காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்-

a(744)யாழ்ப்பாணம் வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் பகுதியில் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு எதிராக கண்டனப் போராட்டமொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலகம் (வலி. கிழக்கு) முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது. வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீள்குடியேற்றக் கோரியும் அத்துடன், வளலாய்; பகுதியில் வலி. வடக்கு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலி. வடக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்துக்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களை வளலாயில் குடியேற்றுவதற்காக இராணுவம் காணிகளை துப்பரவு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தங்களது காணிகளில் தம்மை மீள்குடியமர்த்தும்படி கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வளலாய்ப் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கம் அப்பட்டமாக மீறுகிறது-இரா.சம்பந்தன்-

sampanthanஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். அமைச்சர் உள்ளுர் ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தானது, ஒரு அப்பட்டமான மிரட்டலாகம். ஒரு சாதாரண இலங்கைப் பிரஜை இறுதிக்கட்ட போர் தொடர்பில் தனக்கு தெரிந்ததை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது, உண்மை வெளிவராமல் தடுக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறான ஒரு நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது, அந்தக் கருத்து தவறானது. அமைச்சரது இந்தக் கருத்தை சர்வதேச சமூகமும், ஐநா அமைப்பும் உள்வாங்க வேண்டும். ஐ.நாவின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை பாராளுமன்றமே முடிவு செய்யும் என ஜனாதிபதி கூறியுள்ளது புதிய விஷயம் அல்ல, அந்த குழுவுக்கு அனுமதியளிக்கப்படாது என்பதை அரசு முன்னரே தெட்டத் தெளிவாக கூறிவிட்டது. இப்போது நாடாளுமன்றம் முன்பாக அப்படியொரு பிரேரணையைக் கொண்டு வருவதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்தாகும் என அவர் மேலும் கூறினார். இறுதிப் போரை தொடங்கும் முன்போ, அல்லது போர் நடைபெறும்போதோ பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டுவராத அரசு, இப்போது ஏன் ஐ.நா விசாரணை குறித்த முடிவை பாராளுமன்றம் எடுக்கும் என கூறுகிறது என சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் மீனவர்கள் பணிபகிஷ்கரிப்பு-

மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியம் இடை நிறுத்தபட்டுள்ளதை கண்டித்து இயந்திரப் படகுமூலம் கடற்றொழிலில் ஈடுபடும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்கு செல்லாத மீனவர்கள், தமது வலைகளை பழுது பார்க்கும் நடிவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, நீர்கொழும்பு பிரதேச மீனவர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடப்போவதாக  மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

நான் அமைச்சராக இருக்க வெட்கப்படுகின்றேன்: ஹக்கீம்-

Hekeemஎனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டம் பேருவளையின் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருந்த மக்களிடம் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எனது மக்களை காப்பாற்றுவதற்கு முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை களுத்துறையில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் கூட்டமொன்றின்போது செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டும், அவர்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கமராக்கள் உடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி வாகன விபத்தில் 8 பேர் காயம்-

925635413accsi.Crash-Generic-300x225கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். லொறியொன்றும் வேனும் இன்று அதிகாலை 3.30மணியளவில் மோதியதில் இவர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.