இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர். எஸ் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்க அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் முன்மொழிந்த தீர்மானம் எதிர்க்கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் கோரிக்கை குறித்து, கொழும்பிலுள்ள அலுவலகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான தமிழக அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய, நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழக தலைமைச் செயலாளருக்கு தமிழக அரசாங்கம் உத்தரவிட முடியும் என்று ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.