தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், குறித்த கப்பல் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு COVID தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியம் எனவும் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR பரிசோதனை அறிக்கையை பயணிகள் வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.