உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில் தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளினால் இலக்குவைக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தில் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த விசேட வழிபாட்டில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.