நம்பிக்கை-

1719856666tna3ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் சர்வதேச விசாரணைக்குழு ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை அரச படைகளினால் கொடூரங்களுக்குள்ளான அப்பாவித் தமிழர்கள் இந்த விசாரணைக் குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டத்தொடரை நாளை மறுதினம் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான தமது அலுவலகத்தின் விசாரணைக்குழுவை நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையிலே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளிக்க தயார்-எரிக் சொல்ஹெய்ம்-

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 2009 மே 17ம் திகதி புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரிடமிருந்து தாம் சரணடைய வேண்டும் என நோர்வேஜியர்களுக்கும், ஏனையோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. எதையும் செய்ய மிகவும் தாமதமாகி விட்டதென்று நாம் அவர்களுக்கு கூறினோம். எனினும், வெள்ளைக்கொடியை உயர்த்திக் கொண்டு செல்லும்படி ஆலோசனை வழங்கினோம். மே 18ல் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. இலங்கைப் போர் மிகப்பெரிய விலை கொடுத்தே வெற்றி கொள்ளப்பட்டது. இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவினாலும், அமெரிக்காவினாலும் வேறு பல இடங்களில் இருந்தும் என்னிடம் கேட்டார்கள். போரில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அது மிகப்பெரிய விலை. இராணுவ நடவடிக்கையில்லாமல், அமைதிப் பேச்சுக்களின் மூலம் போருக்கு தீர்வு கண்டிருக்க முடியும். 2015க்கு முன் வெளிவரவுள்ள எனது நூலில் நான் பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களையும், புலிகளினதும், இலங்கை அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் வெளியிடவுள்ளேன் என சொல்ஹெய்ம் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா விசாரணை குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் தலைமையேற்பு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணைக் குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் ஒருவர் தலைமை தாங்க உள்ளதா ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகமும். மாவட்ட பிரதம நீதவானுமான டேமி சில்வியா கார்ட்ரைட் (வயது 70) என்பவரே இலங்கை குறித்த சர்வதேச விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். ஏன்றும் கூறப்படுகிறது. அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிதானிய பிரஜையை நாடு கடத்த உத்தரவு-

கடந்த 29 வருடங்களாக சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாக கூறப்படும் பிரித்தானிய பிரஜையொருவரை நாடுகடத்துமாறு கண்டி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். 74 வயதான ரொகர் வோன் சிமித் என்பவரை அக்குறனையில் வைத்து கைதுசெய்த அலவத்துகொடை பொலிஸார், மிரிஹான தடுப்பு நிலையத்திடம் மேலதிக விசாரணைகளுக்காக  ஒப்படைத்தனர். இந்நிலையில் கண்டி மேலதிக நீதவான் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார். 

இந்திய மீனவர்கள் மன்னாரிலும் நெடுந்தீவிலும் கைது-

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் 32 பேரை 08 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 42 பேரை 8 படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றுமாலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக் கூறி பாரிய நிதி மோசடி-

தென் கொரியாவில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறி பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளம் ஒன்றை உருவாக்கி இவர்கள் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கொள்ளுப்பிட்டியில் நபரொருவர் தனது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுடன் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் இணையத்தளத்தை நடத்திச் சென்ற ஒருவரும் கைதாகியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பெண் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிகப்பு அறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் – ஜி.கே. வாசன்-

மீனவர்கள் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2 வார காலத்துக்குள் மீனவர் சிறைப்பிடிப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை இடைநிறுத்தம்-

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா பஸ் டிப்போவினால் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவில் இலங்கையர்கள்மீது கண்காணிப்பு-

மலேசியாவில் உள்ள இலங்கையர்கள், புலிகளுடன் தொடர்புகளை பேணுகின்றனரா? என்பது தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக மலேசியாவின் பிரதி அமைச்சர் என் ஜூனைதி துவாங்கு ஜாபா தெரிவித்துள்ளார். அண்மையில் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு மூவர் கைதானதைத் தொடர்ந்து, இந்த கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் உள்ள 4000க்கும் அதிகமான இலங்கை அகதிகளை, விசாரணைக்கு உட்படுத்தவிருப்பதாக மலேசிய காவற்துறை தலைமை அதிகாரி கூறியிருந்தார்.