மலேஷிய விமானத்தில் 295 பேரும் உயிரிழப்பு, யுக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு-

malaysia vimaanaththail (4)நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் நேற்று ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரழந்துள்ளனர். இந்நிலையில் தமது விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென மலேஷிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமது விமானத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் கோரியுள்ளார் மேற்படி எம் எச் 17 என்ற போயிங் 777 ரக மலேஷிய விமானம் யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையானது ஒரு தீவிரவாத செயல் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதேவேளை விமானம் யுக்ரைன் படையினராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். குறித்த விமானத்தில் 154 நெதர்லாந்து நாட்டவர்களும் 27 அவுஸ்திரேலியர்களும் 23 மலேஷியர்களும் 11 இந்தோனிஷியர்களும் பயணித்துள்ளதாகவும், மேலும் 14 ஐரோப்பியர்கள் 3 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய பிரஜையும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை 100 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரைனிய அதிகாரிகள் தெரவிக்கின்றனர்

யுக்ரைனின் கிழக்கு வான் பரப்பை விட்டு விலகி பயணிக்குமாறு அறிவுறுத்தல்-

ukrain kilakku vaan parappaiயுக்ரைனின் கிழக்கு வான் பிராந்தியத்திலிருந்து விலகி பயணத்தை முன்னெடுக்குமாறு இலங்கை விமான சேவைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி கூறியுள்ளார். ஆயினும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இலங்கை விமானங்கள் அந்த வான் பரப்பைவிட்டு விலகியே பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். யுக்ரைனின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தமாகவே ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த வான் பரப்பிலிருந்து விலகி பயணிப்பதற்கான வரையறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச். 17 என்ற பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் 283 பயணிகளும், 15 பணியாளர்களும் இருந்ததுடன், இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசே தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கு! யாழில் போராட்டம்-

dgfgfgfgfdfdfdCaptureயாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 11 மணியளவில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் ஊரி பிரதேசத்தினை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை கடற்படை சிப்பாய் ஒருவர், 11 தினங்களாக பாடசாலை நேரத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சி.சிவமோகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆ.ஆனைமுகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஆ.சிவதட்சணாமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டது. அதில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய கடற்படை சிப்பாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 07 கடற்படைவீரர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…..

இலங்கை இந்திய இராணுவ தளபதிகளிடையே சந்திப்பு-

இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் இந்திய விமானப்படை தளபதி எயார் சீவ் மார்ஷல் அரூப் ரஹா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள, இந்திய விமானப்படை தளபதி எயார் சீவ் மார்ஷல் அரூப் ரஹா, இராணுவ தலைமையகத்தில் நேற்று இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் தயா ரத்நாயக்கவை சந்தித்துள்ளார். இதன்போது மேஜர் ஜெனரல் ஆர். ரத்னசிங்கத்தினால் இந்திய விமானப்படை தளபதி வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவத் தளபதி மற்றும் இந்திய விமானப்படை தளபதிக்கு இடையில் சிநேகப்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் -கனடா-

இலங்கையில் கருத்துச் சுதந்திரம், ஒன்றிணைதல் மற்றும் ஒழுங்கமைத்தல் சுதந்திரம் என்பவற்றுடன், சமூக விவகாரங்களில் பங்கேற்கும் உரிமை போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறான சுதந்திரங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கனடா கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என கனடாவின் வெளிவிவகார நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் மேலும் தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் -முழுமையாக அமுலாக்க வேண்டும் – இந்தியா-

13ம் திருத்தச் சட்டம் விரைவாகவும், முழுமையாகவும் அமுலாக்கப்பட வேண்டும் என்பதை, இலங்கைக்கு தொடர்ந்து தாம் வலியுறுத்தி வருவதாக இந்திய வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான மாநில அமைச்சர் வீ.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்திய ராஜ்யசபாவில் எழுத்து மூல அறிக்கை ஒன்றை தாக்கல்செய்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அத்துடன் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாகவும், விரைவாகவும் அமுலாக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கம் இலங்கையுடன் பேசிவருகிறது என்றார் அவர்.

காணாமல்போனோர் விடயமாக சர்வதேச நிபுணர் குழு நியமனம்-

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, புகழ்பெற்ற சர்வதேச நிபுணர்கள் மூவர் கொண்ட குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இக்குழுவில், நிபுணர்களான சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் கிரேன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதில்லை-ஆஸி-

அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் உயர்நீதிமன்றில் வழக்கத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகள் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் கிறிஸ்மஸ் தீவு கடற்பரப்பைச் சென்றடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் கொண்ட படகு அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்-

inthiyaavil ilankai akathikalஇந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடுக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10,340 பேர், மியான்மரை சேர்ந்த 4,621பேர், இலங்கையைச் சேர்ந்த 1,02,241பேர், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட 1,01,148பேர் உள்ளனர். அகதிகள் என கூறப்படும் வெளிநாட்டினரை கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு 2011 டிசெம்பர் 29ஆம் திகதி மத்திய அரசு ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகள் மூலம் பாதுகாப்பு சரிபார்ப்புக்கு பின் சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு நீண்டகால விசா வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட முடியும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீண்டகால விசா அனுமதி பெற்ற வெளிநாட்டவர் தனியார் துறையில் வேலைசெய்யவோ அல்லது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலவோ அனுமதிக்கப்படுவர் என்று அதில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.