காணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு உருவாகும்-பரணகம-
காணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, பரணகம மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘உறவினர்களின் சாட்சிய விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் கையளிப்பேன். அங்கு அதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளை அவ்வமைச்சு முன்னெடுக்கும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது-
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 8 ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை மெகசின் சிறைச்சாலைளில் 63பேர் நேற்று இவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 2 கைதிகள் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் கைதிகள் முதல் முறையாக இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யோசித்த உள்ளிட்ட நால்வர் மனுத் தாக்கல்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். தம்மைக் கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை போன்றவற்றுக்கு எதிராகவே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் பெயரிடப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் யோசித்த உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதால், இக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உத்தரவிட வேண்டும் என, அவர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லசந்த படுகொலை தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை-
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 40 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் கேர்ணல், மேஜர், கப்டன், சார்ஜண்ட், கோப்ரல் மற்றும் சாதாரண சிப்பாய்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உள்ளடங்குகின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பணிபுரிபவர்கள் எனவும் கூறப்படுகின்றது. லசந்தவின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையிலேயே மேற்கூறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருகின்றன எனவும், இவர்களிடமிருந்து கிடைத்த மிக முக்கிய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவப் பிரதானியொருவரிடமும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன் பிரதான சூத்திரதாரி கைதாவார் எனவும் கூறப்படுகிறது.
மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது-
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேலும் இரு சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த யாழ் சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பில் இதுவரை 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் இரு சந்தேகநபர்கள் தற்போது கைதாகியுள்ளனர்.
கொழும்பில் திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-
கொழும்பு திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். வகுப்பு தடைக்குள்ளான மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்கி அவர்களுக்கும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதேவேளை, பல்கலைக்கழகமானது இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம். எமது கோரிக்கைகளை உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்த்து வைக்காவிடின், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!