கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய அனுமதி மறுப்பு-
வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்றுகாலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பேயாடி கூழாங்குளம், கொக்குவெளி, பூனாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பாராம்பரியமான இந்து மயானமே பேயாடிகூழாங்குளம் இந்து மயானம். யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்று வேறுவேறு பகுதிகளில் வசித்துவரும் நிலையில் அப் பகுதிக்கு அண்மித்ததாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தமையால் தமது பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி அப்பகுதி இந்து மயானத்தில் உடலை தகனம் செய்யவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதற்கு மரணமடைந்தவர்களின் உறவினர்கள் சென்றபோது பெரும்பான்மை இன மதகுரு ஒருவரும் அப்பகுதி இராணுவத்தினரும் இணைந்து இது பௌத்த மக்களின் பிரதேசம். இங்கு பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன என இராணுவ முகாம் இருந்த பகுதியில் உள்ள அடையாளங்களைக் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு திரண்ட இளைஞர்களும் மக்களும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இது எனது பிரதேசம். இங்கு எனது உறவினர்களுக்கும் காணிகள் உண்டு. நாம் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்த நிலம். இங்கு தான் எமது மக்களின் தகனக் கிரியைகள் நடைபெற்று வந்தன. இதனை எப்படி தடுக்க முடியும் எனக் கூறி இராணுவத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்பின் இராணுவத்தினர் தகனக் கிரியை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஊடுருவல், கடலோர பாதுகாப்பை இந்தியா பலப்படுத்துகிறது-
இலங்கை ஊடாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக தொடர்ந்தும் கரையோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கரையோர பாதுகாப்பு பிரிவினர், கியூ பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், கரையோர காவல்துறையினர், வனத்துறையினர் உட்பட்ட பல அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது இலங்கைக்கு ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்களை தடுப்பதற்காக தீவிரமான கண்காணிப்புகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் சகல பாதுகாப்பு பிரிவுகள் மத்தியிலும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனுஸ்கோடியில் உள்ள பாலம் என்ற இடத்தில் நான்கு பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு தீhமானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க——-
பாகிஸ்தான் பிரஜைகளுக்கான ‘ஆன்-அரைவல்’ வீசா ரத்து-
பாகிஸ்தான் பிரஜைகள் இலங்கை விமானநிலையத்தில் பெற்றுவந்த உடனடி வீசா நடைமுறையை இலங்கை அரசு ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் அதிகாரியான தஸ்னீம் அஸ்லம் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் அரசியல் தஞ்சம் பெற்றுவரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற பின்னணியிலேயே இந்த வீசா நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது. பாகிஸ்தானிய பிரஜைகளுக்கான விமானநிலைய வீசா நடைமுறை ரத்து செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை அரசு தமக்கு அறிவித்துள்ள போதிலும், இந்த முடிவை எடுப்பது பற்றி தம்முடன் ஏற்கனவே கலந்துரையாடப்படவில்லை என்றும் தஸ்னீம் அஸ்லம் கூறியுள்ளார். ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் சுமார் 1,500 பேர் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இதுகுறித்து இலங்கை அதிகாரிகளின் கருத்துக்கள் இன்னமும் வெளியாகவில்லை.
ஐ.தே.க கூட்டம் நடைபெறவிருந்த ஹோட்டல் மீது தாக்குதல்-
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்று நடைபெறவிருந்த ஹாலிஎல பகுதி ஹோட்டலொன்றை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். நால்வரடங்கிய குழுவொன்று நேற்றிரவு குறித்த ஹோட்டலின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கூட்டத்திற்காக பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளையும் சந்தேகநபர்கள் அறுத்தெறிந்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்குழுவிடம் இருந்து வீசா கோரிக்கை இல்லை-
இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ள குழுவின் உறுப்பினர்கள் இன்னும் வீசாவுக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணையின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு இலங்கையிலும் தமது விசாரணைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கான வீசா அனுமதி குறித்து யாருக்கும் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் யுத்தம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.