யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம், கண்ணீர்ப் புகை பிரயோகம்-
யாழ். நீதிமன்ற வாளகத்தில் ஏற்பட்ட பதற்றநிலை பின்னர் சீர்செய்யப்பட்டுள்ளது. கண்ணீர் புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில் பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் பதற்றநிலை தணிந்ததாக கூறப்படுகின்றது. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸாரும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது யாழ், நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வாகனங்கள் சிலவும் உடைக்கப்பட்டுள்ளன இதேவேளை கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்படுவது தெரிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. தோடர்ந்து படுகொலை குற்றவாளிகளை யாழ். நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அங்கு வீதியின் அருகில் கூடியிருந்தவர்கள் நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர். தோடர்ந்து விஷேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 20ற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் 50 பேர்வரை கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், கைதுகளின்போது 36 மோட்டார் சைக்கிள்கள், 27 சைக்கிள்கள், 2 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று வட மாகாணம் முழுவதிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்படுட்டுள்ளன. தனியார் போக்குவரத்து பஸ்களும் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.