புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா? என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா? என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ஆம் திகதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழரக்ள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த இயக்த்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் – கொழும்பு, கண்டி வீதி போக்குவரத்து மண்சரிவினாலே தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹட்டன் செனன் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவுகாரணமாக நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். டிக்கோயா போர்டைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 88 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் தற்காலிகமாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றின் கிளையாறான கொட்டகலை ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பத்தனை-திம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் வீடமைப்பு திட்டத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 30 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண் சரிவுக்காரணமாக ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் ஐந்தடி உயரத்திற்கு வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகவும் பாம்பு மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோட்டனில் 348 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையில் ஆளணிப் பற்றாக்குறை
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையினாலேயே இராணுவத்தினரின் உதவியினை தாம் பெற்றுக்கொள்வதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன், யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு ஒரேயொரு விசேட அதிரடிப்படை முகாம் உள்ளமையினால் அங்கும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனாலேயே இரவுநேர ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரையும் இணைத்துக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கே ஆதரவு வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இராணுவத்துக்கு ஆட்சேர்க்க உதவுவதில் எவ்வித குற்றங்களும் இல்லை. நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்க்கவில்லை. இருந்தும், நாம் இதுவரையில் எவரையும் இராணுவத்திற்குச் சேர்த்துக்கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். அத்துடன், இராணுவத்தில் இணைவதற்கு பொலிஸாரினால் வழங்கப்படும் நன்னடத்தைப் பத்திரமும் அவசியமானது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் என அவர் கூறினார்.