அளுத்கம வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்-

kandiththu (4)kandiththu (2)kandiththu (1)kandiththu (6)kandiththu (5)kandiththu (3)அளுத்கமை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்றுகாலை 9 மணிமுதல் 10 மணிவரை இப்போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுத்திருந்தன. ஒரு மணிநேரம் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் அமைப்புக்களும் ஆதரவு வழங்கி இருந்ததுடன் அக் கட்சிகளை சேர்ந்தவர்களும், முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றிருந்தனர். இன அழிப்பினால் நல்லிணக்கம் உருவாகுமா?, இன்னுமொரு கறுப்பு யூலை எமக்கு வேண்டாம் அரசே, அளுத்கம பேருவளை மக்களுக்கு நீதிவேண்டும், அளுத்கம தாக்குதலுக்கு பொதுபல சேனாவே பொறுப்பு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறும் சுலோகங்களைத் தாங்கியவாறும் இப் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் மாணவர்கள் தொழுகை அறைமீது கழிவு எண்ணெய் வீச்சு-

muslimயாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறைமீது இன்றுகாலை 8மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. பூட்டிய அறையின்மீது சிறு பைகளில் கொண்டு வந்த கழிவு எண்ணையே அவர்கள் வீசி சென்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லீம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களை கண்டித்து நேற்றையதினம் யாழ். பல்கலைகழக சமூகத்தால் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. .

அதிபர்களின் அசமந்தப் போக்கால் அடையாள அட்டைகளை பெறுவதில் சிக்கல்-

pokkaalகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக இம்முறை தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் பாடசாலை அதிபர்கள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறியுள்ளார். ஒக்டோபர் 31ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியாகவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை, மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கடந்த பெப்ரவரி மாதமளவில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆட்பதிவு ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிபர்களின் அசமந்தப்போக்கு காரணமாக மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல்நிலை ஏற்படக்கூடும் என்றும் ஆட்பதிவு ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அகதிகள் தினம் இன்று-

ulaga akathikal thinamஇன்று உலக அகதிகள் தினமாகும், உலகில் தற்போது சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அல்லல்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி ஆபிரிக்க அகதிகள் தினம் கொண்டாடப்படுவதால், அந்த நாளை உலகில் உள்ள பல நாடுகள் உலக அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தியிருந்தன. இதேவேளை ஆபிரிக்க அகதிகள் தினமான ஜூன் மாதம் 20ஆம் திகதியை உலக அகதிகள் தினமாகக் கொண்டாட 2000ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் இந்த உலகில் அகதிகளாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான செய்தியாகும். யுத்தம், வன்முறை, பஞ்சம் போன்ற பல்வேறு காரணங்களால் அகதிகள் உருவாகின்றனர். சிரியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவான அகதிகள் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் உலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம் பெற்றுள்ளனர். அகதிகள் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

இரணைமடு குடிநீர்த்திட்ட நிதியை திரும்பப் பெறும் பிரான்ஸ் நிறுவனம்-

iranaimadu kudineerகிளிநொச்சி, இரணைமடு குடிதண்ணீர் திட்டத்துக்கு நிதி வழங்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்த 5ஆயிரத்து 232மில்லியன் ரூபா நிதியைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபையின் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது. இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை என்பவற்றை அடுத்தே நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது. இத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 7 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாவும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் 2 ஆயிரத்து 180 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசு 2 ஆயிரத்து 838 மில்லியன் ரூபாவும் நிதி வழங்கியிருந்தன. அவற்றுக்கு மேலாக பிரான்ஸைச் சேர்ந்த ஏ.எவ்.டி நிறுவனம் 5 ஆயிரத்து 232 மில்லியன் ரூபா வழங்கியிருந்தது. குறித்த திட்டத்தை தற்போது உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு வட மாகாணசபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இதனால் பாதிப்படைவார்கள் என்று அத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்-

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே இவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 2 கோடி 3 லட்சம் ‘மொபைல்’ தொலைபேசிகள் உள்ளன இதில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையான தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதன்படி 2011இ 2012 களில் 34 லட்சமும்இ கடந்த வருடத்தில் 41 இலட்சமும் ‘மொபைல்’ தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.