கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டில் கற்றுவரும் தலவாக்கலையைச் சேர்ந்த சின்னதம்பி மோகன்ராஜ் என்னும் மாணவன், வௌ்ளிக்கிழமை (10) முதல் காணாமல்போயுள்ளாரென, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர், விடுதிக்குத் திரும்பாத நிலையில், சக மாணவர்களால், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், இறுதியாக அவரது அலைபேசி இணைப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகில் செயற்பட்டுள்ளமையால், கல்லடிப் பாலம் அருகிலும் கடற்படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாணவன்,  ஹோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தைக் கற்று, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போன மாணவனின் பெற்றோர், ஹோல்புறுக் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மாணவன் தொடர்பான தகவல் தெரிந்தால் அக்கரப்பத்தனை, மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களுக்கும் 0775013587 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக மாணவனின் தந்தைக்கும் அறியத் தருமாறும்  பொலிஸார் கேட்டுள்ளனர்.