புளொட் தலைவர், சுவிஸ் கிளை முக்கியஸ்தர் ஆகியோர் சுவிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!!

Sithar ploteபுளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவரான சுவிஸ்ரஞ்சன் ஆகியோர்க்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரும், சமாதானம், மனித உரிமைகள், மனித உரிமைகளுக்கான கொள்கைகள், குடிவரவு, குடியகல்வுகளுக்கான பிரதம ஆலோசகர் மார்ட்டின் சுக்த்ஸ்சிங்கர் மற்றும் சுவிஸ் அரசின் இலங்கை விவகாரங்களுக்கான செயற்திட்ட நிபுணர் லைலா கிளெமெண்ட் ஆகியோர்க்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (08.07.2014) பேர்னில் உள்ள சுவிஸ் வெளிநாட்டமைச்சின் காரியாலயத்தில்   நடைபெற்றது.

இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் தமிழ் மக்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பது தொடர்பில் புளொட் தலைவர் விரிவாக எடுத்துக் கூறியதுடன். சுவிஸ் அரசாங்கம் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதோடு அந்த உதவிகளை அதிகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் அவர்களின் தஞ்சக் கோரிக்கை கோரிக்கை நிராரிக்கப்பட்டிருக்கின்ற தமிழ்மக்கள் பலரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் இருக்கின்ற சிக்கல்கள் தொடர்பிலும் சுவிஸ் அதிகாரிகளுக்கு மிகத் தெளிவாக தாங்கள் எடுத்துக் கூறியதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

புளொட் தலைவர் மேலும் கருத்துரைக்கையில் சுவிஸ் அரசாங்கம் இலங்கை தூதுவரலாயம்  ஊடாக புகலிடம் கோரியுள்ளவர்களில் சிலரது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிருக்கின்றது. எனினும் இவ்வாறு அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிக்கப்பட்ட வடகிழக்கில் வாழும் தமிழ் குடும்பங்கள் மிகவும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இனந்தெரியாத நபர்கள் அத்தகையவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களை மிரட்டியுள்ளனர். என்பதை தெளிவாக எடுத்துக் கூறினோம். இவ்விடயத்தில் சரியானதொரு நடவடிக்கையை எடுக்குமாறும் இவர்களை உடனடியாக நாட்டிற்கு அனுப்புவதை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொண்டோம்.

இதற்குப் பதிலளித்த சுவிஸ் அதிகாரிகள் தற்போதைக்கு அவர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றும்இ எங்களுடைய கோரிக்கையை தாம் பரிசீலிப்பதாகவும் கூறியதுடன். எதிர்வரும் காலங்களிலே அவர்களை நாட்டிற்கு அனுப்புவது குறித்து இன்னமும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறியதுடன் இவ்விடயம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தனர் என்று தெரிவித்தார்.

குறிப்பு… இதேவேளை தனது ஐரோப்பிய விஜயத்தின் ஒரு பகுதியாக புளொட் தலைவர் சித்தார்த்தன் நோர்வே நாட்டுக்கு நேற்றைய தினம் சென்றுள்ள அதேவேளை எதிர்வரும் 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் மாநகரில் தமிழ் மக்களுடனான (பொதுமக்கள்) கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.