ஐ.நா. குழு அனுமதி கோரவில்லை-இலங்கை-

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்தபோதும், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், அதன் காரணமாக விசாரணைக்குழு இலங்கை வருவதற்காக நுழைவிசைவு கோரினால் அது நிராகரிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவென மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் 12பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்தமாத நடுப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்து செப்டம்பரில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களது படகில் 30 சடலங்கள் மீட்பு-

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றில் பயணித்த  பயணிகளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே பயணத்தை மேற்கொண்ட குறித்த படகில் இருந்து 600 புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலியக் கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இத்தாலியின் தென்பிராந்தியத்தை 60 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர் சென்றடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் செய்திகளை வாசிக்க——-

Read more